பொரளை பள்ளிவாசல் தாக்குதல் பற்றி ஓர் பார்வை!

கொழும்பு, பொரளை முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் ; குட்டையைக் குழப்பி விடுவோரை விட குழம்பிய குட்டையில்  மீன்பிடிக்க முயற்சிப்பவர்கள் விடயத்தி்ல் அதிக கவனம் தேவை! 

கொழும்பு, பொரளையில் உள்ள பிரதான முஸ்லிம் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அண்மையில்இடம்பெற்றிருந்தது. இது கவலைக்குரியதும் வேதனையானதுமான விடயம்தான். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் முன்னைய காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு கிடைத்த முக்கியத்துவமும் பரபரப்பும் இதற்கு கிடைக்கவில்லை. .

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றும் வரும் நிலையில் அவர்கள் இது தொடர்பில் சில கருத்துகளையும் தெரிவிக்க தவறவில்லை. பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைந்து அதிகளவில் உள்ளேயே காணப்பட்டதாகவும் சிலவேளைகளில் இது தனிப்பட்ட விடயமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த பள்ளிவாசல் மீது இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள், மற்றும் அமைப்புகள், சமயப் பிரமுகர்கள் தங்களது வேதனையையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் இதனை ஒரு சீரியஸான விடயமாகவே பெரிதளவில் தொடர்ச்சியாக மு்ன்னெடுத்துச் செல்லவிவ்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதன் பின்னணிகள், உண்மைகளை அறிந்து கொண்டமை காரணமாகவே இவ்வாறு அவர்கள் இந்த விடயத்தில் அமைதி காத்திருக்கவும் கூடும் என்றும் கூறலாம். கொழும்பு நகரப் பகுதியிலுள்ள இந்தப் பள்ளிவாசலின் சில கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடியவர்களின் நோக்கம் மத, சமய ரீதியிலான நிந்தனையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததா என்ற விடயமும் அலசப்பட வேண்டும்.. பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான“தனகிப்“ பார்த்தல்களும் இடம்பெறும் சாத்தியம் இன்றுள்ளது

இருப்பினும் இந்த விடயம் தங்களுக்கு கிடைத்த மாபெரிய வாய்க்கு அரிசி என்ற தூக்கிப் பிடித்தலுடன் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் உசிப்பிப் பார்த்தார்கள். விசேடமாக, முன்னாள் ஆட்சியாளர்களின் ஆதரவு கொண்ட முஸ்லிம் முக்கியஸ்தர்களில் சிலர் இந்த விடயத்தை மிக மோசமாக சித்திரித்து நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை அநியாயங்கள் நிகழ்கின்றன. 

அதனைப் பார்த்துக் கொண்டு இன்றைய அரசின் முஸ்லிம் அமைச்சர்களும் முக்கிய முஸ்லிம் பிரமுகர்களும் மௌனமாக இருக்கின்றனர் என்றெல்லாம் தூண்டிப் பார்த்தும் அது பெரிதாக வேகவில்லை என்றுதான் கூறவேண்டும்.

மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களின் போது கிளர்ந்தெழுந்த முஸ்லிம் தலைமைகள் இந்த விடயத்தில் இன்று மௌனம் சாதிக்கின்றனரே அது ஏன் என்றெல்லாம் இவர்கள் கேள்விகளைத் தொடுத்திருந்தனர். 

கடந்த காலத்தில் அரச அனுசரணையின் நேரடி வழிகாட்டலின் கீழேயே முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பள்ளிவாசல்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும்ஆட்டியவர்களால் அவற்றுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியாத நிலைமையே காணப்பட்டது. 

அப்போதைய ஜனாதிபதிக்கு தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டிக் கொண்டிருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்களை அடக்கி வாசித்து அவற்றினைச் சாந்தபப்டுத்த முயற்சித்த அன்றைய நிலைமைகளை முஸ்லிம் சமூகம் மறந்து விடக் கூடாது. 

கண்ணுக்கு முன்பாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த கடந்த காலத்தில் அப்படி ஒரு தாக்குதலும் இடம்பெறவில்லை என்றும் கண்டியிலிருந்தும் தெஹிவளையிலிருந்தும் ஒலித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் நன்கு இனங்கண்டுள்ளது.

ஆனால், இன்று பொரளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் இவ்வாறானவர்கள் குரல் கொடுக்க முயற்சிப்பது சமூக நோக்கம் கொண்டதான விடயமாக பார்க்க முடியாது. வெறும் அரசியலை முன்னிறுத்தியே இவ்வாறு செயற்படுகின்றனர்.

பொரளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையை தோற்கடித்த பங்கு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் உள்ளது. பொதுபல சேனா உட்படலான சில சிங்கள பௌத்த அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தமை, மற்றும் இவ்வாறான அமைப்புகளினால் முஸ்லிம்களின் பொருளாதாரம். 

வாழ்விடங்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, முஸ்லிம் உயிர்கள் சில பறிக்கப்பட்டமை, போன்ற காரணங்களினால் சலிப்புற்ற முஸ்லிம் சமூகம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடித்தனர்.

இந்த நிலையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதனை நன்குணர்ந்து கொண்டு, இன்றைய ஆட்சியாளர்களை தோற்கடிக்கும் வகையிலும் முஸ்லிம்களின் ஆதரைவை அரசு இழக்கச் செய்வதற்காகவும் இவ்வாறான சம்பவங்களில் ஏதாவது ஒரு தரப்பு ஈடுபட்டிருக்கவும் முடியும் அல்லவா? பள்ளிவாசலுக்கு கல்லை எறியச் செய்து விட்டு முஸ்லிம்களின் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிரானதொரு மன நிலையை முஸ்லிம்களிடம் தோற்றுவிக்கும் நோக்கிலும் தோற்றுப் போனவர்களாலும் அவர்களில் தொங்கி முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் இவ்வாறானதொரு சதிச் செயலை பிறர் மூலம் தூண்டி விடவும் முடியும்தானே? 

எனவே இன்றைய நல்லாட்சியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது எவரும் உடனடியாகவே இனவாதத்தின் மீது பழியைச் சுமத்தி விட முடியாது. விரும்பத்தகாத இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நிலைமைகளை நன்கு அறிந்து பலமுறை சிந்தித்தே செயற்பட வேண்டும். குட்டையைக் குழப்பி விடுவோரை விட குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிப்பவர்கள் விடயத்தி்ல் நிதானம், கவனம் அதிகம் தேவை.

இதேவேளை, பொரளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமையை சிறயதொரு விடயமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பில் விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் அவசியம். 

ஆறிய கஞ்சி பழைய கஞ்சி என்ற நிலையில் இதனைக் கைவிட்டால் இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெற அது வழியமைத்து விடும் என்பதனையும் இங்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இன்றைக்கு இலையை அறுப்பவன்நாளைக்கு குலையையே அறுத்துச் செல்லவும் முடியுமல்லவா? (நன்றி வீரகேசரி வாரவெளியீடு 07-06-2015)

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
(சிரேஷ்ட ஊடகவியலாளர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -