எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள புளோக் 'ஜே' கிழக்கு பிரிவில் அல்-மபாஸா பள்ளிவாசலிக்கு முன்பாக செல்லும் வீதியிலுள்ள பாலம் உடைந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவடுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியிலுள்ள பாலம் உடைந்துள்ளதன் காரணமாக மபாஸா பள்ளிவால், மபாஸா பாடசாலை என்பவற்றிற்கு செல்லும் பாடசாலை மாணவர்கள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் போன்றோர் நாளாந்தம் பல்வேறு அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாது இரவு வேளையில் இவ்வீதியில் பயணிக்கும் துவிச்சக்கர வண்டி, மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களும் குழியில் விழுவதன் காரணமாக நாளாந்தம் சேதங்கள் ஏற்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
புனித ரமழான் மாதத்தில் இரவு நேர வழிபாடுகளுக்காக செல்லும் பெண்களும் இப்பாலத்தினை கடந்து செல்லுவதற்கு கஸ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வீதியின் அவலநிலை தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவிடயத்தில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சிக்; காலத்திலாவது இப்பாலத்தினை சீர்செய்து பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அவல நிலையைப் போக்க உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.(ந)



