அத்துரலிய ரத்ன தேரர் இரட்டை வாக்குச் சீட்டுக்கு கொள்கை அளவில் இணக்கம்!

எஸ்.அஷ்ரப்கான்-

நேற்று (22.06.2015) திங்கட் கிழமை கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு குழுவினால் இரட்டை வாக்கு தொடர்பாக சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்களை 20வது திருத்தச் சட்டத்தை தயாரிப்பதில் பின்புலமாக இருந்து செயற்படுகின்ற விசேட நிபுணர் குழுவினருக்கு தெளிவுபடுத்துவதற்கான ஒரு கூட்டம் இலங்கை மன்றக் கலலுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் இரட்டை வாக்குரிமை ஏன் கோரப்படுகின்றது என்பது தொடர்பாக குறித்த விசேட நிபுணர்களுக்கு விளக்கமளிக்கின்ற பொறுப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இங்கு அது விடமாக அவர் உரையாற்றும்போது,

இரட்டை வாக்கு முறைகளுக்கான அடிப்படை அம்சமாக பல விடயங்களை சுட்டிக்காட்டினார். அதில் முதலாவது இங்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தப் பிரேரணை விகிதாசார முறையையே பிரதான அம்சமாகக் கொண்டு தொகுதிவாரித் தேர்தல் முறையை விகிதாசார முறைக்குள் ஒரு உப அம்சமாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதான அம்சமான விகிதாசார முறைக்கு வாக்களிப்பதற்காக வாக்கு வழங்கப்படாமல் உப அம்சமான தொகுதி முறையில் அழிக்கப்படுகின்ற வாக்குகளைக் கொண்டு தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ததன் பின் அதே வாக்குரிமைகளைப் பாவித்து விகிதாசாரப் பிரதிநிதித்துவக் கணிப்பீட்டையும் செய்ய முற்படுவது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்பினார். இது ஒரு பாட்டன் தன் பேரப்பிள்ளைகளை தன்னுடைய மகனுடைய பிள்ளைகளாக அடையாளம் காட்டுகின்ற அதேவேளை தன்னுடைய பிள்ளைகளாகவும் அடையாளம் காட்ட முற்படுவது போன்றதாகும்.

அவர் அங்கு மேலும் வாதிடுகையில், வெளிப்படையில் சிறுபான்மைக் கட்சிகள் இரட்டை வாக்குகள் கோருவதுபோல் தோற்றினாலும் யதார்த்தத்தில் விகிதாசார முறைக்காக இதுவரை வழங்கப்பட்டு இருக்கின்ற வாக்கை புதிய திருத்தத்தில் நீங்கள் இல்லாமலாக்க செய்ய வேண்டாம். ஏனெனில் புதிய முறையும் அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவத்தையே கொண்டிருக்கின்றது. மேலதிகமாக விருப்பத் தெரிவு வாக்குகளை நீக்குவதற்காகவும் தொகுதிக்கொரு பாராளுமன்ற உறுப்பினரை உறுதிப்படுத்துவதற்காகவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தினுள் உப அம்சமாக தொகுதிவாரித் தேர்தல் முறையை கொண்டுவந்து அதற்காக நீங்கள் ஒரு வாக்கை அறிமுகப்படுத்துவதனால்தான் அது இரட்டை வாக்காக மாறுகின்றது. எனவே நாம் கோருவது இன்று இருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைக்கான வாக்கினை நீக்க வேண்டாம் என்பது மாத்திரமே, எனவே நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தும் வாக்கிளையும் சேர்த்துத்தான் அது இரட்டை வாக்காக மாறுகின்றதே தவிர நாங்களாக இரட்டை வாக்கினை கோரவில்லை.

மேலும் வை.எல்.எஸ். ஹமீட் குறிப்பிடும்போது,

ஒவ்வொரு கட்சியும் எத்தனை ஆசனங்களைப் பெறுகின்றார்கள் என்பது புதிய உத்தேச திருத்தத்திலும் விகிதாசார முறையின் கீழே கணக்கிடப்படுகின்றது. அவ்வாறு பெறுகின்ற ஆசனங்களுக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது இன்று விருப்பத் தெரிவு வாக்குகளைக் கொண்டு தெரிவு செய்யப்படுகின்றார்கள். புதிய முறையின் கீழ் தொகுதிகளில் அளிக்கப்படும் வாக்குகளின் ஊடாக தெரிவு செய்யப்படுகின்றார்கள். எனவே தொகுதியில் அளிக்கப்படுகின்ற வாக்கும் ஒரு விருப்பத் தெரிவு வாக்கே தவிர பிரதான வாக்கு அல்ல. 77 ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்தது முழுக்க முழுக்க தொகுதிவாரி தேர்தல் முறை, அந்த முறையின் கீழ் தொகுதியில் அளிக்கப்படுகின்ற வாக்கு பிரதான வாக்காகும். ஆனால் இன்று பிரேரிக்கப்பட்டிருப்பது விகிதாசாரத்தினுள் தொகுதிவாரித் தேர்தல் முறையாகும். இந்த வித்தியாசத்தை விசேட நிபுணர்கள் குழுவாகிய நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தொகுதியில் அளிக்கப்படுகின்ற வாக்கு யதார்த்தத்தில் விருப்பு வாக்கு என்றால் இலங்கைச் சட்டத்தில் விருப்பு வாக்கை ஒருபோதும் பிரதான வாக்காக கருத முடியாது. மறுவார்த்தையில் சொன்னால் விருப்பு வாக்கு ஒரு வாக்கு அல்ல. அதனால்தான் விருப்பு வாக்குகளைக் கொண்டு ஆசனங்களின் எண்ணிக்கையை ஒருபோதும் தீர்மானிப்பதில்லை. பிரதான வாக்கின் அடிப்படையில் பெற்ற ஆசனங்களுக்குள் அங்கத்தவர்களை அடையாளப்படுத்தத்தான் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுகிறது.

எனவே பிரதான வாக்கை நீக்கிவிட்டு தொகுதியில் வழங்கப்படும் விருப்பு வாக்கை வருப்பு வாக்காகவும் ஒரு தடவை பயன்படுத்திவிட்டு அதனை பிரதான வாக்காகவும் பயன்படுத்த பிரேரித்திருப்பது இலங்கை அரசியலமைப்பின் 3 வது உறுப்புரையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற மக்களின் வாக்குரிமையை கேலிக் கூத்தாக்குகின்ற, மீறுகின்ற ஒரு செயலாக அமைகின்றது. எனவேதான், விகிதாசாரத் தேர்தலுக்குரிய பிரதான வாக்கை நாங்கள் கோருகின்றோம். என்றும் அவர்களுக்கு சுட்டிக்காட்டினார். 

அதேவேளை இதனால் முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழ் மக்களின் ஆசனங்கள் எவ்வாறு மூன்றில் ஒரு பங்காக குறையும். சிறிய கட்சிகள் எவ்வாறு அரசியல் அரங்கிலிருந்து மறையும் என்பன போன்றவை தொடர்பான விடயங்களை தர்க்க ரீதியாக முன்வைத்தார். இந்நிபுணர் குழுவினரால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் வை.எல்.எஸ். ஹமீட் விடையளித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அத்துரலிய ரத்ன தேரர் இரட்டை வாக்கு முறை ஒரு சிறிய கட்சி என்ற வகையில் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் சாதகமானது என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் ஏனைய கட்சிகள் உடன்பட்டால் ஹெல உறுமயவும் உடன் படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தினைத் தொடர்ந்து குறித்த நிபுணர் குழு தேர்தல் ஆணையாளருடனும் கலந்தாலோசித்துவிட்டு இரட்டை வாக்கின் சாதகத் தன்மை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை வழங்கப்போவதாக தெரிவித்திருப்பதாகவும் அறிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -