இக்பால் அலி-
கம்பஹா மாட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுடைய உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்ளுக்கென தனிப் பிரதிநிதித்துவம் இடம்பெறவேண்டும்.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு நான் 23,123 வாக்குகளைப் பெற்றேன். ஆனால் நாம் கடந்த பொதுத் தேர்தலில் பல கட்சிகளாகப் பிரிந்து நின்று எம்முடைய பிரதிநித்துவத்தை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடந்த காலங்களில் விட்ட தவறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் விடக் கூடாது. .இம்முறை இவ்வாறான நடவடிக்கைளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கட்சிபேதங்களை மறந்து ஒரு பொது வேட்பாளருக்கு வாக்குகள் அளிப்போமானால் நிச்சயம் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் தெரிவித்தார்.
நீர்கொழும்பு மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ஹறீமின் அலுவலகத்தில் மலசல கூடத்திற்கென கதவுக்ள வழங்கும் நிகழ்வு 20-06-2015 நடைபெற்றது அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் அங்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
எமக்கென ஒரு தனியான முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இருக்கும் போதுதான் எங்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் நேரடியாகச் சென்று கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது எமது முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளே எவ்வகையான பிரச்சினைகள் உள்ளன என நன்கு அறிந்து எமது காலடிக்கே தேடி வந்து உதவிகள் புரிவார்கள்.
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளினால் எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் வளப் பங்கீடுகளை பகிர்ந்தளிப்பதில் பாரபட்சம் காட்டி வருவதையே நாம் தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம்.
ஆனால் எவ்வாறு எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறுவதற்கு எல்லோரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட்டமோ அவ்வாறு பொதுத் தேர்தலிலும் ஒரு முஸ்லிம் பிரதிநித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள ஒன்றுபட வேண்டும். இதுவே எமது கட்டாயத் தேவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் இஹ்சான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.(ந)


