தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான எழிலன் என்ற சசிதரனை இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறு தாம் கூறியதாக வௌியான தகவலை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மறுத்துள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் கடந்த வியாழனன்று சாட்சியமளித்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
அத்துடன் முள்ளிவாய்க்காலில் வைத்து கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இரவு சுமார் 08.00 மணிளவில், கனிமொழியுடன் கலந்துரையாடிய பின்னரே, தனது கணவரான எழிலன், படையினரிடம் சரணடையத் தீர்மானித்ததாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை நான் கூறுவது இது முதல் முறை அல்ல எனவும் மறுபக்கத்தில் இருந்து இதுவரை இதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் கூறிய அவர், கருணாநிதி மற்றும் கனிமொழி இது குறித்த உண்மைகளை உலகுக்குக் கூற இதுவே சரியான நேரம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சசிதரன் யாரென்றே எனக்குத் தெரியாது, மேலும் அவர் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் இல்லை. அத்துடன் அவருடன் நான் செயற்கைக் கோள் தொலைபேசியில் பேசி சரணடையுமாறு கூறுவதாக சொல்வது முற்றிலும் தவறு என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய அல்லது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஒருவரை சரணடையுமாறு கோரும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.(ந)
