சாய்ந்தமருது மக்களின் நகர சபை கோரிக்கை நியாயமானதே :இதைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு முகாவுக்கே உண்டு

மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்கு மாகாணத்தில் பழைமை வாய்ந்த கிராமங்களில் சாய்ந்தமருது முக்கிய கிராமமாகும். இக்கிராம மக்கள் தங்களைத் தாங்களே ஆழக் கூடிய மிகக் குறைந்த ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட நகர சபையைக் கோரி நிற்பது நியாயமானதே சனத்தொகை அதிகரிப்பு, வேலைப்பழு அதிகரிப்பு, வேலைகள் இழுத்தடிப்பு என்பவற்றிற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள் நகர சபையைக் கோருவதில் தவறேதுமிருக்க முடியாது.

இந்த நிலையில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்,வர்த்தக சங்கம்,மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சாய்ந்தமருது பொது அமைப்புக்களின் சம்மேளனம் கடந்த திங்கள் கிழமை (15-06-2015)ஏற்பாடு செய்த வித்தியாசமான ஜனனாயகரீதியிலான முழுநாள் ஹர்த்தால்,கடையடைப்பு,ஆர்ப்பாட்டப் பேரணி,விசேட தொழுகை, துஆப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றுள்ளது.

அதுமாத்திரமன்றி உள்ளுராட்;சி சபைக்கான பிரகடனம் எத்தவிதப் பிரச்சினைகளுமின்றி பள்ளிவாசலுக்குள்ளேயே வெளியிடப்பட்டு மக்களின் ஏகோபித்த அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதை மக்கள் பெரும் தொகையாகக் கலந்து கொண்டதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிகார எல்லைக்குள் அமைந்திருக்கின்ற சாய்ந்;தமருது மக்களின் நகரசபைக் கோரிக்கையை வென்று கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமே உண்டு. 

ஓன்பது சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இக்கிராமத்தில் 2001ம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டது.இங்கு 17 கிராம உத்தயோகத்;தர் பிரிவுகளில் 7500 தனி முஸ்;லிம் குடும்பங்களைச் சேர்ந்த 29825 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 18720 பேர் வாக்களிக்;கும் தகுதி பெற்றவர்கள். கல்முனைத் தொகுதியிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகளை வழங்குகின்ற கிராமம் சாய்ந்தமருதுதான் என்று அடித்துச் சொல்ல முடியும்.

இங்கு பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலுடன் மேலும் நான்கு ஜூம்ஆ பள்ளி வாசல்களும்,12 சிறிய பள்ளிவாசல்களும் அமைந்துள்ளன. இவற்றுடன் ஒன்பது பாடசாலைகள் இயங்குகின்றன இவற்றில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.

மேலும் ஒரு மாவட்ட வைத்தியசாலை,ஒரு பிரதான தபால் நிலையம் இரண்டு உப தபால் நிலையங்கள்,பிரதான நூலகம் ஒன்றும் உப நூலகம் ஒன்றும் இயங்கிவருகின்றன.இங்கு பிரதான சந்தையுடன் ஐநூற்றுக்கும் மேற்பட்ட வர்தத்க நிலையங்களும் வங்கிகளும் இயங்குகின்றன.அத்துடன் பல விளையாட்டுக் கழகங்களும்,சமூக சேவை நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. 

தற்போதய அரசியல் அதிகாரத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்,.கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீட்,மாநகரசபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஏ.பஷீர்,ஏ.நிஸார்தீன் ஆகியோருடன் சாய்ந்தமருதில் திருமணம் முடித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீPPஸூம் அடங்குகின்றார். 

இந்த நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அப்போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கல்முனை மாநகர சபையின் முன்ளாள் மேயர் சிராஸ் மீராசாகிப் மற்றும் சாய்ந்தமருது மக்களுக்கும் வழங்கிய உறுதி மொழிக்கமைய நகரசபை வழங்க ஆயத்தமாகியிருந்தார்.

அதன் அடிப்படையில் கல்முனைக்குடி மக்களுக்கு மாநகர சபை இருக்கத்தக்க்; சாய்ந்தமருது மக்களுக்கு தனியான நகரசபையும், கல்முனை தமிழ் மக்களுக்கு தனியான நகர சபையும்,மருதமுனை மக்களுக்கு தனியான நகர சபையும் 2015.10.17ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் வர்த்தமானி அறிவித்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்;லிம் காங்கிரஸ் கட்சியினால் தேர்தல் அணையாளருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மக்களின் நகர சபைக் கனவு கலைந்தது. 

ஆகவே கல்முனைத் தொகுதி மக்களுக்காக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே அதை மீண்டும் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.இல்லையேல் இன்னும் ஒரு தேர்தலுக்கு முகம்கொடுக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டியேற்படும் என்பதில் சந்தேகமில்லை.

சாய்ந்தமருதுக்கான நகர சபைக் கோரிக்கை இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட விடையமல்ல இது பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட விடையமாகும் ஆனாலும் காலத்திற்குக் காலம் தேர்தல் வருகின்றபோது அரசியல் வாதிகள் இந்த விடையத்தைத் தூக்கிப்பிடித்து அரசியல் இலாபமடைந்திருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்பொது சாய்ந்தமருது மக்கள் விழித்தெழுந்திருக்கின்றார்கள்.இதன் விளைவாக கடந்த 2015.03.10ம்; திகதி சாய்ந்தமருது பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஸ்ரீலங்கா முஸ்;லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீமை சந்தித்து இவ்விடையம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது.இந்தக் கலந்துரையாடலின் விளைவாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கருஜெயசூரியாவை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக அமைச்சர் ஹக்கீம் தலைமையில் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும்; பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோருடன் ஸ்ரீலங்கா முஸ்;லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2015.03.22ம் திகதி அமைச்சர் கருஜெயசூரியாவைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஹக்கீம் தலைமையலான குழுவினர் முன் வைத்த சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கருஜெயசூரியா விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படும் எனத் தெரிவித்ததுடன் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு அவரின் செயலாளரைப் பணித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கருஜெயசூரியாவின் செயலாளர் சென்ற குழுவினரிடம் பிரதேச செயலாளர்,மாவட்டச் செயலாளர் உடாக கோரிக்கைக் கடிதம்,கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம்,கிழக்கு மாகாண சபையின் சிபாரிசுக் கடிதம் என்பவற்றை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் பிரதேச செயலாளர்,மாவட்டச் செயலாளர் உடாக கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலினால் தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்பட்டு அது சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு மாகாண சபைத் தவிசாளரினால் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.இதே வேளை கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம் இன்னும் பெறப்படவில்லை.

இந்நிலையில் சாய்ந்தமருதில் கல்வியலாளர்கள், பொறியிலாளர்கள், டாக்டர்கள்,துறைசார்ந்தோர்கள் ஒன்றிணைந்து தொழில் சார்தகைமையாளர்கள் அமைப்பொன்றை உருவாக்கியுள்ளனர் இந்த அமைப்பும் சாய்ந்தமருதக்கான நகர சபையைப் பெறுவதற்கு முன்நின்று செயற்படுகின்ற அணியுடன் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

சாய்ந்தமருது உள்ளுராட்;சி மன்றக் கோரிக்கை தொடர்பாக 2015.06.15ம் திகதி இடம் பெற்ற ஹர்த்தால் நிகழ்வின் போது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல் வாசித்து வெளியிட்ட பிரகடனத்தை வாசகர்களின் பார்வைக்குத் தருவது பொருத்தமாகும் என்பதால் இணைத்துள்ளேன். 

பிரகடனம்
எமது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் சார்பில் வலுவாக முன்னெடுத்துச் செல்கின்ற எமது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையினருக்கு இந்த மக்கள் பிரகடனம் நன்றியையையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றது.

எமது பள்ளிவாசலின் இந்த முன்னெடுப்பை மழுங்கடிக்கவோ ஏமாற்றித் தோற்கடிப்பதற்கோ நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இந்த மக்கள் பிரகடனம் உறுதி செய்கிறது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்காக எமது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையினர் முன்னெடுக்கும் காத்திரமான நடவடிக்கைகளுக்கு மக்களாகிய நாம் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இந்த மக்கள் பிரகடனம் உறுதி செய்கிறது..

கௌரவ உள்ளூராட்சி அமைச்சரினாலும் எமது அரசியல் தலைமைகளினாலும் வாக்குறுதியளிக்கப்பட்ட எமக்கான உள்ளூராட்சி சபையை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக வத்தமானிப் பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த மக்கள் பிரகடனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற போது எமது சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு மாத்திரம் உள்ளூராட்சி சபையொன்று உருவாக்கப்படாமல் பாரபட்சம் காட்டப் பட்டு வருவதையிட்டு இந்த மக்கள் பிரகடனம் பெரும் கவலையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

எல்லைப் பிரச்சினை எதுவுமில்லாத எமது ஊருக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தினை ஏற்படுத்தாமல் விடுவதற்கு எந்தவொரு போலிக் காரணத்தையும் முன்வைக்க முடியாது என்பதை எமது அரசியல் தலைமைகளுக்கு இந்த மக்கள் பிரகடனம் மிகவும் ஆனித்தரமாக சொல்லிக் கொள்கிறது. 

இன்றைய இந்த அமைதிப் போராட்டமும் துஆப் பிரார்த்தனையும் ஆரம்பம் மட்டுமே. எமது கோரிக்கை தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்படுமானால் எமது போராட்டம் வேறு வடிவங்களில் விஸ்பரூபம் பெறும் என்பதை இந்த மக்கள் பிரகடனம் பறைசாற்றுகிறது.என அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டது.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை தொடர்பில் இன்னம் நிறைய விடையங்கள் உள்ளன இருந்த போதிலும் ஒரு பக்கக்கட்டுரைக்குள் எல்லாவிடையங்களையும் சொல்லி விடமுடியாது என்பதால் சுருக்கவேண்டியதாயிற்று. அடுத்த கட்டுரையில் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை தொடர்பில் யார் முட்டுக்கட்டையாக இரக்கின்றார்கள் இதில் அரசியல் விளையாட்டு என்ன என்பது பற்றிய விரிவான தகவல்களுடன் சந்திப்போம்.  (நன்றி விடி வெள்ளி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -