மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாற்குட பவனி மற்றும் 108 சங்காபிஷேக நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
பாற்குட பவனியானது வாகரை புளிங்கண்டலடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. இதன்போது நூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை தீர்ப்பதற்காக தலையில் பாற்குடமேந்தி வந்தனர்.
கடந்த சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதல், ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் மூன்று நாட்கள் நடைபெற்று வியாழக்கிழமை சங்காபிஷேகம் இடம்பெற்றது.
இப்பூசைகள் யாவும் சிவஸ்ரீ.செ.கு.உதயகுமாரக் குருக்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அத்தோடு ஆலய உற்சவம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை காலை தீர்த்த உற்சவத்துடன் அலங்கார உற்சவம் நிறைவடையவுள்ளது. இறுதி நாளன்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது.




