முஹம்மத் இஸார்க்-
பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளனர் .
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய பதவி வறிதாக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்குப் பதிலாக புதிய மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கு நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான மத்தியஸ்தம் செய்யும் திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய ஐந்து நாள் பயிற்சி நெறி நேற்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத்தியஸ்தம், மற்றும் மத்தியஸ்த பயிற்சிக்கான நிலையம் இந்த பயிற்சி நெறியை நடாத்துகின்றது .
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் அனுசரணையில் இயங்கும் மத்தியஸ்தம், மற்றும் மத்தியஸ்த பயிற்சிக்கான நிலைய வடகிழக்கு இணைப்பாளர் யசபால டி சில்வா தலைமையில் மத்தியஸ்த வளவாளர்களான எம்.எஸ்.ஆர்.ஜோன் பிலிப், எம்.ஏ.ஏ.ஹப்பார் ஆகியோர் இந்த பயிற்சி நெறியை நடத்தி வருகின்றனர் .
இப்பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவம் நேற்று காலை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார் தலைமையில் நடை பெற்ற போது பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிஸாம் சம்பிரதாய பூர்வமாக பயிற்சியை ஆரம்பித்து வைத்தார் .
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வட கிழக்கு தமிழ் மொழி மூல பயிற்சிக்கான இணைப்பாளர் யசபால டி சில்வா உரையாற்றுகையில்;
உலகளாவிய ரீதியில் மத்தியஸ்தம், பிணக்குகளை தீர்ப்பதாக இனங்காணப் பட்டுள்ளது. இந்த வகையில் ஐந்து நாட்கள் நடை பெறும் இந்த பயிற்சி நெறியில் பங்கு பற்றுவோர் ஒரு நாள் சமுகமளிக்காது விட்டாலும் மத்தியஸ்தர்களாக தெரிவு செய்யப்படமாட்டார்கள் என மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு கண்டிப்பான அறிவித்தல் விடுத்துள்ளது என்றார் .
இப்பயிற்சி நெறி நேற்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெற இருப்பது குறிப்பிட தக்கது.ந


