ஏ.சி.ஏ. மிஸ்காத்-
மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்தின் கீழ், வடமேல் மாகாணம், புத்தளம் கல்வி வலயத்தில் இருந்து சில ஆசிரியர்கள் வடமாகாணம், மன்னார் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். குறித்த ஆசிரியர்களை வடமேல் மாகாண கல்வி அமைச்சு, வடமாகாணத்திற்கு விடுவிப்தற்கு அனுமதி வழங்கியது.
இதனை ஏற்று, வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு வடமாகாண கல்வி அமைச்சிடம் பரிந்துரைசெய்து கடிதம் அனுப்பியது. அதற்கு வடமாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்ட ஆசிரியர்களை மன்னார் கல்வி வலயத்திற்கு விடுவிக்க வெற்றிடம் இல்லையெனவும், மடு கல்வி வலயத்தில் கடமையாற்ற சம்மதம் தெரிவிப்பின், வடமேல் மாகாணத்திலிருந்து வடமாகாணத்திற்கு பதிலாசிரியரின்றி ஏற்றுக்கொள்ள எதுவித ஆட்சேபனையும் இல்லை என பதில் அனுப்பியுள்ளது. (கடித இலக்கம் NP/3/1/5/TT/IN/106-112/2015)
எனினும் மேற்படி இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்த இவ் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறிவாழவே விண்ணப்பித்தனர்.
அத்தோடு மன்னார் கல்வி வலயத்திலேயே இவர்களது கிராமங்கள் அமைந்துள்ளதால், அப்பிரதேசத்திலேயே தொழிலை பாரம் எடுத்து, மீள் குடியேறி வாழமுடியும். இல்லாவிடின் இவர்கள் மீள் குடியேற்றம் தடைப்படும். மீண்டும் இவர்கள் சொந்த இடங்களில் குடியேறி வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
மேலும் இவர்களது கிராமம் அமைந்துள்ள, மன்னார் கல்வி வலயத்தின், முசலி கல்விக் கோட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான ஆளனிப் பற்றாக் குறை நிலவுகின்றமை குறிப்பிட தக்கது.sa
