மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு கடந்த காலத்தில் பிழையான வழியில் சென்று விட்டேன். அதனால் நான் துடித்துக் கொண்டிருக்கின்றேன். என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. எச்.பியசேன தெரிவித்தார்.
தேவையற்ற சமூகத்திற்கு சேவை செய்ய எத்தணித்து பாவத்தை அள்ளி தலையில் போட்டேன். இக் கர்மத்தை தொலைக்க கதிர்காமத்தில் நேர்த்தி வைக்கவுள்ளேன்.
அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ உள்ளிட்ட திறமை சித்திகளை பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில்,
பிழையை ஒரு சிலர் நன்மைக்காக செய்கின்றனர். ஆனால் பலர் பிழையை தொழிலாகவே செய்கின்றனர். ஒரு சமூகத்தில் உள்ள படிக்காதவர்கள், சமூக பற்றில்லாதவர்கள், இலட்சியமில்லாதவர்களே பயங்கரவாதிகள். அவர்களை போன்று செயற்படாதீர்கள்.
இன்று சமூகத்திற்கு நல்லவர்கள் தேவைப்படுகின்றனர். அரச அதிபராக கடமையாற்றும் அருமைநாயகம் போன்ற உயர் பதவிகளில் இருக்கும் நல்லவர்களை பெற்றது உங்கள் மண்.
ஆகவே அவரைப்போன்று உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என மனதில் கொள்ளுங்கள்.
சிறந்த கல்வி எங்கு கிடைக்கின்றதோ அதனை தேடி கற்றுக் கொள்ளுங்கள். விதை நன்றாக இருந்தாலும் விளைநிலம் சிறப்பாக இருந்தால்தான் சிறந்த விளைச்சலை பெறமுடியும். நீங்கள் சிறந்த மாணவர்களே ஆயினும் நீங்கள் கற்கும் இடம் சிறப்பாக இருந்தால் மாத்திரமே வெற்றி பெறமுடியும் என்பதை மனதில் கொண்டு செயற்படுங்கள் என்றார்.sa
