சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்காவின் மக்களை அணி திரட்டி வீதிக்கு இறங்குவோம்!

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றுத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல்

நேர்காணல் :- பி.எம்.எம்.ஏ.காதர்-

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் தேர்தல் வாக்குறுதியாகி விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் குறியாக ,ருக்கிறோம் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக வேண்டும் என்கிற சிந்தனையை மக்கள் மயப்படுத்தி அதனை வலுவான கோரிக்கையாக மாற்றியமைத்து, கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்காக சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் எனும் சிவில் அமைப்பு போராடி வருகின்றது. அதன் செயலாளராக தென்கிழக்கு பல்கலைகழக கணக்காய்வு உதவியாளர் கலீல் எஸ் முஹம்மத் பணியாற்றி வருகின்றார்.

இன்று சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை மிகவும் கூர்மையடைந்து அரசாங்கத்தின் கதவை தட்டி நிற்கின்ற நிலையில் அவ்விவகாரம் தொடர்பில் அவர் எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியை இங்கு தருகின்றோம்.

கேள்வி:- சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை தொடர்பாகவும் அதில் உங்களது மறுமலர்ச்சி மன்றத்தின் பின்னணி குறித்தும் கூறுங்கள்?

பதில்:- எமது மறுமலர்ச்சி மன்றமானது 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவெடுத்தது. அன்று முதல் இன்று வரை ஓரே ஒரு நோக்கத்துடன் இது செயற்பட்டு வருகின்றது. அதுதான் சாய்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை அடைந்து கொள்ளும் இலக்காகும்.

அன்று நானும் இன்னும் சில இளைஞர்களும் இணைந்து இந்த இயக்கத்தின் மூலம் இந்த கோரிக்கையை முன்னெடுத்த போது பல வாதப்பிரதிவாதங்கள் காணப்பட்டது. இதனை ஒரு சிலர் பிரிவினை கோஷமாக பார்த்தனர். இன்னும் சிலர் அரசியல் கண்கொண்டு நோக்கினர். அதனால் அப்போது இக்கருத்தை விதைப்பதில் நாம் பெரும் சவால்களை எதிர்கொண்டோம். 

அன்று இந்த விடயத்தினை முன்னேடுக்க தாம் முதலில் எங்களது சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு அழைப்பினை விடுத்தோம். ஆரம்பத்தில் முற்றாக நிராகரித்தார்கள். ஊர்ப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கலந்து பேசி தீர்மானிப்போம் என்று கூறி காலம் கடத்தப்பட்டது. பின்னாட்களில் அதாவது 2009, 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக்கோரிக்கை வலுபெற்றபோது பள்ளிவாசல் நிர்வாகம் அதனை கொள்கையளவில் ஏற்றுகொண்டது. எனினும் தாமும் ஆதரவு என்கிற ஒரு சிறிய ஒப்புதலை மாத்திரம் எமக்கு வழங்கி விட்டு அவர்கள் தள்ளி நின்றார்கள்.

கேள்வி:- அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

பதில்:- 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இக்கோரிக்கை சூடு பிடிக்கத் தொடங்கியது. இக்கோரிக்கை தொடர்பில் எமது சமூக அரசியல் தலைமைகளுள் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மாத்திரம் எம்மை அழைத்துப் பேசினார். எமது கோரிக்கையிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு நிச்சயம் நான் இந்த காரிக்கையை நிறைவேற்றித் தருவேன் என்று நம்பிக்கையூட்டினார்.என்ன ஆச்சரியம்? எவர் எமது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உறுதியளித்தாரோ, அவருக்கே அத்தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சி அமைச்சும்கிடைத்தது. 


கேள்வி:- அவ்வாறாயின் ஏன் உங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை? 

பதில்:- அதாஉல்லவுக்கு உள்ளூராட்சி அமைச்சு கிடைத்ததைத் தொடர்ந்து நாமும் உத்வேகம் பெற்றோம். அவரை எமது குழுவினர் அடிக்கடி சந்தித்து கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார். அதற்கு கல்முனைத் தொகுதியின் அரசியல் சூழலும் காரணமாக இருந்தது.

நாம் மனம் தளரவில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இரவு பகலாக பல்வேறு மட்டங்களிலும் விழிப்புக் கூட்டங்களையும் செயற்திட்டங்களையும் நடாத்தி வந்தோம். துண்டுப் பிரசுரம், போஸ்டர், ஆர்ப்பாட்டம், பேரணி என்று பல வடிவங்களில் போராட்டம் நகர்ந்து கொண்டிருந்தது.

அவ்வேளையில் 2011 செப்டம்பரில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு கல்முனை மாநகர சபைக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனால் எமது முயற்சிகளை ஓய்வுநிலைக்கு கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் போட்டியிட்ட ஒரு சிலர் எமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாக்கு வேட்டையாடியமையும் அதன் மூலம் பதவிகளை அலங்கரித்துக் கொண்டமையும் யாவரும்; அறிந்ததே. 

கேள்வி:- பின்னர் என்ன நடந்தது? பெரிய பள்ளிவாசலின் பங்களிப்பு என்ன?


தேர்தல் காலங்களில் இது பலமாக பேசப்படுவதும் தளர்வதுமாக இக்கோரிக்கை இருந்து வந்தது. நாம் ஒரே ஒரு விடயத்தில் குறியாக இருந்தோம். அதாவது இந்த கோரிக்கையை சாய்ந்தமருது ஊர் மக்களின் மொத்த அங்கீகாரம் பெற்ற ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்படும்போது இதில் மாற்று கருத்துக்கள், முரண்பாடுகள் வர முடியாது என்ற வலுவான கொள்கை உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் செயற்பட்டோம்.

அரசியல் தலைமைகள் தான் இதனை நிவர்த்திக்க வேண்டும். ஆனால் இதனை ஒரு அரசியல் கோசமாக முன்வைப்பதை நாம் விரும்பவில்லை. பள்ளிவாசல் முன்னெடுக்கும்போது அதற்கு பெறுமானம் மிகவும் கனதியாக இருக்கும் என்பதே எமது உளத்தூய்மையான எதிர்பார்ப்பாகும்அந்தவகையில் தற்போது அதனை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பொறுப்பேற்றிருப்பதானது எமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகின்றோம்.
 
எமது பெரிய பள்ளிவாசலுக்கு கிடைத்த மிகப்பெரும் ஆளுமைதான் அதன் தற்போதைய தலைவரான அல்ஹாஜ் வை எம் ஹனீபா. அவர் இந்த பள்ளிவாசலுக்கு தலைமையாக கிடைத்தது இந்த மக்களுக்கு கிடைத்த பெரும் பேறு என்றே குறிப்பிட வேண்டும் அவர் மிகவும் தைரியமாக விடயங்களை அணுகி செயலாற்றி வருகின்றார். அவரது தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தீர்மானம் எடுக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரசியல் தலைமைகள் எவராக இருந்தாலும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் விளையாடி விட முடியாதளவு பள்ளிவாசல் தலைமை இறுக்கமான கொள்கைகளை கடைப்பிடித்து காத்திரமாக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி:- தற்போது இக்கோரிக்கை என்ன நிலையில் இருக்கிறது?

பதில்:- தற்போது இந்த விடயம் உரிய இடத்துக்கு முன்னகர்த்தப்பட்டு இருக்கிறது. இதில் வெற்றி தோல்வி என்பது முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரசின் தலைமையிடம் தங்கி உள்ளது என்பதனை வெளிப்படையாக குறிப்பிடலாம்

ஏனெனில் அவர்களுக்கே இந்த மக்கள் கடந்த 30 வருடங்களாக வாக்களித்து வருகிறார்கள். எனவேதான் அவர்களூடாகவே இது செய்து கொடுக்கப்படல் வேண்டும் என்பதுடன் மு கா வுக்கே இது விடயத்தில் தார்மீக பொறுப்பு இருக்கிறது என்று நாம் ஆணித்தரமாக கூறி வருகின்றோம்.

கேள்வி:- தற்போது இவ்விடயத்தில் சிவில் சமூகத்தின் அழுத்தம் அவசியம் இல்லை என்கிற கருத்து நிலவுகிறதே இது பற்றி கூறுங்கள்?

பதில்:- எவரையும் முழுக்க முழுக்க நம்பியிருந்து விட்டு ஏமாந்து விட முடியாது. கடந்த கால வரலாறுகள் எமக்கு படிப்பினையாகும். உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை உண்டுபண்ணியதன் பின்னணி யார் என்பது, சோபித்த தேரரின் தலைமையிலான சிவில் அமைப்புதான் இதற்கு கால்கோலாக அமைந்தது என்பதை எல்லோரும் அறிவோம்.அத்துடன் மகிந்த ராஜபக்ச பதவி இழப்பதற்கும் அதுவே காரணமாக இருந்தது. மக்களை விழிப்புணர்வூட்டி அவர்களை ஒருமுகப்படுத்தும் விடயத்தில் இலங்கையில் பரிணாம வளர்ச்சி கண்டிருப்பது சிவில் அமைப்புகளின் பங்களிப்புகள் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?


அண்மையில் 19ஆவது திருத்தம் எதிர்கட்சிகள் காலை வாரிவிடுமா என்கிற அச்சம் இருந்தது. அதற்க்கும் பிரதான காரணி யார்? சோபித்த தேரர் இருந்த இறுதி நேர சத்தியாக்கிரகமும் 19 இற்கு எதிராக வாக்களித்து விட்டு தங்களது ஊர்களுக்கு சென்று மக்கள் முன் தோன்ற முடியாது என்கிற அவரது காட்டமான அறிவிப்பும்தான் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒருமுறை உலுக்கிப்ப் பார்த்தது. பின்னர் அது வெற்றி கண்டது என்பதை முழு நாடும் அறியும்.அந்த வகையில் தனியாக மறுமலர்ச்சி இயக்கமாக இருந்த நாம் தற்போது உள்ளூராட்சி மன்றத்தை வெற்றி கொள்வதற்காக ஊரிலுள்ள சகல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றினைத்து சம்மேளனம் ஒன்றை உருவாக்கி பலமான சிவில் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்றோம். அவசியமேற்பட்டால் மக்கள் அனைவரையும் வீதிக்கு இறக்குவோம். வெற்றி காண்போம் என்பதில் உறுதியாய் உள்ளோம்.

கேள்வி:- நீங்கள் அரசியல் தலைமைகளுக்கு கூறும் விடயம் என்ன?

பதில்:-அரசியல் தலைமைகள் என்று சொல்வதை விட முஸ்லிம் காங்கிரசின் தலைமை என்று சொல்வது மிகப் பொருத்தமானது என நினைகிறேன். இந்த விடயத்தில் கேள்விகளுக்கு, சமாளிப்புகளுக்கு, விட்டுக்கொடுப்புகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும்.அடுத்ததாக நாம் முன்னரே சொன்னது போல இந்த விடயத்தை செய்து தர வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு இருக்கிறது. அதேபோல் அதனை பொறுப்பேற்றும் உள்ளது. எதிர்வரும் எந்த ஒரு தேர்தல் அறிவிப்புக்கும் முன்னதாக இது வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக் உள்ளோம். ஏமாற்றலாம் என்று கிஞ்சித்தும் நினைக்க வேண்டாம். அது பாரதூரமான் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுவே அரசியல் தலைமைகளுக்கு நாம் விடுக்கும் செய்தி.
கேள்வி:- முஸ்லிம் காங்கிரஸ் இதனை பெற்றுத்தரும் என நம்புகிறீர்களா?


பதில்:- நிச்சயமாக சாய்ந்தமருது மக்கள்தான் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைமை அங்கீகாரம் வழங்கியவர்கள். இதனை எந்த ஒரு சந்தர்பத்திலும் கட்சியும் கட்சி தலைமையும் மறந்து விடாது. அதேபோல் முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது விடயத்தில் நம்பவைத்து கழுத்தறுக்காது என எதிர்பார்க்கலாம் அவ்வாறு கழுத்தறுப்பு இடம்பெறுமானால் மக்கள் தகுந்தத பாடம் கற்பிப்பார்கள்.

குறிப்பாக மக்கள் இன்று மிக தெளிவாக உள்ளனர். ஏமாற்றுவார்களா என்கிற அச்சம் இல்லாமல் இல்லை. இருந்த போதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். கடந்த கால வரலாறு உங்களுக்கு தெரியும். மக்கள் முடிவெடுத்த பின்னரே அவர்களின் முடிவுக்கு பின்னால் அள்ளுப்பட்டு போன தலைமைகள் பற்றி நான் இங்கு சொல்ல தேவை இல்லை. அதேபோல் மக்கள் முடிவெடுத்தபின் அவர்களை மீள அழைக்க முடியாது என்பதை இங்கு சொல்லிக் கொள்ளலாம்.
கேள்வி:- கல்முனை தமிழ் மற்றும் மருதமுனை மக்களின் தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை பற்றி?

பதில்:- இந்த இரண்டு விடயத்தின் பின்னணியிலும் பல ஊர்களையும் கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டுபவர் யார் என சாய்ந்தமருது மக்கள் நன்கு அறிந்து வைத்திருகின்றனர். தேர்தல் வரும்போது தீர்ப்பளிப்பார்கள் என நம்பலாம்.

அத்துடன் ஒரு விடயத்தை குறிப்பிடலாம் அதாவது தமிழ் மக்களின் போராட்டம் எப்போதும் தெளிவானது. அவர்களுக்கு கொடுத்தால் எமக்கும் தர வேண்டும் என்று வாது போடுகின்ற சமூகமல்ல தமிழ் சமூகம். அவர்களது தேவைகளை எப்போதும் துணிந்து கேட்டுப் பெறும் வீரமிக்க சமூகம். மற்றவருக்கு கொடுப்பதை ஒருபோதும் தடுத்து- கெடுத்து வாழ்பாவர்கள் அல்ல. வரலாறு அதை பல தடவை நிருபித்து காட்டி இருக்கிறது.

மருதமுனை மக்களும் அவ்வாறுதான். ஆனால் தனது அரசியல் முகவர்கள் ஊடாக ஓர் அதிகாரமிக்கவர் சாய்ந்தமருது உள்ளூராட்சிக் கோரிக்கை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு செய்யும் சூழ்ச்சியே அது.

நமது முஸ்லிம் தலைமைகளிடத்தில் இருக்கும் பாரிய குறைபாடுதான் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறார்கள் அல்லது என்ன எடுக்கிறார்கள் என்று வாய் பார்த்து கொண்டு இருப்பது. நமக்குரியதை நாம் பெற முயற்சிப்பதை விட்டு விட்டு மற்றவர்கள் செய்வதில் அல்லது மற்றவர்கள் பெறுவதில் பங்கு கேட்கும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த நிலைமை முற்றாக மாறாதவரை நமது சமூகம் விடிவு பெறாது. எமக்கான பாதையை சரியாக வகுத்து செயல்படுவதில்தான் வெற்றி தங்கி இருக்கிறது.

கேள்வி:- உங்கள் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படா விட்டால் தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெறும் என்ற முடிவு சரியானதா?

பதில்:- நிச்சயமாக சரியான முடிவு என்று எதிபார்க்கலாம். ஏனென்றால் எங்களது கோரிக்கை எதிர்வரும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நிறைவுக்கு வராதபோது அதனை மீள எவ்வாறு பெறுவது என்பதற்கான சாத்தியமான நிலைமையினை அரசுக்கு தெளிவு படுத்துவது எங்கனம் என்பதற்கான பதிலே இந்த தேர்தல் பகிஷ்கரிப்பு விவகாரம். எங்களது பலத்தை தேர்தல் ஒன்றின் மூலமே உணர்த்தலாம். இப்போது தருவதற்க்கு தகுதியானவர்கள் இருந்தும் எங்களுக்குரியதை தராமல் மறுக்க நினைக்கும் அந்த தலைமைக்கு வழங்கும் நெத்தியடிதான்,து.மறுபுறம் முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினர் இந்த கோரிக்கை வெல்லாது போக வேண்டும் என்று தருணம் பார்த்து வாக்குறுதி கொடுத்து விட்டு வாக்குகளை சுருட்டி கொள்ளலாம் என நப்பாசையுடன் காத்து நிற்கின்றனர். ஆனால் மாற்று அணியினரும் தற்போதைய அரசில் தான் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவேதான் எல்லோருக்கும் சேர்த்து நாம் சொல்லுகின்ற மொத்தமான செய்திதான் தேர்தல் பகிஷ்கரிப்பாகும்.

கேள்வி:- தேர்தல் பகிஷ்கரிப்பு நடைமுறை சாத்தியமான ஒன்றா?
பதில்:- இதற்குரிய பதில் மக்களின் மனங்களில் தங்கியுள்ளது. இந்த கோரிக்கை இப்போது வெல்லா விட்டாலும் தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது எதிர்காலத்தில் எமது கோரிக்கையினை வெற்றி கொள்வதற்கான முதலீடு என்பதை மக்கள் உணர்ந்தால் சரி, இது ஒரு தனி நபாரினால அல்லது குழுவினால் சாதிக்கத்தக்க ஒன்று அல்ல. எல்லோரும் இணைகின்றபோது இலகுவில் சாதிக்கலாம் என்கிற பலமான செய்தியினை அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இலகுவாக பெறும் முயற்சியில் எங்களது பள்ளிவாசல் தலைமை இறங்கி இருக்கிறது. இழந்துதான் பெற வேண்டும் என்றிருந்தால் எமது வாக்குகளை யாருக்கும் வழங்காமல் தவிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை.

கேள்வி:- இறுதியாக சொல்ல விரும்புவது?
பதில்:- சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை ஏற்படுத்தப்படும் என்றும் விரைவில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி, புத்தசாசன அமைச்சர் கரு ஜெயசூரிய, முகா தலைவர் முன்னிலையில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் உறுதியளித்திருந்தார்.


அதன் பிறகு வர்த்தமானிக்கான நிர்வாக ஏற்பாடுகள் குறித்து இம்மாதம் 01ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தான் அதனை முழுமையாக பொறுப்பேற்று நிறைவற்றித் தருவேன் என்று உறுதியாக தெரிவித்திருப்பதுடன் எவரும் இனிமேல் எனக்கு அழுத்தம் தர வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்ட்டுள்ளார்.

இந்த உத்தரவாதம் எப்போது நிறைவுக்கு வரும் என்கிற சந்தேக நிலை எல்லோரினாலும் பார்க்கபடுகிறது. உள்குத்து ஏதும் வந்து விடுமோ என்கிற அச்சம் மிகவும் பலமாயுள்ளது.எது எப்படி இருந்த போதிலும் இது ஒரு தேர்தல் வாக்குறுதியாக மாறி விடக் கூடாது என்பதிலே மக்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர் என்பதை நாம் சொல்லி புரிய வைக்கத் தேவையில்லை. இதனை அரசியல் தலைமைகள் புரிந்தும் புரியாதவர்கள் போல் ,ருப்பதும் மக்களுக்கு தெரியாமல் இல்லை.

உள்ளூராட்சி அமைச்சருனுடனான சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை நடந்து கொண்ட விதம் சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி மன்ற நிறுவுதலின் அவசியம் குறித்து அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு விளங்கப்படுத்திய விதம் அங்கு சென்றிருந்த எல்லோரினாலும் பாராட்டப்பட்டு வரவேற்க்கபட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

,ருந்த போதிலும் ஒப்புதல் மற்றும் சிபார்சு கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், பெற கால நேரம் வீனடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஆனாலும் இவ் அனைத்து ஆவணங்களையும் பெறுதல் அல்லது வழங்குதல் போன்ற அத்தனை விடயங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே சம்மந்தப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். அதன் பிரகாரம் ஆவணங்கள் அவசியமாயின் அவைகளை சாத்தியப்படுத்துகின்ற விடயம் அக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது

இதனை செயல் வடிவில் சாத்தியப்படுத்தாமல் வாக்குறுதியை மட்டும் வழங்கிக் கொண்டு காலத்தை இழுத்தடிப்பு செய்யலாம் என்று யாராவது சிந்திப்பார்களேயானால் அவர்களை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது. sa
நன்றி நவமணி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -