சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, மும்பை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், மும்பை விசாரணை நீதிமன்றத்திடம் 30,000 ரூபாய் பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சல்மான் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சல்மான் கானின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், அவர் இன்று விடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. 

இதன் பின்னர், சல்மான் தரப்பில் அதே நாளில் தொடரப்பட்ட பிணை மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு 2 நாட்கள் இடைக்கால பிணை வழங்கியது. 2 நாட்கள் பிணை இன்றுடன் முடிவடையும் நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், பிணை வழங்கக் கோரியும் சல்மான் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அத்துடன், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சல்மான் கான் சார்பில் அவரது தரப்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி திப்சே, நடிகர் சல்மான் கானின் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்

இதேவேளை, சல்மான் கானின் பிணை மனு மீது விசாரணை நடந்தபோது, மும்பை உயர் நீதிமன்றதுக்கு வெளியே அவரது ரசிகர் ஒருவர் விஷம் அருந்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

விஷம் அருந்த முயற்சித்தவர் கவுரங்கூ குன்ட்டு என்று கண்டறியப்பட்டுள்ளார். விஷம் அருந்த முயற்சிக்கும் முன்னர் நீதிமன்ற வளாகத்தின் வெளியே அவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளார். அதில், 'நான் திரைப்படத்தில் கதாசிரியராக வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். எனது திறமையை உலகம் அறிய சல்மான் கான் உதவி புரிவார் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தேன். அவருக்கு திரைக்கதைகள் பலவற்றை அனுப்பி வைத்துள்ளேன். அவருக்கு தண்டனை கிடைத்தால் எனது எதிர்காலமும் வீணாகும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

நீதிமன்ற வளாகத்தில் விஷம் அருந்திய அவரை பொலிஸார், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். 

தற்போது அவரது உடல் நிலை சீராகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -