பர்ஹான்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்காக 3 பேர்களின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது. உபவேந்தர் தெரிவு அடுத்த வாரமளவில் வெளிவரும். இதில் கவலையான விடயம் யாதெனில், உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற பேராசிரியர் நாஜிம் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பேராசிரியர் நாஜிமின் தகைமையை விமர்சனத்துக்கு உட்படுத்துவது பிரதேசவாத சிந்தனையை அடிப்படையாக கொண்ட காழ்புணர்ச்சி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஜனாதிபதியின் தெரிவுக்கு சிபாரிசு செய்யப்பட்ட 3 கல்விமான்களும் திறமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் ஏனைய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஜனாதிபதி ஒருவரை உபவேந்தராக தெரிவு செய்வார். நல்லாட்சியின் அடையாளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு அமையவேண்டும் என்பதே எல்லோரினதும் பொதுவான எதிர்பார்ப்பு.
இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் பேராசிரியர் நாஜிமின் தகைமைகளை பிரதேசவாத சிந்தனை கொண்ட சிலர் கேள்விக்கு உட்படுத்துவதாகும். அவரது திறமையை, தகைமையை நிரூபிப்பது அல்ல இவ்வாக்கத்தின் நோக்கம். இப்பிரதேசவாத சிந்தனைதான் இப்பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை இன்னும் சிலர் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். பௌதிக ரீதியான அற்ப காரணங்களை முன்வைத்து இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வர வேண்டுமென்ற கோரிக்கை இப்பிரதேச புத்திஜீவிகளை அவமானப்படுத்தும் செயலாகும். அவர்களது திறமையை கேள்விக்குட்படுத்துவதாகும், ஏனெனில் அவர்களது திறமையை விட இங்கு பிரதேசவாத நியாயங்களே முன்வைக்கப்படுவதாகும். திறமையான ஒருவர் எப்பிரதேசத்தவராகினும் தமது திறமையை வெளிக்காட்டி தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே நியாயமானது.
நடிகர் நெப்போலியன் கூறுவது போன்று கலியாண வீடு என்றாலும் நான்தான் மாப்பிள்ளை, சாவு வீடு என்றாலும் நான்தான் பிணம் என்பது போலவே இவர்களது பிரதேசவாத சிந்தனையும் நியாயப்படுத்தலும் உள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தெரிவு செய்யப்படுகின்ற ஒருவருக்கு இன்று பெரும் சவாலாக பிரதேசவாத சிந்தனை இருக்கின்றமையை கடந்தகால கசப்பான அனுபவங்களின் ஊடாக கண்டு கொள்ளலாம். அதனது பாதிப்புகள் மதிப்பிட முடியாது. பிற்போக்குத்தனமான, சவால்களை எதிர்கொள்ள முடியாத, சுயநலன் கொண்ட சிலரின் செயற்பாடுகளே இப்பிரச்சினை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இச்சிந்தனையிலிருந்து எப்போது விடுபடுகின்றோமோ அப்போதே தென்கிழக்கு பல்கலைக்கழகம் உண்மையான அபிவிருத்தியைக் காணும்.
மேலும் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவில் அரசியல் தலையீடு செய்யுமாறு அரசியல்வாதிகளை வேண்டுவது, கோரிக்கைகள் விடுப்பது ஒருவகையில் அரசியல்வாதிகளை அச்சுறுத்துவது போன்றதே. இப்பிரதேசம் சாராத ஒருவர் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதன் ஊடாக அவர்களது அரசியல் எதிர்க்காலத்தை கேள்விக்கு உட்படுத்த முடியும் என்ற தொனியில் கருத்து வெளியிடுவது ஆரோக்கியமாகாது. கடந்தகால உபவேந்தர் தெரிவில் ஜனாதிபதியிடம் கருணா அம்மான் போன்றோரின் சிபாரிசுகளை பெற்றுக் கொடுத்தது நான்தான் என்று சந்தியில் நின்று வீராப்பு பேசிய சம்பவங்கள் போன்று இனியும் இடம் பெறாமல் இருக்க வேண்டும். இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு சுதந்திரமாக இடம் பெற வேண்டும்.
இங்கு தனிநபர் நலனுக்கும் அப்பால் சமூகத்தின் சொத்தாகிய பல்கலைக்கழகத்தின் எதிர்கால நலன் முன்னிறுத்தப்பட வேண்டும். குறுகிய அரசியல், பிரதேசவாத சிந்தனைகள் இப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்துவிடக் கூடாது என்பதில் யாரும் மாற்றுக்கருத்தை கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
