அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கு சதிநாடகத்தை அரங்கேற்றும் நான்கு சதிகாரர்கள் என்னும் தலைப்பில் அஷ்ரப் ஏ.சமத் என்பவர் இணையத்தள ஊடகங்களில் எழுதியிருந்த 03 ஏபரல் 2015 அன்று பிரசுரிக்கப்பட்டிருந்த ஆக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாக்கம் எழுதப்படுகின்றது.
“ஒரு விடயம் குற்றச்சாட்டாக, அல்லது வழக்காக நீதிமன்றம் ஒன்றில், அல்லது தீர்ப்பாயம் ஒன்றில் தாக்கல் செய்த பிற்பாடு அவ்விடயத்தைச் சூழ சாதகமாக அல்லது பாதகமாக வெளியிடப்படுகின்ற எந்தவொரு அறிக்கை, ஆக்கம், ஊடக வெளியீடுகள் ஏனைய முயற்சிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை” இதனை நாம் மனதில் நிறுத்தியவர்களாக மேலே சொல்லப்பட்ட தலைப்பிலான ஆக்கமும் அத்தகைய ஒரு நோக்கோடு முன்வைக்கப்பட்டிருக்கின்றது, குறிப்பாக மேற்படி முறைப்பாடுகளோடு தொடர்புடையவர்களை எச்சரிக்கும் நோக்கிலும் அவர்களை அச்சுறுத்தும் நோக்கிலும் மேற்படி கட்டுரை வரையப்பட்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. கட்டுரையாளர் குறித்த கட்டுரையில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் கருத்தானது அவரது உள்நோக்கத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஆக்கத்தின் 9வது பந்தியில். “அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி உதவமாட்ட்டார்கள்” என்ற முதுமொழி பொய்த்துப்போயிருக்கின்ற காலகட்டத்தில்……” என்று குறிப்பிட்டுள்ளார், இதன்மூலம் அமைச்சர் றிசாத்துக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்தோருக்கு அடிக்க முடியாத காலத்தில் இருக்கின்றோம் அவர்கள் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள் என்கின்ற அர்தத்தில் எழுதியிருக்கின்றார்.
றிசாத்துக்கு எதிரான வழக்குகளை நான்குவகையானவர்கள் இணைந்து மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார், அதன்பிரகாரம்
· றிசாத்திற்கு எதிரான அரசியல் எதிரிகள் ( முஸ்லிம் காங்கிரஸ், ஏனைய முஸ்லிம் அரசியல் அமைப்புகள்)
· பாராளுமன்ற உறுப்பினர் ரங்கா மற்றும் சக்தி தொலைக்காட்சி
· பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புகள்
· புலிகளும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இயங்குவோரும்
அமைச்சர் றிசாத் அவர்களுடைய விடயத்தில் மொழி, சமயம், இனத்துவம், கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டிருக்கின்றார்கள் என்றும் குறித்த கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதோடு, அவர்கள் அனைவரும் முஸ்லிம்களுக்கு விரோதமானவர்கள் என்றும், குறிப்பாக வடக்கு முஸ்லிம்களுக்கும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் எதிரானவர்கள் என்றும் மிகவும் வெளிப்படையாக குற்றம் சுமத்தியிருக்கின்றார். இதன்மூலம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் குறித்த முறைப்பாட்டினைச் செய்தவர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பவும், அமைச்சர் றிசாத் அவர்கள் முஸ்லிம்களை மீட்கவந்த ஒரு தேவதூதர் என்கின்ற நிலையைநோக்கி உயர்த்தவும் கட்டுரையாளர் முற்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையாகப் புரிகின்றது.
என்னைப் பொறுத்தவரையில் குறித்த கட்டுரையாளரிடம் மிகவும் வெளிப்படையாக கேட்டுக்கொள்வது “இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற வேண்டாம்” என்பதுதான். இலங்கை முஸ்லிம்கள் அதிகமான உணர்ச்சிவயப்படுகின்றவர்கள், அவர்கள் முஸ்லிம் இஸ்லாம் என்கின்ற அடையாளத்தை மதிக்கின்றவர்கள், அதனைப் பாதுகாக்கவேண்டும் என்கின்ற விருப்பத்தைக் கொண்டவர்கள் என்பது உண்மைதான், அதற்காக மிகவும் மோசமான அரசியல் கலாசாரத்தையும், அரசியல் நட்த்தைகளையும் இஸ்லாம் என்கின்ற முஸ்லிம் என்கின்ற லேபல்களுக்காக அங்கீகரிக்கமாட்டார்கள், அல்லது இஸ்லாம் என்கின்ற முஸ்லிம் என்கின்ற லேபல்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன என்பதற்காக அவற்றை ஏற்றுக்கொள்கின்ற அளவுக்கு இலங்கை முஸ்லிம்கள் மட்த்தனமானவர்கள் அல்ல என்பதையும் எழுத்தாளர் புரிந்துகொள்தல் வேண்டும்.
வரலாற்றை மற்ந்துவிட்டு இதற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளை மறந்துவிட்டு முழுப்பூசணிக்காயையும் சோற்றுப்பானைக்குள் மறைக்கின்ற எழுத்தாளரின் முயற்சி வேடிக்கையாகவே இருக்கின்றது. மஹிந்தவின் ஆட்சியிலே செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்தவர்தான் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்கள், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட்தன் பின்னர் மஹிந்தவையே முஸ்லிம்கள் ஆதரிக்கவேண்டும் என்கின்ற கருத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளில் ஆரம்பத்தில் ஈடுபட்டார், வன்னி மாவட்ட்த்திலே பள்ளிகள் தோறும்சென்று மஹிந்தவுக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றார்கள் என்பதை வீடியோ எடுத்து மஹிந்தவுக்கு காட்டியவர்தான் றிசாத் அமைச்சர் அவர்கள், இதனை எவருமே மறுக்க முடியாது, ஆனாலும் முஸ்லிம் சமூகம் முற்றாக மஹிந்தவுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரசும் மைத்திரியின் பக்கம் சென்றுவிட்டால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் பொய்த்துப்போய்விடும் என்பதை நன்கு கணக்கிட்டு, மஹிந்தவின் தோல்வி உறுதிசெய்யப்பட்ட பின்னர் மைத்திரியின் பக்கம் தாவியவர்தான் றிசாத் அவர்கள்.
மஹிந்தவின் ஆட்சியில் பொதுபலசேனாவின் ஆட்டம் தலைவிரித்து ஆடியபோது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியாத அமைச்சர்களுள் இவரும் ஒருவர், 2013, 2014ம் ஆண்டுகளில் அமைச்சர் றிசாத் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அவர் முஸ்லிம்களுடைய விடயத்தில் எதுவுமே பேசியிருக்கவில்லை என்பது வெளிச்சத்திற்குவரும். அதுமாத்திரமன்றி முஸ்லிம்களுக்காகப் பேசிய ஏனைய சமூகத் தலைவர்களுக்கு இடையூறு விளைவித்தார் என்பதும்; முஸ்லிம்களின் விவகாரம் பேசப்படுகின்றபோது சபையைவிட்டு வெளியேறியிருக்கின்றார் என்பதும் தெரியவரும்.
இவ்வாறு அரசியல் மேற்கொண்டவர்களை மீண்டும் மீண்டும் முஸ்லிம்களின் சமூகத்தலைவர்களாக்க் காட்ட முயற்சிப்பதும் முஸ்லிம் சமூகத்தைக் கேவலப்ப்டுத்துவதற்கு சம்மாகும், நல்ல நேர்மையான தலைவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் பஞ்சம் நிலவுவதைப்போல இதுவரை காலமும் முஸ்லிம்களின் நலன்களில் அக்கறை செலுத்தாத, தம்முடைய அரசியல் இருப்பை மாத்திரமே கருத்தில்கொண்டு செயற்பட்ட, எல்லா தளங்களிலும் முஸ்லிம்களுக்கு கெட்டபெயரை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த தலைவர்களை மீண்டும் மீண்டும் தலைவர்களாக சித்தரிப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது?
றிசாத் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் பின்வருமாறு அமைகின்றன
· தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலே நிறைவேற்றிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் மோசடிகள் ஈடுபட்டிருக்கின்றார்
· வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றார்
· அரசகாணிகளை சொந்த்த் தேவைக்காக, வியாபாரத்திற்காக கையகப்படுத்தியிருக்கின்றார்
மேற்படி குற்றச்சாட்டுகள் எதிலுமே முஸ்லிம் மக்களுக்காக சேவைகளோடு தொடர்புபட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. இதனை நாம் முழுமையாக்க் கருத்தில் கொண்டு செயலாற்றவேண்டும். குறித்த அமைச்சர் சமூகத்தின் நன்மைக்காக உழைத்தார் என்கின்ற காரணத்தினால் மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் உண்மையாகவே அவற்றோடு தொடர்புபட்டிருந்தாலும் அவரை பாதுகாக்கவேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றதா? இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேடவேண்டும்.
இஸ்லாம் அநீதியை, எதிர்க்கின்ற மார்க்கம், அநீதிக்கு இஸ்லாத்தில் இடமில்லை, இப்போது அமைச்சர் அவர்கள் மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது; அவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நீதிமன்றமும், சட்ட்த்துறையுமே தீர்மானிக்கும், அதுவரை நாம் பக்கச்சார்பின்றி நடுநிலையாக இருப்பதுவே சமூகம் என்ற ரீதியில் எமக்கு முன்னால் இருக்கின்ற கடமையாகும். எனவே மேலே சொல்லப்பட்ட கட்டுரையாளர் இலங்கை முஸ்லிம்களை ஏமாற்றுவதையும் தவறாக வழிநடாத்துவதையும் உடனடியாக்க் கைவிடவேண்டும் என்று தெரிவிக்க விரும்புகின்றேன்.
அன்வர் மொஹிடீன்
வவுனியா
