பட்டிப்பளை - நூல் விமர்சனம்

நூல் : பட்டிப்பளை
(நெயினாகாடு வரலாற்றுப் பேழை)
ஆக்கியோன் : வரலாற்று ஆய்வாளர் - ஜலீல் ஜீ
வெளியீடு : பாவலர் பஸீல் காரியப்பர் ரசிகர் வட்டம்.
விலை : 200ஃஸ்ரீ
தொடர்பு : 0779802423

நூலாய்வு : அட்டாளைச்சேனை மன்சூர்

எமது பிரதேசங்களின் வரலாறுகள் ஆய்வுசெய்யப்படுதல் வேண்டும். காரணம் ஒரு சமுகமோ, பிரதேசமோ தலைநிமிரவும், அதன் சுவடுகளை பறைசாற்றுவதற்கும் வரலாறுகள் அவசியமாகின்றன. வரலாறு என்பது 'முடிந்த கதைகளைப் பேசுவதற்காக அல்லை, முடிவெடுக்க வேண்டிய சரித்திரங்களைத் தொடங்குவதற்காக' என்றும் கூறுவர். தகுந்த வரலாற்றுப் பின்புலத்தில் ஒவ்வொரு விடயத்தையும் பொருத்தி உண்மையைப் பகுத்தாய்ந்து வெளியிடுவதன் வாயிலாக தவறான கற்பிதங்களையும் பிழையான வாதங்களையும் ஆபத்தான விளைவுகளையும் வரலாற்றுப் பதிவுகளால் தடுக்கமுடியும்.

வரலாறு என்பது கடந்து முடிந்தகாலம் அல்ல. அது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பது. கடந்த காலம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றுகூட சிலர் கருதுகிறார்கள். 'கடந்த காலத்தில் இருந்து பெரும் படிப்பினைகளை நாம் பெறுகிறோம். சமூகச் செயல்பாட்டின் வாய்ப்புகளையும் எல்லைகளையும் பற்றி நடைமுறை அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதன் அடிப்படையில் நாம் கடந்த காலத்துக்குத் திரும்புகின்றோம். புதிய உள்ளடக்கத்தைப் பெறுகிறோம்' எனவேதான், உண்மையை நிலைநாட்டவும் பேரழிவைத் தடுக்கவும் வரலாறுகள் அவசியமாகின்றன. இவ்வாறு நம்மிடையே இருக்கின்ற எத்தனையே வரலாற்று விடயங்களை ஆவணமாக்க வேண்டிய பாரியபொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது. ஆனால் அதனை கோர்வதற்கும், ஆய்வதற்கும் சில காலங்களில் சிலர் உருவாகுவார்கள்.

அந்த உருவாக்கத்தின் பங்காளியாக எம்மிடையே காணப்படுபவர்தான் சம்மாந்துறையைச்சேர்ந்த ஊடகவியலாளர், ஜனாதிபதி சாரணர், வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், ஒலிபரப்பாளர், படப்பிடிப்பாளர் என்கிற பல்வேறு பாரிஜாலங்களைக் கொண்டுள்ள ஜலீல்ஜீ. எழுத்துலகில் புதுமை படைக்கவேண்டும் என்பதற்காக எல்லோரும் செய்வதுபோன்று செய்யாது அதில் தனித்துவம் படைக்கின்ற ஒருவராகவே தெரிகின்றார். ஆதலால்தான் நாம் பட்டிப்பளையின், நெயினாகாட்டின் வரலாற்றினை ஆய்ந்து, தொகுத்து அதனை நூலுருவாக்கிய இந்நூலாசிரியர் பராட்டுக்குரியவர். அத்துடன் 'தமிழ்மொழியால் இணைவோம்' என்கிற குறிக்கோளுடன் இன மத வேறுபாட்டுக்கும் அப்பால் சென்று 'அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை' இனையும் ஆரம்பித்து வழிநடாத்துகின்ற இந்நூலாசிரியரின் செயற்பாடுகள் மெச்சத்தக்கதாகும்.

சரி விடயத்திற்கு வருவோம். பட்டிப்பளை எனும் இந்நூல் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டு, அது அமைந்துள்ள நெயினாகாட்டுப் பிரதேசத்தின் கடந்தகாலம், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தில் அது எவ்வாறு காணப்படவேண்டும் என்கிற பல்வேறு விடயங்களையும் தொட்டுச் செல்கின்றது. இந்நூல்பற்றி தனது முன்னுரையில் ஆய்வாளர் ஜலீல் ஜீ கூறுகையில், 'ஒரு சமுகத்தின் இருத்தலும், அடையாளமும், அச்சுறுத்தலுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகும்போது, அச்சமுகம் தனது வரலாற்று மூலங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் தேடுவதில் அதிக ஈடுபாடு காட்டுக்கின்றது. தனக்கென்றொரு வரலாற்றையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கட்டமைக்க முயலுகின்றது. அவற்றைத் தன் தொன்மைக்கும், பெருமைக்கும், இருத்தலுக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றது. இலங்கையைப் பொருத்தவரை 19ம்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தமிழ்;, முஸ்லிம் சமுகங்கள் மத்தியில் நாம் இப்போக்கினைக் காணலாம்' என்று தனது முன்னுரையில் எழுதிச் செல்கிறார் ஜலீல் ஜீ.

அந்தவகையில் பார்க்கின்றபோது இருபது முக்கியஸ்தர்கள் இந்நூலுக்கு சிறப்புரை மற்றும் வாழ்த்துரைகள் வழங்கியுள்ளனர். குறிப்பாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் தனது வாழ்த்துரையில் 'முஸ்லிம்களின் இருப்பை இல்லாமல் செய்யும் நோக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமான வரலாற்றுத் தடயங்களை அளித்துவிடத்துடிக்கும் சதிகளுக்கு மத்தியில் இந்நூலின் உருவாக்கம், அதன் ஆசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது' என்று கூறுகின்றார்.

கல்வியியலாளர் யூ.எல். அலியார் வழங்கியுள்ள சாற்றுரையில் 'பட்டிப்பளை எனும் புராதன ஆற்றுப் பள்ளத்தாக்கு நாமத்தைச் சுமந்துள்ள நெயினாகாடு கிராமத்தின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் விவரணமாகத்தரும் இந்நூலுக்கு தொண்மை மணக்கும் மகுடமாக பட்டிப்பளை எனசூட்டப்பட்டமை பொருத்தமே. சம்மாந்துறையின் தென் எல்லையில் அமைந்த ஒரு கிராமம் நீண்ட காலமாக வரலாற்றுத் தடயங்களை கொண்டு விளங்கியபோதும் இடைக்காலங்களில் ஏற்பட்ட பல அனர்த்தங்கள் காரணமாக தாக்கத்திற்கு உள்ளானமையும் தற்போது அபிவிருத்திப்பாதை நோக்கிசென்று கொண்டிருப்பதையும் இந்நூலில் தெளிவாகத் தந்துள்ளார்' என்கிறார். 'நெயினாகாட்டு மக்களுடைய நன்மை தீமைகளிலும் பொருளாதார அபிவிருத்தியிலும் முதலியார் காரியப்பர் தொடக்கம் நான் அமைச்சராக இருக்கும்வரையிலும் ஈடுபாடு காட்டி வருகின்றேன்' என்று வாழ்த்துரைக்கின்றார் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம் மன்சூர் அவர்கள்.

கிராமத்தின் எழிலை இவ்வாறு விபரிக்கின்றார் நூலாசிரியர். 'அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தெற்குத்திசையில் மல்கம்பிட்டி பாதையினூடாக 12கி.மீ. தூரம் சென்றால் பச்சைப்பசேல் என மனதை கௌவிக் கொள்ளும் அழகில் பசுமை நிறைந்த வயற்காற்று அருவிகள், ஆறுகள், ஓடைகளுடன் முட்டி மோதி இதம்பேசும் இசையுடன் எம்மைக் கொள்ளை கொள்ளும் வகையில் பிரமிக்க வைக்கும் அழகிய தோற்றத்தில் நெயினாகாடு எனும் கிராமம் வரவேற்கும்.

வெண்பட்டு விரித்தாற்போல நீண்டு கிடக்கும் நெற்காணிகளில் அணிவகுத்து நிற்கும் தென்னை மரக்கூட்டங்கள், வெளியூரவர்களினைச் சுண்டியிழுக்கும் அழகு கொஞ்சும் பசுமை மாறாக் காடுகளின் விலங்கினங்களும், பலவகைப் பூக்களுமாய் இயற்கை இன்றளவும் உயிர்;ப்போடு இருக்கும் இடம் நெயினாகாடுதீவு. கண்ணாடியாய் மின்னும் வண்ண வண்ண மீன்கள் கூட்டம், வெளியூரார் நெஞ்சோடு அள்ளிச் செல்ல கமராக்களில் பதித்துச் செல்ல அழகிய நினைவுகளாய் சுமந்து செல்ல பற்பல காட்சிகள் உண்டு இங்கே...' என்று வர்ணிக்கிறார் நூலாசிரியர்.

நெயினாகாடு என்கிற கிராமத்தி;ன் வரலாற்றை எழுதவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான பல்வேறு விடயங்களைக் கூறவிளையும் நூலாசிரியர், அதன் வரலாற்றுப் பின்னணி, பூர்வீகக் குடிவரவின் வரலாறு, பௌதீக வளங்கள், அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரங்கள், சமய சமுக விழுமியங்கள், சமய சம்பிரதாயங்கள், நடைமுறைவாழ்வியலின் தோற்றப்பாடுகள், உதவியவர்கள், பூர்வீக குடியிருப்பு முறைகள், அக்காலகட்டத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் ஜீவனோபாய முயற்சிகள், பொருளாதார தொடர்புகள், அக்காலங்களில் விவசாயத்தில் ஏற்பட்டிருந்த நோய்களும் அதனைக் கட்டுப்படுத்துவது போன்றனவும் இந்நூலில் காணப்படுவது மற்றொரு விசேடமாகும்.

ஆய்;வாளர் ஜலீல் ஜீ இந்நூலை வெளிக்கொணர்வதற்கு சிலகாரணங்களை முன்னிலைப்படுத்தியிருப்பது வெள்ளிடைமலையாகும். தொண்டு தொட்டு வாழ்ந்த மக்கள் விவசாயம், மற்றும் செங்கல் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொண்டுவந்த இவர்கள் நாட்டில் ஏற்பட்ட இனரீதியான பிளவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதும், இவர்களது குடியிருப்புக்கள் யானை போன்ற ஜீவராசிகளின் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதன் பிற்பாடு தமது கிராமத்தையும், தொழில் மற்றும் வாழிடக்குடியிருப்பு போன்றவற்றினை மீண்டும் புதுப்பிப்பதில் ஏற்பட்ட சவால்களையும், இவர்கள் தேர்தல்காலங்களில் வாக்குகளை அரசியல்வாதிகளுக்கு பகிர்ந்து கொண்ட முறைகளையும் நூலாசிரியர் முன்வைக்கும் விதம் சிறப்பானதாகும்.

இவ்வாறு, வரலாற்றுப் பின்னணியுடன் நெயினாகாடு பிரதேசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பட்டிப்பளை என்கிற பெயர் கொண்ட இடம், 1949 ஆம் ஆண்டில் குடியமர்வுக் கோட்பாட்டின் காரணமாக தலைகீழாக மாற்றம் பெற்றிருந்த வரலாறுகளும் உண்டு. அதே ஆண்டு பெப்ரவரி மாதம் டி.எஸ். சேனநாயக்காவின் நிரந்தரச் செயலாளராக இருந்த சேர் கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசன திணைக்களத்தின் இயக்குநராக இருந்த ரி. அழகரத்தினம் மற்றும் நில அளவையாளர் நாயகம் கலாநிதி எஸ். புரோகியர் (ளுரசஎநலழச புநநெசயட னுச. ளு. டீசழாநைச) ஆகியோரை அழைத்துப் பட்டிப்பளை ஆற்றை மறித்து அதில் ஒரு அணை கட்டுவதற்கான தனது யோசனையை முன்வைத்தார்.

அதனை நிறைவேற்றும் முகமாக திரு அழகரத்தினம் மற்றும் அவரது திணைக்களப் பொறியியலாளர்கள் முஸ்லிம் ஊரான சம்மாந்துறைக்குப் பயணித்து, அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பட்டிப்பளை ஆற்றோரமாகப் பயணித்தார்கள். பட்டிப்பளை ஆறு பதுளையில் உள்ள மடுசீமா என்ற மலைத் தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கில் 85 கி.மீற்றர் கடந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அங்கிருந்து இங்கினியாக்கலைக்குக் குழு புறப்பட்டது. அங்கு அணை கட்டுவதற்கான ஒரு இடம் தெரிவு செய்யப்பட்டது. பின்நாட்களில் அதுவே சேனநாயக்கா சமுத்திரமாக பெயர்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை பட்டிப்பளை கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து வரலாற்றில் இடம் பிடித்த ஒரு செழிப்பான ஊராகும். இவ்வாறு பட்டிப்பளையின் வரலாறு காலத்தினால் அழிக்கமுடியாத ஒரு பெயராகும்.

இவ்வாறான ஒரு வரலாற்று ஆவணத்தின் பேழையில் நெயினாகாட்டுப் பிரதேசத்தினை ஸ்தாபித்து வசித்தவர்கள், உதவி செய்தவர்கள், பள்ளிவாசலை அமைத்தவர்கள், அந்தப் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகள், தேவைகள், வரலாற்று ஆய்வுக்கான தகவல்களைத் கொடுத்தவர்கள், வெளியீட்டாளர்கள் போன்ற அனைவருக்கும் நூலாசிரியர் நீண்ட நன்றியையும் தெரிவித்திருக்கின்றார். கிழக்கின் ஒவ்வொரு ஊருக்கும் உள்ள வரலாறுகள் ஆய்வுசெய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு ஊருக்குமான வரலாற்றுப் பேழைகள் இருக்கின்றன. அதுகாலத்திற்குக்காலம் புதுப்பிக்கப்படுதல்; வேண்டும். அந்தப்பணி மிகவும் கஷ்டமானது. அதனை தங்குதடையின்றி ஒவ்வொரு விடயத்திலும் மிக நுணுக்கமாக ஆய்ந்துள்ள பட்டிப்பளையின் வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ எவ்வாறு பாராட்டினாலும் தகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -