ஆறு மாதக் குழந்தையொன்று சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தமை தொடர்பில் அதனது தந்தையும், தாயின் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் - கருவலகஸ்வெ பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். எனவே குழந்தை, தாயின் சகோதரியின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.
பின்னர் குழந்தையின் தாயின் சகோதரிக்கும், அதன் தந்தைக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த 4 ஆம் திகதி மாலை 8 மணியளவில் நோய்வாய்ப்பட்ட நிலையில் குழந்தை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் 8.30 மணியளவில் குழந்தை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குழந்தையின் தலையில் தாக்குதலுக்குள்ளான காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளமையும் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தந்தையும், சித்தியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை 6 மாதக் குழந்தையின் தாய் எவ்வாறு குழந்தையை வேறொருவரின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்றார் என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
