சலீம் றமீஸ்-
தேசிய காங்கிரஸ் மூலம் பொத்துவில் பிரதேசத்தின் அரசியல் அதிகாரத்தினை பெறுவதற்கு இளைஞர்கள் பலமாக இருக்க வேண்டும். தேர்தல் காலங்களில் வந்து பொத்துவில் மக்களையும், மன்னையும் ஏறமாற்றுவதற்கு இனி ஒரு போதும் இளைஞர்கள் அனுமதிக்க கூடாது, என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் பொத்துவில் பிரதேச இளைஞர் அமைப்பாளர் ஏ.ஜி.இக்பால் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
தேசிய காங்கிரஸ் தேர்தல் காலங்களில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் பொத்துவில் மக்களுக்கு பணி செய்து வருகின்றது. தேசிய காங்கிரஸ் மூலமாக அதன் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் எனக்கு கிழக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சுப்பதவிகளை வழங்கி விட்டு கிழக்கில் வாழும் மூவின மக்களுக்கும் பணி செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு குறிப்பாக பொத்துவில், மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் தேவையான அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது.
இதுதான் தலைமையின் பண்பு. தேசிய காங்கிரஸூக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினை தவறவிடாமல் மக்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளோம். அதுமட்டுமல்ல இந்த கிழக்கு மாகாணத்தில் மூவின சமூகத்தின் நிம்மதியை பெற்றுத் தருவதற்கு தேசிய காங்கிரஸின் தலைமை செயற்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்த விடயம்.
எந்தப் பிரதேசமாக இருந்தாலும் அபிவிருத்தி செய்கின்ற போது இது எங்களுடைய பிரதேசம் என்றே பணிகளை செய்து வந்துள்ளோம். இன்னும் இந்த பொத்துவில் மண்ணுக்கு எங்களால் முடிந்த பணிகளை தொடர்ந்தும் செய்வோம்.
இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள். உண்மைகள் யதார்த்தங்களை உணர வேண்டும். பெருமதிமிக்க இளைஞர்கள் சமூகத்தின் நலனில் அக்கரை கொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்களது பிரதேசம் மாவட்டம், மாகாணம் மற்றும் நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் இளைஞர்களை என்றுமே பிழையாக வழி நடாத்தியதில்லை. தேசிய காங்கிரஸூக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினை இளைஞர்கள் நலனுக்காகவும் பயன்படுத்தி வந்திருக்கின்றோம்.
பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் இளைஞர்களின் ஒன்று கூடல் நாளை பொத்துவில் மண்ணுக்கு வரலாறாக மாற வேண்டும். என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹ்ஜி, பிரதி தேசிய அமைப்பாளர் யு.எல்.உவைஸ், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எல்.ஏ.காதர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)