நமது சமூகத்தையும் நாட்டையும் தனது கோரப்பிடிக்குள் இறுக்கி வரும் போதைப் பொருள் பழக்கம் பற்றி இந்த செய்தித்தளத்தில் எழுத தேசிய சூரா சபை எண்ணியது. தனிநபருடைய உடல் நலம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைகளாக உள்ள மதுசாரம், புகைத்தல், போதை வஸ்துக்கள் அனைத்தையும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்துள்ளது.
நம் நாட்டில் உள்ள ஏனைய மதத்தினரில் பலரும் இவற்றின் தீமையை உணர்ந்து இப்பழக்கங்களில் இருந்து விலகி வருவதைக் காணலாம். இவற்றிற்கான தடைகளை இடுவதும் இவற்றை புறக்கனிக்கும் கொள்கைகளை வலியுறுத்துவதும் நமது சமூகத்திற்கோ அல்லது உலகத்திற்கோ புதிய ஒரு விடயமல்ல.
இந்த நாசகரமான பழக்கத்தை தடை செய்வதில் உள்ள தாத்பரியம் அதனால் தனி மனிதனுக்கு ஏற்படும் கெடுதி மட்டுமல்ல. மாறாக, அதன் காரணமாக குடும்பங்களுக்கும், முழு சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்பையும் இஸ்லாம் கவனத்தில் கொள்கின்றது. அத்துடன், உடலுக்கு தீமை விளைவிக்கும் பொருட்களை உட்கொள்வது தற்கொலைக்கு சமம் என்றே இஸ்லாம் எச்சரிக்கின்றது. தற்கொலை, அது உடனடியாக எற்பட்டாலும், சிறுக சிறுக ஏற்பட்டாலும் அதற்கு இஸ்லாத்தில் சிறிதும் அனுமதி கிடையாது. எனவே, மேலே குறிப்பிட்ட பழக்கங்களில் இருந்து விலகி இருப்பது குறிப்பாக ஒரு விசுவாசிக்குக் கட்டாயக் கடமையாகும்.
இது போன்ற கெட்ட பழக்கங்கள் காரணமாக ஏற்படும் தீய விளைவுகள் படிப்படியாகவே தென்பட ஆரம்பிக்கும். முதலில் அந்த பழக்கத்திற்கு அடிமையானவரின் உடலாரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, அதைத் தொடர்ந்து தனது ஆற்றல்கள் மூலம் அவருடைய குடும்பத்தாருக்கு பயன் தந்து கொண்டிருந்த அந்த நபர் இறுதியில் திறன்கள் குன்றி இறுதியில் அக்குடும்பத்திற்கும், நாளடைவில் அவரை சூழவுள்ள சமூகத்திற்கும் இறுதியில் முழு நாட்டிற்கும் ஒரு சுமையாக மாறி விடுகின்றார். ஒரு தனிமனிதனின் அழிவு நாசம் ஒரு சமூகத்தின் அழிவாகவே இறுதியில் மாறுகின்றது.
முஸ்லிம்களை 'ஹைர உம்மத்' அதாவது 'மிகச்சிறந்த சமூகம்' என திருக் குர்ஆன் போற்றுகின்றது. இது தொடர்பான வான்மறை வசனத்தில் ;
'மனிதர்களுக்காக எழுப்பப்பட்ட சமூகங்களில் நீங்களே சிறந்தவர்களாவீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்கின்றீர்கள்' (ஆலு இம்ரான் 110)
என்று வந்துள்ளது.
சிறந்த உம்மத் என்ற தகைமை நன்மையை ஊக்குவித்து தீமையை விட்டும் மக்களை தூர விலக்கும் காரியத்தை செய்வதன் மூலமே நமக்கு கிடைக்கும். இக்கடமைகளை செய்யாமல் நமக்கு இந்த விருது கிடைக்காது. எனவே, இந்த பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் உம்மத்தினராக நாம் இந்த கொடிய பாவத்தில் இருந்து மக்களை தடுக்க பாடுபட வேண்டும்.
போதை வஸ்துக்களை நுகர்வதே போன்று அவற்றை தயாரிப்பதும், விற்பனை செய்வதும், தனி நபர்களுக்கும், சமூகத்திற்கும், முழு நாட்டிற்கும் தீமை ஏற்படுத்தும். தற்காலத்தில் ஒரு தேசத்தை நிலைகுழையச் செய்வதற்கு தீய சக்திகளால் அந்நாட்டிற்குள் தந்திரமாக போதை பழக்கம் புகுத்தப்படுகின்றமை தெரிய வந்துள்ளது. பொதுவாக போதை வஸ்துக்களும், மது பானங்களும் வெளி நாடுகளில் இருந்தே நம் நாட்டிற்கு தருவிக்கப்படுகின்றது அல்லது கடத்தப்படுகின்றது. இவைகளில் மதுபானத்தை விட ஹெரொயின் போன்ற போதை வஸ்துக்கள் அதிக அழிவை ஏற்படுத்துகின்றமை தெளிவு. ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய ஆளணியை இது செயலிழக்கச் செய்து ஒரு தேசத்தின் முன்னேற்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்து விடுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் ஒரு நாட்டில் வசிக்கும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பலவீனப்படுத்த போதை வஸ்துக்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதன் மூலம் அச்சமூகத்தை பொருளாதார, கலாசார, ஒழுக்க மற்றும் ஆன்மிக ரீதிகளில் சீர்கெடச் செய்வது தீய சக்திகளின் இலக்காகும். எனவே, இந்த மோசமான பழக்கத்தையும் அதன் பின்னணியில் இருக்கக் கூடிய இது போன்ற சதிகளையும் முறியடிப்பது நம் அனைவரதும் கடமையாகும். குறிப்பாக தீமையை தடுப்பது முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு கட்டாயக் கடமையாகவே ஆக்கப்பட்டிருப்பதை வல்ல அல்லாஹ் மேற்படி ஆயத்தில் சூசகமாக வலியுறுத்தும் நிலையில் போதை வஸ்துக்களுக்கு எதிராக செயற்படும் பணியை முஸ்லிம்கள் ஒரு போதும் புறக்கனிக்கவே முடியாது.
இப்பழக்கத்தை எங்கு கண்டாலும் அதை முஸ்லிம்கள் அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக ஏனைய சமூகத்தவர்களுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக இளைஞர் அமைப்புக்கஎளுடன் இணைந்து இதற்காக நாம் பாடுபட வேண்டும். போதை வஸ்துக்கள் விற்பனை நமது பகுதியில் நடைபெறுவதை கண்டால் உரிய அதிகாரிகளுக்கு அது பற்றி தகவல் தர வேண்டும்.
பொலிஸ், போதை தடுப்புப்பிரிவு போன்ற சட்டத்தை நிலைநாட்டும் அரச நிறுவனங்களுடன் தொடர்பாடலை பேணியவாறு செயற்பட வேண்டியதுடன்
தத்தமது மஹல்லாக்களை போதை பழக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாக கருதியவண்ணம் நமது மஸ்ஜிதுகளும் அவற்றின் நிர்வாகங்களும் இக்கைங்கரியத்தில் பயன்மிகு பங்களிப்பு செய்யலாம்.
போதை வஸ்துக்களை பயன் படுத்துவதும் அவற்றை விற்பனை செய்வதும் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் பற்றிய தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்கு எவரும் தயங்கக் கூடாது. இந்நாட்டின் பிரஜைகள் என்ற விதத்தில் இது எமது கடமையுமாகும்.
போதை பழக்கம் உள்ளவர்களுக்கு புணர்வாழ்வளிப்பதே போன்று, அதன் விற்பனை மற்றும் வினியோகத்தை தடுப்பதும், நமது பகுதிகளில் அதன் சூத்திரதாரிகள் இருப்பது தெரிய வந்தால் தயங்காமல் அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க துணை செய்வதும் மிக அவசியமாகும்.
இப்பணியில் தாவா அமைப்புக்களும் இணைய வேண்டும். ஏனெனில் இது போன்ற தீமைகளை தடுப்பது ஃபர்ளு கிஃபாயா வகையைச் சேர்ந்த கடமையாகும். ஆகவே, இதை பொருட்படுத்தாமல் பாராமுகமாக இருப்பதும் ஒரு பெரும் பாவமே.
அரச நிறுவனங்களோடும், ஏனைய சமூக நலன் அமைப்புக்களோடும், நாம் இணைந்து எந்தளவு இப்பணியை செயல்திறனுடன் மேற்கொள்கின்றோமோ அந்தளவு நமது நாடும், பிரஜைகளும் நமது எதிர்கால சந்ததியினரும் பாதுகாக்கப்படுவார்கள். இன்ஷா அல்லாஹ், நாடும் வளம்பெறும்.
நமது தாய்த் திரு நாடாகிய இலங்கை போதை பழக்கமற்றதொரு முன்மாதிரி தேசமாக உலகில் உயர்வடையச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு துணை புறிவானாக!

