சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு - அமைச்சர் ஹக்கீம்

பி. முஹாஜிரீன்-

சாய்ந்தமருதுப் பிரதேச தோணா அபிவிருத்தி மற்றும் வடிகாலமைப்பு பணிகள் உட்பட சாய்ந்தமருதை வனப்பு நிறைந்த பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) பிரதேச செயலாளர் எம்.வை. சலீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அங்கலாய்ப்புடன் இருப்பதாகவும் கலந்து கொண்ட குழுவினரால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இப்பிரதேசத்திற்கான அபிவிருத்திப் திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு அதற்கான பணிகள் நகர அபிவிருத்தி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சுக்களின் பொறியியலாளர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரும் இப்பகுதிக்கு விஜயம் செய்து பணிகளை முன்னெடுத்துள்ளனர். மீண்டும் ஒரு குழுவினரும் இங்கு வருகை தரவுள்ளனர். இத்திட்டங்களுக்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

இதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்காக அடுத்து வரும் வாரங்களில் இதற்கென பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களும் ஆளணியினரும் இங்கு வருகை தரவுள்ளனர். சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுவின் அலோசனைகளை உள்வாங்கியே அவர்கள் இதற்கான வேலைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்வேலைகளின் துரித நடவடிக்கைகளையும் முன்னேற்றங்களையும் மேற்பார்வை செய்து, காணி மீட்பு காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஹனீபா மதனி எனக்கு அறிக்கை செய்வார் எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் வை.எம். ஹனீபா உட்பட அபிவிருத்திக் குழுவின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -