19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இந்த வாரம் நிறைவேற்ற முடியாமல் போனால் பாராளுமன்றத்தைக் கலைக்கவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், பிரதமருக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு அதிகாரம் இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர், மாதுலுவாவே சோபித்த தேரர் இதுபற்றி தெரிவிக்கையில், 18 ஆவது அரசியலமைப்பைக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் முறையை மஹிந்த ராஜபக்ஸ ஏற்படுத்தினார். தனி நபருக்காக அரசியலமைப்பை தயாரிப்பது அல்ல. நாட்டிற்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பை உருவாக்க ஒன்றிணைய வேண்டும்.
100 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாகக் கூறிய பல உறுதி மொழிகள் உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்தல், 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல், புதிய தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தல் போன்ற பல விடயங்கள் அதில் உள்ளன. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது, என குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதியே பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும், பிரதமரால் அது முடியாது, ஜனாதிபதி தொடர்ந்தும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவே உள்ளார். எமது வாக்குகள் இன்றி எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இந்த வாரத்திற்குள் நிறைவேற்றுவதற்கு எவராவது எதிர்ப்புத் தெரிவித்தால், மறுநாளே பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சிறந்த தீர்வாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கம் ஒன்றை மாற்று விதத்தில் உருவாக்கி செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் இருக்கிறதா என்பது முக்கியமான பிரச்சினையாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
