பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் களமிறக்க இருக்கின்ற அணியே பலம் வாய்ந்தது -ஹக்கீம்!

ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
ந்த வாரம் முழு நாட்டுக்குமே ஒரு சோதனைக்காலமாகத் தோன்றுகிறது. அதாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கிறது. மூன்றில் இரண்டு வாக்குகள் தேவை என்கின்ற நிலையில், அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் தான் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (04) மாலை கல்குடா தொகுதியில், ஓட்டமாவடியில், நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் எழுபத்தொரு கோடி எழுபது இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கபடவுள்ள நீர் வழங்கல் திட்டத்திற்கான அங்குரார்பண வேலைகளை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது;

அரசாங்கத்திற்குள் இருக்கும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒரு பனிப்போரை நடாத்திக் கொண்டிருக்கின்றன. அது கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்து, இப்பொழுது அம்பலத்திற்கு வந்திருக்கின்றது. இது கூட்டுக் கட்சியினரான எங்களுக்கு சற்றுச் சங்கடமான விஷயமாக இருந்தாலும், அரசியலில் இப்படியான சமாச்சாரங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது.

மிக விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தப் பிரதேசத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கும், அடையாள ரீதியாகவும் ஆட்சித் தலைமைகள் (சனிக்கிழமை) இந்த மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் தலைமைகளும் தங்களது கட்சியினரை ஒன்றாகப் பயணிக்கச் செய்கின்ற விடயத்தில் அவர்கள் எவ்வளவு தான் உளப்பூர்வமாக முயற்சிகளை மேற்கொண்டாலும், அதனை சாத்தியப்படுத்திக் கொள்வதில் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கின்றார்கள்.

குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்த்து நின்றவர்கள் எல்லோரும் இப்பொழுது அவரை தமது கட்சியின் தலைவராக்கி விட்டு, அவர்களது அடுத்த கட்ட அரசியலை வடிவமைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வியூகங்களை வகுத்து, அவற்றைக் கையாள்வதில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கலிலிருந்து ஜனாதிபதி காப்பாற்றப்பட வேண்டும் என நாம் எல்லோரும் விரும்புகிறோம்.

இதுவரை இந்த நாட்டுக்கு கிடைத்த தலைமைத்துவங்களில் தன்னுடைய அதிகாரங்களை மக்களுக்காக கைவிடத் தயாராகின்ற தலைமைத்துவம் ஒன்றை இதுவரை நாம் கண்டது கிடையாது. தாம் வாக்குறுதி அளித்தபடி தன்னுடைய அதிகாரங்களை கைவிட வேண்டும் என்றும் அதில் குறைப்புச் செய்வதற்கு முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் முயற்சிக்கின்ற ஒரு தேசிய அரசியல் தலைமைத்துவம் கிடைத்திருப்பது அதுவும் கல்குடாவுக்கு அருகிலுள்ள பொலனறுவையிலிருந்து கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குறிய விடயமாகும்.

எமது கட்சிக்கு இருக்கின்ற ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அடையாளமற்றிருந்தவர்களை அரசியல்வாதிகளாக ஆக்கியது. இப்பொழுது அட்டகாசம் செய்கின்ற அமைச்சர்கள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எந்தவிதமான அரசியல் அடையாளமோ, அரசியல் முகவரியோ இல்லாதிருந்தவர்கள். இப்பொழுது அவர்கள் தம்மை அரசியல் ஜாம்பவான்களாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். 

இது இவ்வாறிருக்க, அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் களமிறக்க இருக்கின்ற அணிதான் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து, சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகின்ற விஷயத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருக்கின்றது. அண்மைக்காலமாக ஐ.நா சபையின் மிக முக்கிய மூன்று, நான்கு பேர் இங்கு வந்து விட்டுப் போயுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. முந்திய அரசாங்கம் கிடப்பில் போட்ட விஷயங்களை மிக விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதிலும் அரசாங்கம் மிகவும் முனைப்பாக இருக்கின்றது என்றார்.

பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, பொறியியலாளர் சிப்லி பாறுக், கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் பொறியியலாளர் ரியால் ஆகியோர் உட்பட கல்குடா மஜ்லிஸிஸ் ஷுரா அமைப்பினரும் உரையாற்றினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -