13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடை முறைப்படுத்தல் வேண்டும் என்பதில் புதிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மிகவும் உறுதியாக இருந்து செயற்படுகின்றார் என சுகாதார இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான ஹஸன் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள பல வைத்தியசாலைகளை பார்வையிட்டு அங்குள்ள குறைநிறைகளை கேட்டறியும் பொருட்டு இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலிஉட்பட அவரது உயரதிகாரிகள் கொண்ட குழுவொன்று நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சுகுணன் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் ஒன்று கூடலில் நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று கிழக்கு மாகாணத்திற்கு சகல அதிகாரங்களும் கொண்ட மாகாணசபையாக கிழக்கு மாகாண சபை திகழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக கிழக்கு மாகாண சபையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக ஒரு தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்திருக்கின்றோம் அதனூடாக அனைத்து வளங்களையும் பெற்றுக்கொள்ள அனைவரும் முன் வரவேண்டும்.
இலங்கையில், அனைத்து இனங்களுக்கும் அனைத்து அதிகாரங்களும் கிடைக்க வேண்டும் என்பதில் எமது சுகாதார அமைச்சர் உறுதியாக இருந்து செயற்பட்டு வருகின்றார் அதனொரு கட்டமே இந்த நாட்டிலே 13ஆவது திருத்தச்சட்டம் நடை முறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அதனூடாக சிறுபான்மை இனம் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.
மாகாணசபையின் கீழ் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளும் முன்வைக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தங்களை மாகாண சபையின் கீழ் இருந்து விடுபடச் செய்து மத்திய அரசாங்கத்திற்குள் இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து தர வேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைக்கின்றார்கள்.
ஆனால் மத்திய அரசு மாகாணத்தின்கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஒழுங்கான முறையில் வளங்களை பங்கீடு செய்திருக்குமானால் எந்த ஒரு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலையும் மத்திய அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள். மாறாக மத்திய அரசு ஒழுங்கான முறையில் வளங்களை பங்கீடு செய்யாமையே இதற்கு முழுக்காரணமாகும்.
எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே 100 நாள் வேலைத்திட்டத்தினை மையமாக வைத்து அமைச்சரின் வேண்டுதல்களுக்கு ஏற்ப கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைக்கவிருக்கின்றேன்.
அதனொரு கட்டமாக அண்மையில் அம்பாறையில் உள்ள 17 வைத்தியசாலைகளுக்கும் சென்று அங்கு உள்ள வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றேன்.
30 வருட போராட்ட காலத்தில் இரண்டு இனங்களுக்குள்ளும் ஒரு கசப்புணர்வு இருந்ததன் காரணமாக முஸ்லிம்கள், தமிழர் பிரதேசங்களுக்குச் செல்லாமலும், தமிழர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்குச்செல்வதிலும் மனக்கசப்புற்றிருந்தார்கள். அந்நிலை இனிமேல் எவரிடமும் வரக்கூடாது. அதனை ஓரங்கட்டிவிட்டு இரண்டு சமுகமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயற்படமுன்வரவேண்டும்.
வட, கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் சமூகத்தினது தாயகம். இக்கோட்பாட்டினை அடிப்படையாக வைத்துத்தான் முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் சிந்தனைகள் மூலம் செயற்பட்டு வருகின்றார்கள்.
இதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் எமது இரண்டு இனங்களும் ஒன்று சேர்ந்து, பழைய மனக்கசப்புக்களை மறந்து, எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து எமது மக்களின் குறைகளை போக்க உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
