தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி வழி நடத்த டக்ளஸ் தேவாநந்தா தயார்!

திர்காலத்தில் இணக்க அரசியலில் ஈடுபட போகின்றார்கள் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அறிவித்து உள்ளமையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவேற்கின்றது என்று இக்கட்சியின் பேச்சாளரும், தேசிய அமைப்பாளருமான பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்திக் குழுவின் விசேட கூட்டத்தில் நேற்று முன் தினம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசிய விடயங்கள் தொடர்பாக கருத்துக் கூறியபோதே இவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:-

“ எதிர்ப்பு அரசியலை விட்டு விட்டு இணக்க அரசியல் செய்யப் போகின்றார்கள் என்று முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளமையை எமது கட்சி முழுமனதுடன் வரவேற்கின்றது. ஏனென்றால் இதை வரவேற்கின்ற தார்மிக உரிமை எமக்கே உள்ளது.

ஏனென்றால் நாம் ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட காலம் தொட்டு இணக்க அரசியல் வழிமுறையையே எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய கைக்கொண்டு வந்திருக்கின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற எமது கொள்கை இணக்க அரசியலை அடி நாதமாக கொண்டது ஆகும். வட மாகாணத்தில் நாம் எமது மக்களுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கின்ற வரப் பிரசாதங்கள் அனைத்தும் எமது இணக்க அரசியலுக்கு கிடைக்கப் பெற்ற வரங்களே ஆகும். எமது இணக்க அரசியல் வழிமுறையை நோக்கிய பயணத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது ஈடுபட்டு உள்ளது. இது எமக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்ற விடயம் ஆகும்.

ஆனால் எமது இணக்க அரசியல் வழிமுறையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரணாகதி அரசியல் என்று சொல்லி கடந்த காலங்களில் கிண்டல் செய்து வந்திருக்கின்றது. எதிர்ப்பு அரசியலை தொடர்ந்து நடத்தி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், வாய்ப்புக்கள், தீர்வுகள் ஆகியவற்றை தவற விட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு தமிழினத்தையே கொண்டு போய் தள்ளியது. இப்போது முதலமைச்சருக்கு ஏற்பட்டு இருக்கக் கூடிய திடீர் ஞானம் அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு ஏற்பட்டு இருந்து இருந்தால் தமிழினம் எப்போதோ தப்பிப் பிழைத்து இருக்கும் என்று கழிவிரக்கம் கொள்ளவே எம்மால் இப்போது முடிகின்றது.

எதிர்ப்பு அரசியல் நடத்துவது எப்போதுமே சுலபம் ஆனது. அது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு மிக நன்றாக பழக்கப்பட்ட விடயம். ஆனால் இணக்க அரசியல் வழிமுறை சுலபமானது அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு பரிச்சயம் இல்லாத புதிய விடயம் ஆகும். இணக்க அரசியலில் வெற்றி பெற புரிந்துணர்வு, விசுவாசம், அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விட்டுக் கொடுப்பு, மதி நுட்பம் ஆகியன அவசியம். உசுப்பேற்றும் உணர்ச்சிப் பேச்சுக்களும், முறுக்கேற்றும் வீர வசனங்களும் இணக்க அரசியலுக்கு உதவ மாட்டாது.

இந்நிலையில் இணக்க அரசியல் சாணக்கிய வழிமுறையை முதலமைச்சர் அடங்கலாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றமைக்கு எமது செயலாளர் நாயகம் எப்போதும் தயாராகவே இருக்கின்றார். வேண்டும் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி வழி நடத்தவும் தயாராகவே இருக்கின்றார். இது காலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்து இருக்கின்ற கட்டாயமும், கட்டளையும் ஆகும். அதே போல இணக்க அரசியல் சாணக்கிய வழிமுறையின் பலன்கள் எமது மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கப் பெற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -