ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் எம்.பி அவர்கள் இன்று அரசியல் கையறு நிலைக்குச் சென்றுள்ளார். பொதுவில் சொல்லப் போனால் அவர் தன்னை அரசியல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்றைய மைத்திரியின் நல்லாட்சியில் அவரை இணைக்துக் கொள்ளக் கூடாது என்ற விடயத்தில் பல கட்சிகள் ஒரு முடிவில், இணக்கத்தில் உள்ளன. இதன் காரணமாக அவர் இந்த அரசில் இணைக்கப்படமாட்டார் என்பது தெளிவாகி விட்டது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட அவருக்கு சோதனைமிக்க களமாகவே அமையப் போகிறது. அவரது கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இன்று அவரை விட்டு விலகிச் செல்ல தயாராகி விட்டனர். விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். தவம் அவர்கள் இந்த விடயத்தில் அதிகப் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதாவுல்லாஹ் அவர்கள் அண்மைய ஜனாதிபதி தேர்தலில் சற்று தன்னை அடக்கி வாசித்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. பிரதேச வேறுபாட்டு அரசியலில் அவர் காட்டிய அக்கறையும் அவரது இன்றைய பின்னடைவுக்கு ஒரு பிரதான காரணம். அனைவரையும் அணைத்து அனைத்துப் பிரதேசங்களையும் இணைத்து அவர் அரசியல் செய்யத் தவறியது கூட இன்று அவருக்கு நேர்ந்த கதிக்கு காரணம்.
மும்மலத்தை விட்டொழிப்பது தொடர்பில் சைவ சமயம் கூறும் விடயங்களை நான் படித்துள்ளேன். அதில் ஒன்றுதான் இரண்டாம் மலம் என்னும் கன்மம். அதாவது, வினைப்பயன். நமது செயல்களால் கூட நாம் எம்மையே துன்ப வலையில் சிக்க வைத்துக் கொள்கின்றோம். எமது தவறுகளை உணர்ந்து மேலும் அவற்றை செய்யாமல் வாழ்வதே சிறந்தது.ஆனால், அதனைக் கூட அதாவுல்லாஹ் செய்யவில்லை அதன் விளைவே இன்று அவரை ஊழிப்பயன் அனுபவிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.
இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷவை அதிகம் நம்பியதும் ,நேசித்ததும் அவர் செய்த மாபெரும் தப்பு.. இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு துரோகமும் அநீதிகளையும் இழைத்துக் கொண்டிருந்த ஆட்சித் தலைவனை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டுமென்று முஸ்லிம் சமூகமே ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த போது அதாவுல்லாஹ் போன்றவர்கள் அதற்கு மாறாகச் செயற்பட்ட விதம் கூட இறைவனுக்குப் பொருந்தாத செயலாகவும் அமைந்திருக்க கூடும். அதனை விளைவும் இன்றைய நிலைக்கு காரணமாகலாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வர வேண்டும் என அதாவுல்லாஹ் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு கருத்தை அவர், பேருவளை, தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கடந்த அரசின் இனசங்காரம் இடம்பெற்ற பின்னரே வெளியிட்டிருந்தார். இதன் மூலம் அவரது சமூக அக்கறை புரியப்பட்டிருந்தது. அவ்வாறனதொரு கருத்தை அதாவுல்லாஹ் நா கூச்சமின்றி தெரிவித்தமையை இறைவன் கூட ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்.
இன்று அனைத்துமே சேர்ந்து வஞ்சித்து அரசியலில் அவரை சஞ்சாரப் பிணமாக்கி விட்டன. என்ன செய்யலாம்? வினை விதைத்தால் என்ன தினையா விளையப் போகிறது?
