கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாதென பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தலுக்கோ கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவதற்கோ ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரங்களை மேற்கொள்வதற்கோ இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவ்வாறு மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 9 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்தப் பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4,279 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மேற்கூறிய எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாதென சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.

0 comments :
Post a Comment