ஈராயிரம் நூல்களை ஆய்ந்த பேராசிரியர் அல்லாமா நூலறிமுகம்!

நூலறிமுகம்


நூல் : ஈராயிரம் நூல்களை ஆய்ந்த பேராசிரியர் அல்லாமா
உவைஸ் - நவீன காவியம் (ஆய்வு நூல்)
நூலாசிரியர் : மார்க்க மணிச்சுடர் மௌலவி காத்தான்குடி பௌஸ்
வெளியீடு : மௌலவி காத்தான்குடி பௌஸ் (ஷர்கி)
விலை : 300/-

நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்



பேராசிரியர் அல்லாமா உவைஸ் இலங்கைத் திருநாட்டிலிருந்து தமிழையும், இஸ்லாமிய இலக்கியத்தையும் உலகறியச் செய்தவர்களுள் முக்கியமானவர். இவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற பணியினை மிகவும் காத்திரமான பொறுப்புணர்வுடன் 'ஈராயிரம் நூல்களை ஆய்ந்த பேராசிரியர் அல்லாமா உவைஸ்' எனும் பெயரில் நவீன காவியத் தொகுதி ஒன்றினை வெளியிட்டுள்ளார் காத்தான்குடியைச் சேர்ந்த மார்க்க அறிஞரான மௌலவி பௌஸ்(ஷர்க்கி)அவர்கள். அந்தவகையில் பேராசியர் நினைவுகூறப்படுவதுடன், அவர்படைத்த இலக்கியங்கள் மீண்டும் ஒருமுறை இலங்குவதற்கு வழிசமைத்துள்ளார் நூலாசிரியர் பௌஸ்.

'தோலைத் தொட்டிலாக்கி வாழ்வை மெழுகுதிரியாக்கி என்னை இந்நிலைக்குக் கொண்டுவந்த என்னருமைத் தாய்க்கு' சமர்ப்பிக்கும் இந்நூல், அல்லாமா உவைஸ் அவர்களைப் பற்றி கவிதை வடிவில் யாத்துள்ளமை மிகச் சிறப்பானதாகும். 49 உப தலைப்புக்களில் அல்லாமா உவைஸ் அவர்களின் வாழ்வின் அனைத்துவிதமான அம்சங்களையும் கவிதையிலேயே கூறவிளைகின்றார் நூலாசிரியர் பௌஸ். பேராசியரியர் உவைஸ் அவர்கள் பிறந்த ஊருக்கு கொழும்பிலிருந்து ஆரம்பித்து அவர் வாழ்ந்தகாலமுதல் அவர் மறையும் வரையில் ஒவ்வொரு கால கட்டங்களையும் படம்பிடித்துக் காண்பிப்பதுபோன்ற உணர்வினை மௌவி பௌஸ் அவர்களின் நூல் ஏற்படுத்திவிடுகின்றது.

முகவுரை தந்துள்ள காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் 'ஈராயிரம் நூல்கள் ஆய்ந்த ஈடில்லா பேரறிஞர்' எனும் தலைப்பில் 'இந்நூலாசிரியர் நீண்டகாலம் பேராசிரியருடன் நெருங்கி வாழ்ந்தவர். அவர்பற்றி முழுமையாக அறிந்திருப்பவர். இவரது இலக்கிய முயற்சிகளுக்கு உந்துசக்தியாகவும் அல்லாமா இருந்திருக்கின்றார். இங்குள்ள ஒவ்வொரு வரிகளிலும் அந்த உறவின் நெருக்கத்தைக் காணமுடியும். அதன்காரணமாக அல்லாமா பற்றி இவ்வாறு ஒரு நவீன காவியத்தை அவர் பெயரில் படைக்க முயன்றது வரவேற்கத்தக்க தொன்றாகும்' எனக் கூறுகின்றார்.

அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் 'கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு என்று விசாலமாக இலக்கியப் பரப்பில் இயங்கிவரும் பௌஸ் எல்லோரையும் கவரக்கூடிய வகையில் பேசக்கூடிய நாவலராகவும் திகழ்ந்தவர். இவரால் எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கியம், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ஆகிய அம்சம்களில் அல்லாமா உவைஸின் உறவு நண்பர் பௌஸ் அவர்களுத் தெளிவையும் விளகங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு ஓய்ந்துவிடாமல் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது' என்கிறார் கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன். சிறப்புரையினை இலங்கை வானொலி புகழ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்கள் வழங்கியிருக்கின்றார்.

என்னுரையில் நூலாசிரியர் 'இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை ஊர் ஒழுங்கையிலிருந்து உலகத் தெருவுக்குக் கொண்டுவந்த உத்தமர் உவைஸ் அவர்கள் பற்றி எழுதக் காரணம் எனக்கும் அவருக்கும் இருந்த இலக்கிய இஸ்லாமிய உறவுகள்தான்' என்கிறார் பௌஸ். கொழும்பிலிருந்து பாணந்துறை எனும் தலைப்பில் அவர் வரைந்துள்ள வரிகள் இவை.

கொழும்பிலிருந்து பாணந்துறை
பதினான்கு மைல்கள் இருமணி நேரம்
ரெயிலில் செல்ல ஒரு மணி நேரம்
பஸ் இலக்கம் நூறு
கொழும்பை கொஞ்சிவிட்டு காலிமுகத்திடல்
கடலோரக் காற்றில் குதூகலித்து வந்தேன்
கொல்பிட்டி குறுக்கறுக்கிறது
அடுக்குமாடி ஹோட்டல்கள்
அற்புதமான கட்டிடங்கள்

ஒருநாட்டின் நாகரீக வலயம் கொல்பிட்டி...இவ்வாறு பாணந்துறை வரையில் ஒவ்வொரு ஊரையும் செப்பமாக கவிதைத்துவ வடிவில் வரைகின்றார் கவிஞர்.

மேலும், சாதனை படைக்கும் சரிக்கமுல்லை எனும் தலைப்பில்

சொந்த ஊர் மக்களைப்போல
வந்த ஊர் மக்களும் சுகமாக வாழ்கின்றார்கள்
இந்நிலைக்கு இந்த ஊர் மக்களின்

இனிய கல்புதான் காரணம்... என்றும்; கூறுகின்றார் நூலாசிரியர் பௌஸ் மேலும் வந்தாரை வாழவைக்கும் பாணந்துறையில்
ஹொரேதெடுவ கொறகாளை கெசல்வத்தை
பள்ளிமுல்லை வத்தல்பொல தொட்டவத்தை
அம்பலாந்துவை எலுவில, மோதற

எல்லாம் பாணந்துறை முஸ்லிம் பகுதிகள்தான்.... என்றும் சுவைபடக் கூறிகின்றார்.

மேலும் அறிஞரை சுமந்த கருவறை, கல்விமான் உவைஸின் கல்லூரிகள், நேசத்துடன் கல்வி புகட்டிய ஆசான்கள், பல்கலைக்கழகம் கண்ட அல்லாமா உவைஸ், உயர்தொழில்;வாய்ப்பில் உவைஸ், தத்துவமேதையின் துணைவி சித்தி பாத்திமா, தாயும் தாரமும் தயாரித்த சமையல்கள்... இவ்வாறு ஒவ்வொரு தலைப்பும் அல்லாமா உவைஸ் அவர்களைச் சுற்றியே செல்கின்றது. ஒவ்வொரு விடயங்களையும் நவீன உரைநடைபோன்ற கவிதை வடிவில் இலகுதமிழில் அழகுறமிக்கதாகவும், தகவல்களை பரிபூரணமான விளக்கத்துடனும் கூறுவது உண்மையிலேயே புதியதோர் இலக்கியம் எனலாம்.


இந்தியாவில் ஓர் இலங்கையன் பேராசிரியர் உவைஸூடன் பேராசிரியர் அஜ்மல்காண் எனும் தலைப்பில் இவ்வாறு கூறுகின்றார்.

இந்தியா, இலங்கையில்
இஸ்லாமி – தமிழ் இலக்கிய
நூல்களை வெளிச்சத்திற்குக்
கொண்டு வந்த வித்தகர்
உத்தமர் உவைஸ்.
தமிழ் ஆய்வு மாநாடு!
கருத்தரங்கு ஆய்வரங்கு1
மூலகர்த்தா முஹம்மது உவைஸேதான் என்றும் சுவைபடக் கூறுகின்றார் பௌஸ்.


மேலும், தத்துவ மேதை தந்த புத்தகப் பூங்கா எனும் தலைப்பில் அல்லாம் உவைஸ் அவர்களது 49 நூல்களின் பட்டியலும், பேராசிரியர் பதிப்பித்த 16 நூல்களின் பட்டியலும், இவரால் மொழிபெயர்க்கப்பட்ட 12 நூல்களின் பெயர் விபரங்களும், கலாநிதி உவைஸ் அவர்கள் பற்றிய ஒன்பது வெளியீடுகளின் பெயர்ப் பட்டியலையும் நூலாசிரியர் தந்துள்ளவிதம் அற்புதமானவை.

அல்லாமா அவர்கள் மரணித்ததன் பின்னர் அன்னாரது நூலகத்தை ஆய்ந்து நூல்களை வகைப்படுத்தி மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிக்கப்பட்ட நூல்களின் விபரங்களும், பேராசிரியருக்காக பேனை பிடித்த 101 எழுத்தாளர்களது பெயர்ப்பட்டியலும், இஸ்லாமிய இலக்கியப் பெருவிழா காயல்பட்டணம் - 2011 இல் நடைபெற்றபோது அங்கு இந்நூலாசிரியரால் வாசிக்கப்பட்ட கவிதை வரிகளும் இந்நூலாசிரியரின் நூல்கள் மற்றும் ஏனைய விபரங்களுடன், அல்லாமா அவர்களது அல்பத்தையும் இணைத்துள்ளார். நூலாசிரியரான மௌலவி பௌஸ். அடுத்த தலைமுறைக்கு கையளித்துள்ள விதம் அற்புதமானது. இந்த பொக்கிஷம் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :