சர்வதேசத்தின் தயாரிப்பில் ரணில் விக்கிரமசிங்கவின் திரைக்கதையில், சந்திரிகா பண்டாரநாயக்க இயக்கும் மெகா தொடரே இந்த நாடகம். இந்த நாடகத்தின் கதாநாயகன் மாத்திரமே மைத்திரிபால. ஆனால் நாடகத்தின் அடுத்த பகுதி என்னவென்பதையே அவர் அறியாதுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க சுனாமி காலத்தில் புலிகளுடன் சுனாமி நிவாரண சபையை ஏற்படுத்தியமை தொடர்பில் முரண்பட்டுக் கொண்டே அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமயவினர் எதிரணியின் பொது வேட்பாளருடன் எவ்வாறு இணையப் போகிறார்கள்.
சர்வதேசத்தின் சூழ்ச்சியிலேயே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற புலிகளின் ஆதரவாளர்கள் மாநாடு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனந்தி சசிதரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் கலந்து கொண்டனர். அவ்வாறானவர்களின் கோரிக்கைகளும் இந்த எதிரணியில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, இதுவொரு பயங்கரமான செயற்பாடாகும்.
ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தபோது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார். அந்த அமைதியின் அர்த்தம் என்ன? அந்த நேரத்தில் மஹிந்த ராஜபக் ஷ போன்ற ஒருவர் ஜனாதிபதியாக இருந்திருந்தார் நிச்சயமாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பார். ஆனால், சந்திரிகா அதனை அப்போது செய்யவில்லை. அவ்வாறான ஒரு குழுவினருடனேயே மைத்திரிபால சிறிசேன இணைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்தவர்களுக்கா, பாதுகாத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கா வாக்களிக்க வேண்டும். என்பதையும், மாறாக கட்சியை சீரழிக்கின்றவர்களுக்கா வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டும்.
நாட்டின் அரசியல், பொருளாதார, ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையும் நிலைபெறச் செய்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே. ஆனால், கடந்த காலங்களில் புலிகளை பாதுகாக்க முனைந்தவர்களே எதிரணி மற்றும் பொதுவேட்பாளரின் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் டளஸ் அழகப்பெருமாள்
சர்வதேசத்தின் இந்த சூழ்ச்சி பற்றிய ஆழ அகலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சர்வதேசம் தனது கைப்பொம்மையாக சிலரை வைத்துக்கொண்டு தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றது. மிகவும் பயங்கரமானதும் பாரதூரமானதுமான விடயமாகும்.
அநுர பிரியதர்ஷன யாப்பா
எம்மீது நம்பிக்கை வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக என்னை நியமித்தமைக்கு கட்சிக்கு எனது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு இந்த பதவி எனக்கு கிடைத்த ஒரு பாக்கியமாக கருதுகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவின் தவறான முடிவையிட்டு நான் கவலையடைகின்றேன். அதேவேளை, அவர்களுக்கு இந்த கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்கோ சீரழிப்பதற்கோ எவ்வித உரிமையும் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றார். ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களை எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. உள்ளூராட்சி சபைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அதிகாரங்களை கைப்பற்ற முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினுடைய காலத்திலேயே கட்சி அதிகமான வளர்ச்சியைக் கண்டது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலகட்டத்தில் பயங்கரவாதமே பலமடைந்திருந்தது. ஆனால், அதனையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே முடிவுக்குக் கொண்டுவந்தார்.
நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பொருளாளர் டளஸ் அழகப்பெரும, மற்றும் உபதலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த மற்றும் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான பௌஸி, ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment