நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக அதில் உள்ள அதிகாரங்கள் சில நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் களம் பற்றியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பற்றியும் ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று தேர்தல் களத்தில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். அரசுடன் இருந்த முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணியுடன் இணைந்துள்ளார். 

ஆனால் முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாதிகள் பாரிய பல அநியாயங்களை செய்த போது இவரும் ஜாதிக்க ஹெல உறுமயவும் வாய்மூடி கைட்டி வேடிக்கை பார்த்தார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அவரும் மற்றவர்களும் ஜனாதிபதியுடனான முரண்பாட்டின் காரணமாகவே அவரோடு முறுகிக்கொண்டு வெளியே வந்துள்ளனரே தவிர இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை கருத்திற்கொண்டு வெளியேறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் இந்த ஆட்சிக்கு துணை நின்றவர்களே அடுத்த ஆட்சியையும் கொண்டு சென்றால் நமது துன்பங்கள் தொடராது என்பதற்கு யாராலும் உத்தரவாதம் வழங்க முடியுமா?

எம்மைப்பொறுத்தவரை நிறைவேற்று அதிகார முறை மூலமே சிறு பான்மை மக்களுக்கான தீர்வை ஓரளவு கிடைக்கப்பெற முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே வேளை ஜனாதிபதி நீதி மன்றத்துக்கு பதில் அளிப்பவராக இருப்பதுடன் பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். அதே போல் நீதியரசர்களை நியமிப்பது, என்பது அதற்கான தனியான ஆணைக்குழு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். 

மேலும்; அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் அந்தந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறான சில மாற்றங்களையே ஜனாதிபதி அதிகாரத்தில் நாம் எதிர் பார்க்கிறோமே தவிர முற்றாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க ஆதரவளிப்பது என்பது சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகும்.

தற்போது எதிரணியுடன் சேர்பவர்களில் பலர் முஸ்லிம்களின் ஹலால் பறிக்கப்பட்டு பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது, முஸ்லிம் சமூகம் பொய்யான குற்றங்கள் சுமத்தப்பட்டு அவமானங்ளை சந்தித்த போது முஸ்லிம் சமூகம் சார்பாக பேசாதவர்களேயாகும். 

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஹெல உறுமய போன்ற இனவாத கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை மீண்டும் வதைப்பதற்கே இவர்களை வழி நடாத்தும். அதே போல் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுபல சேனா இவர்களுடன் இணைய வந்தால் நிச்சயம் அவர்களையும் இணைத்துக்கொள்வார்கள் என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும். அத்துடன் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து சிறுபான்மை மக்களுக்கு உதவியதாக இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு பாராளுமன்ற அதிகார ஆட்சியையும் நாம் காணவில்லை.

நமது உரிமைகள் தேவைகள் பற்றி பாராளுமன்றத்துக்கு விடப்படும் போது அவை விவாதம், கருத்துக்கணிப்பு, பெரும்பான்மை போன்ற காரணிகளால் இழுபட்டுச்செல்லுமே தவிர எத்தகைய பலனையும் நாம் காண முடியாது.

ஆகவே முஸ்லிம்கள் எடுத்தவுடனே மைத்ரிக்கு ஆதரவு என்று சிந்திக்காமல் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு எமது பெறுமதி மிக்க வாக்குகளை காட்டி நமது உரிமைகள் தேவைகளை ஒப்பந்தமாக முன் வைத்து அது ஏற்கப்படும் நிலைiயிலேயே நமது ஆதரவை தர முன்வரவேண்டும். இதற்கான முயற்சிகளில் உலமா கட்சி ஏலவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை முன்னெடுக்க உலமா கட்சியின் தலைமையில் ஒற்றுமைப்படும் படி நாம் முஸ்லிம் சமூகத்தை அழைக்கின்றோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :