ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியமை எம்மைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான விடயமாகும். ஜாதிக ஹெல உறுமய இல்லாத அரசில் ஜனாதிபதிக்காக நாங்கள் தலை நிமிர்ந்து வாக்குக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் தொலைத்தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதியமைச்சர் பிரபா கணேசன் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் வெற்றி பெறுவது உறுதி. ஜனாதிபதி இந்நாட்டுக்கு இன மத பேதமின்றி சேவையாற்றி வருகின்றார். தற்போது பொதுமக்கள் மத்தியில் இரண்டு தெரிவுகள் உள்ளன. அதாவது ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை தொடர்ந்தும் பேணுவதா அல்லது அவற்றைக் குழப்பிக் கொள்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் பொதுவேட்பாளர் குறித்து பேசுகின்றனர். ஆனால் நாட்டின் அனைத்து மக்களினதும் சிறந்த பொதுவேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வே காணப்படுகிறார்.
கொழும்பில் உள்ள தேர்தல் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளிலேயே கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இம்முறை இவ் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.
எதிர்தரப்பினர் மத்தியில் பொது வேட்பாளர் இல்லாமை காரணமாக வேறு இடங்களில் இருந்து பொதுவேட்பாளரை அவர்கள் தேடி அலைகின்றனர். அதேவேளை ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளது. இக்கட்சியின் வெளியேற்றமானது தமிழ்பேசும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது எமது அரசாங்கத்தில் இனவாதம் பேசுவதற்கு யாரும் இல்லை. இனி எம்மால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குமாறு அச்சமின்றி தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுக்க முடியும்.
எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதியானது என்றும் கூறினார்.

0 comments :
Post a Comment