நாட்டில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளோடு இணைந்ததாக நீதித்துறையும் முன்னேற்றம் கண்டு வருவதாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சீன உயர்நீதிமன்றத்தில் நிறைவேற்று உதவி தலைவர் நீதியரசர் ஷென் டியோங் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் புதன்கிழமை (12) முற்பகல் நீதியமைச்சர் ஹக்கீமை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளும் நீதித்துறையைப் பொறுத்தமட்டில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் பயனுள்ள தொழில்நுட்ப, சட்டரீதியான பரிமாற்றங்களை செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தியதோடு, மொழிப் பிரச்சினை காரணமாக இதுவிடயத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கிக்கொள்வதற்கான வழிவகைகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தின் 50 ஆவது அமர்வு கொழும்பில் இடம்பெற்ற பொழுது அதில் சீனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டிய பொழுது, நீதியரசர் ஷென்டியோங் அடுத்த ஆண்டில் சீனாவின் பீஜீங் நகரில் நடைபெறவுள்ள பிரஸ்தாப அமைப்பின் அடுத்த செயலமர்வில் அமைச்சர் ஹக்கீமும் தமது அமைச்சின் செயலாளருடன் கலந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
மத்தியஸ்த சபைகளின் ஊடாக, நீதிமன்றங்களுக்கு புறம்பாக பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காணும் வழிமுறை இலங்கை முழுவதிலும் நடைமுறையில் இருப்பதாகவும், கிராமிய மட்டத்தில் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்களைக் கொண்டு செயல்படும் மத்தியஸ்த சபைகளை ஒத்த அமைப்புகள் சீனாவிலும் காணப்படுவதாக தாம் அறிந்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் மிக விரைவில் செயல்படவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வேறு நாடுகளிலும் வர்த்தகம், கைத்தொழில், கட்டட நிர்மாணம் போன்ற துறைகளில் ஏற்படும் பிணக்குகளுக்கு தீர்வு காண்பது இலகுவாக இருக்குமென்றும் அமைச்சர் கூறினார். அவ்வாறானதொரு நடுத்தீர்ப்பு மையம் தமது நாட்டிலும் செயல்படுவதாக நீதியரசர் ஷென் தெரிவித்தார்.
நீதியரசர் ஷென் டியோங் மேலும் கருத்து தெரிவிக்கும் பொழுது, தமது குழுவினர் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்ற பின்னர் இறுதியாக இலங்கைக்கு வந்திருப்பதாகவும் இங்குள்ள நீதிமன்றங்களினதும், நீதித்துறையினதும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஹக்கீம் வழங்கிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவையென்றும் கூறினார்.
இந்த உயர் மட்டத் தூதுக்குழுவினர் கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியை சென்று பார்வையிட்டனர்.
நீதியமைச்சர் ஹக்கீமுடன், அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி சில்வா, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.கே.டீ.டீ. அரந்தர அமைச்சரின் இணைப்புச் செயலாளரட ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடக செயலாளர்
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment