உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார். நமது அரசு ஜனாதிபதியின் அரசாக இருக்க போவதில்லை. அந்த அரசு அடுத்த பாராளுமன்றத்தில் தான் ஆரம்பமாகும்.
ஆனால், இன்றைய அரசு அப்படியல்ல. இவர்கள் ஒரு இடைக்கால அரசை அமைக்க போவது இல்லை. தொடர்ந்து இதே ஜனாதிபதியுடன் இதே அரசை நீடிக்க விரும்புகின்றார்கள். இப்போதும் இவர்கள்தான் ஆட்சியிலும் இருப்பதால், கூட்டமைப்பின் கேள்விகளுக்கு அரசாங்கம்தான் பதில் கூற வேண்டும். எனவே கூட்டமைப்பின் ஆதரவு வேண்டுமென்றால்,சுரேஷ் எம்பியின் கேள்விகளுக்கு அமைச்சர் பசில் ராஜபக்சதான் பதிலளிக்க வேண்டும்.
எதிரணி பொது வேட்பாளர் பற்றி குறிப்பிட்டு விட்டு சுரேஷ் எம்பி என்னை பார்த்து புன்னகைத்தார். அதன் அர்த்தம் என்னவோ தெரியவில்லை. ஆனால், அவரது கேள்விகளை அவர் அரசு தரப்பிடம்தான் முன்வைக்க வேண்டும் என அவருக்கு நான் தோழமையுடன் கூறுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
சுரேஷ் எம்பி இங்கே 13ம் திருத்தம் பற்றியோ, அதிகார பகிர்வு பற்றியோ பேசவில்லை. இதையெல்லாம் பேசி பயனில்லை என்று நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் வடபகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார். மீனவர்களின் கடல்வள அபகரிப்பு, காணி அபகரிப்பு, மக்களின் சிவில் வாழ்வில் இராணுவம் மூக்கை நுழைப்பது,நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் ஆகிய பிரச்சினைகள் பற்றிதான் பேசினார்.
இந்த பிரச்சினைகளுக்கு உத்தேச ஜனாதிபதி தேர்தலிலே ஆளும் மற்றும் எதிரணி வேட்பாளர்களின் பதில்கள் என்ன என்று அவர் கேட்கிறார். எனவேதான் நான் சொல்கிறேன். கூட்டமைப்பின் ஆதரவை இன்று கோரியுள்ள, அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசு இந்த ஆட்சியையும் நீடிக்க விரும்புகிறது. அதேபோல் இந்த ஆட்சிமுறைமையையும் நீடிக்க விரும்புகிறது.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைபாடுகளை நாடறியும். எனவே நாங்கள் இது தொடர்பாக பதிலளிக்க அவசரப்பட போவதில்லை. எதிரணி பொது வேலைத்திட்டம் ஒரு இடைகால ஜனாதிபதி நிர்வாகமே. இந்த சர்வதிகார ஆட்சிமுறைமையை முடிவுக்கு கொண்டு வருவதே எம் நோக்கம். அதையடுத்து பாராளுமன்ற அரசு அமையும் போது இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தேட முடியும்.
எமக்கு முன்னால் மூன்று கட்டங்கள் உள்ளன. ஒன்று, பொது கூட்டணி. இரண்டு, குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம். மூன்று, பொது வேட்பாளர். இன்று பொது கூட்டணி என்ற வண்டியை தயாரித்துள்ளோம். அடுத்து வண்டியை இழுக்கும் பொது வேலைத்திட்டம் என்ற குதிரையை வண்டியில் கட்டுவோம். இதையடுத்து, இந்த குதிரை வண்டியை ஓட்டி செல்ல தகுதியான,பொது வேட்பாளர் என்ற வண்டியோட்டியை தெரிவு செய்வோம். அனைத்தும் உரிய முறையில் நடக்கின்றன. அவை உரிய வேளையில் வெளியே வரும்.
பொது வேட்பாளர், பொது எதிரணி, பொது வேலைத்திட்டம் பற்றி அரசு தரும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற கூடாது. எம்மை விட எம்மை பற்றி இன்று இந்த அரசுக்கு தான் அக்கறை அதிகம். இதை நிறுத்தி விட்டு இன்றைய ஆட்சியை நீடிக்க விரும்பி, அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் இந்த அரசு, கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு பதில் தரவேண்டும்.

0 comments :
Post a Comment