இஸ்மாயில் தீன்-
பதுளை, ஹொஸ்லந்தையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தினால் உயிர், உடமைகளை இழந்து நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற போதிலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் மாத்திரம் இந்நடவடவடிக்கை முன்னேடுக்கப்படாதிருப்பது குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது.
இது விடயத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கரிசனை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அது குறித்து பரிசீலிக்காமல் தட்டிக் கழிக்கப்பட்டிருப்பதானது இந்த ஊரின் கௌரவத்திற்கு பெரும் இழுக்காகும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமதூர் மக்களுக்கு மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தொண்டர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்ட வரலாற்றை நாம் மீட்டிப் பார்ப்பது அவசியம் எனவும் சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அளுத்கம தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதிலும் இது போன்றே அலட்சியம் காட்டிய சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், இளைஞர்களின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து நிதி சேகரித்து அனுப்பியமை இங்கு ஞாபகப்படுத்தக்கது.
ஆகையினால் 99 மரைக்காயர்கள் அங்கம் வகிக்கின்ற சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், மண்சரிவு அனர்த்தத்தினால் உயிர், உடமைகளை இழந்து நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு உதவும் முகமாக நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்புவதற்கு மேலும் தாமதிக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment