அண்மையில் காலமான வன்னி மைந்தன் சுல்தான் கனி ஆப்தீன்.

என்.எம்.அமீன்-

1982ஆம் அண்டு முன்னாள் சபாநாயகர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் வவுனியாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது அவரை அணுகி க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த இளைஞர் ஒருவர் தனக்கு தொழில் ஒன்றைப் பெற்றுத் தருமாறு கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.

கடிதத்தை உடன் உடைத்துப் பார்த்த முன்னாள் சபாநாயகர் அந்த இளைஞனை அடுத்த தினமே தன்னை கொழும்பில் வந்து சந்திக்குமாறு கேட்டுள்ளார். கொழும்பு வந்ததும் குறிப்பிட்ட இளைஞரை தான் தலைமை தாங்கும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் நிர்வாக உதவியாளராகச் சேர்த்து சிறிது காலத்தின் பின் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் ஒரு தொழிலைப் பெற்றுக் கொடுத்தார்.

அந்த இளைஞன் அண்மையில் காலமான வன்னி மைந்தன் சுல்தான் கனி ஆப்தீன்.

தனது 55ஆவது வயதில் இளையடி எய்திய எஸ்.கே. ஆப்தீன் வவுனியா சின்ன சிப்பிக் குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 24.11.1958இல் பிறந்த இவர் தனது 55ஆவது பிறந்த தினத்தை அடைவதற்கு 25 நாட்கள் இருக்கையில் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் இறையடி சேர்ந்தார்.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்ற இவர் தனது பாடசாலை கல்விப் பருவத்திலிருந்தே எழுத்துத் துறையிலே ஈடுபட்டுவந்தார். கவிதை, கட்டுரை, சிறுகதை என பல துறைகளிலும் தீவிர ஈடுபாடு காட்டிய இவர் பல போட்டிகளிலும் வெற்றி பெற்று பாராட்டுக்குள்ளாகினார். இவர் 2005ம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் போது வெளியிடப்பட்ட வவுனியா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்ற நூலின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இது தவிர அட்டாளைச்சேனை அசிரியர் கல்லூரியில் பயிலும் போது கலை அமுதம் சஞ்சிகை மற்றும் ஏ.எஸ். அப்துல் ஸமத் பொன் விழா மலருக்கும் ஆசிரியராக இருந்தார்.

1983 முதல் 1985 வரை லேக் ஹவுஸ் தினகரனின் ஒப்பு நோக்குனராகப் பணிபுரிந்த இவர் அதன்பின் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டார். இறக்கும் போது நேரியகுளம் அல்.ஹாமியா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகப் பணிபுரிந்தார். ஆசிரியர் சேவையில் 25 வருட காலத்தைப் பூரணப்படுத்திய இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வெளியிட்ட உதயம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணிபுரிந்தார்.

வடக்கின் யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் இவர் வாழ்ந்த பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யுத்த மோதல்களை நேரடியாகக் கண்டு அதன் பின் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

பழகுவதற்கு இனிமையான மென்மைப் போக்குடைய சமயப் பற்று மிகு எஸ்.கே. ஆப்தீன் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை வழங்கிய இவர், ஆசிரியையான தனது மூத்த மகளுக்கு அடுத்த மாதத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

ஆசிரியராக, எழுத்தாளராக, சமூக சேவையாளராக அளப்பரிய சேவைகள் புரிந்த மர்ஹூம் ஆப்தீனது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போமாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :