த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல இன மக்களும் நிம்மதியாகவும், சுகந்திரமாகவும் வாழ வேண்டும் என்ற என்னத்தில் தனது அரசியலை பயன்படுத்தி வருபவர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆவார் என்று முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொது மக்களின் இடங்களை மீண்டும் அவர்களிடம் கையளித்து மீள்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் 35 குடும்பங்களுக்கு தற்காலிக கொட்டில்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
கருணா அம்மான் அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் தனது அமைச்சின் ஊடாக மீள்குடியேற்ற திட்டங்களைச் செய்து வருகின்றார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில உள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் முழுமையாக தனது அமைச்சின் சேவை கிடைக்க வேண்டும் என்ற என்னத்தில் செயற்பட்டு வருகின்றார்.
அவரிடம் முஸ்லீம், தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு கிடையாது இனரீதியான பேதம் பார்க்காமல் அனைவருக்கும் சமமாக சேவை செய்து வருகின்ற ஒரு அரசியல் வாதியாகத்தான் நான் அவரைப் பார்க்கிறேன். அவர் மீள்குடியேற்ற மக்களுக்கு செய்கின்ற உதவிக்கு மீள்குடியேற்ற மக்கள் நன்றியுடயவர்களாக இருக்க வேண்டும்.
இன்று என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மாஞ்சோலை பிரதேச மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் பொருட்களை கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான பொருட்களை வழங்கி வைப்பதற்கா நான் வருகை தந்தேன்.
இப் பிரதேசத்திற்கு மிக விரைவில் மீள்குடியேற்ற அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அழைத்த வந்து இப்பகுதி மக்களின் தேவைகளை நேரில் காட்டுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளேன் அந்த நிகழ்வு விரைவில் நடைபெறும்.
மாஞ்சோலை பிரதேசம் யுத்தகாலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்று பிரதி அமைச்சர் முரளிதரன் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த பிரதேசத்திற்கு அவரது அமைச்சினூடாக உதவிகள் நிச்சயம் கிடைக்கும் அதனை பொதுமக்கள் பிரயோசனப் படுத்திக் கொள்ள வேண்டும்.
பிரதி அமைச்சர் முரளிதரன் தற்போது உள்ளது போல் இனத் துவேசம் இல்லாமல் மாவட்டத்தில் அவரது பணி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது ஒரு குடும்பத்திற்கு இருபத்தையாயிரம் ரூபா பெருமதியில் சீமெந்து பக்கட்டுக்களும், கூரைத் தகடுகளுமாக 35 குடும்பங்களுக்கும் (875,000.00) எட்டு லட்சத்தி எழுபத்தையாயிரம் ரூபா பெறுமதியில் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் மீள்குடிமர்த்தப்பட்ட மாஞ்சோலை கிராம மக்களுக்கு இவ் உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment