இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் அழித்து நாட்டை பின்னோக்கித் தள்ளியது பயங்கரவாதம் அன்றி இனவாதமே என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின சாடியுள்ளார்.
பேருவளை மக்கொனயில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்த போது அபிவிருத்தியில் ஜப்பானுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம். அவர்கள் 89 டொலர்கள் தனிநபர் வருமானத்தைக் கொண்டிருக்க நாம் 88 டொலர்கள் தனிநபர் வருமானம் கொண்டிருந்தோம்.
ஆனால் இன்று ஜப்பானியர்கள் 34 ஆயிரம் டொலர்கள் தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளனர். நாம் இன்னும் 2 ஆயிரம் டொலர்களைத் தாண்டவில்லை.
இவ்வாறான பொருளாதாரப் பின்னடைவுக்கு இந்நாட்டில் நிலவிய இனவாதம் தான் காரணம். சுதந்திரமடைந்தது தொடக்கம் இன்று வரை நாட்டில் பாரிய அழிவுகள் இனவாத செயற்பாடுகளின் காரணமாகவே நடைபெற்றது.
பயங்கரவாதம் ஒரு காலத்தில் இந்நாட்டில் தலைவிரித்து ஆடினாலும், 2009ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை முறியடித்துவிட்டார்.
தற்போது இனவாதத்தின் மறுபக்கமான மதவாதம் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது இது மோதல்களுக்கும் வழிவகுக்கின்றது.
இவையெல்லாம் பௌத்தத்தின் பெயரால் நடைபெறுவதுதான் கவலைக்குரிய விடயம். பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் ஒருபோதும் மதவாதிகளாக இருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் ராஜித தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
tamilwin.

0 comments :
Post a Comment