அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகளை உடனடியாக துரிதப்படுத்துமாறு கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், ஒப்பந்தக்காரர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற போதே முதல்வர் இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.அப்துல் மஜீத் உட்பட அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் நெல்சிப் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இவ்வேலைத் திட்டங்கள் அனைத்தையும் துரிதப்படுத்தி கூடிய விரைவில் நிறைவு செய்வதற்கான வழி வகைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மந்த கதியில் இடம்பெறும் வேலைத் திட்டங்களை துரிதப்படுத்துமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு முதல்வர் பணிப்புரை விடுத்தார்..
விசேடமாக சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுவது குறித்து கவலையும் விசனமும் தெரிவித்த முதல்வர், அதனை உடனடியாக துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான உத்தரவையும் தேவையான அறிவுறுத்த்தல்களையும் வழங்கினார்.

.jpg)
0 comments :
Post a Comment