மக்கள் செறிந்து வாழும் காஸா பிரதேசத்தில் ஒரு வார காலமாக இடைவிடாது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு சுமார் 200 பலஸ்தீன் மக்களின் மரணத்துக்கு வழிவகுத்த பின்னர் இஸ்ரேல் வழங்கும் யுத்த நிறுத்தத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளை, பலஸ்தீன மக்களை, குறிப்பாக காஸா பிரதேசத்தில் காலத்துக்குக் காலம் படுகொலை செய்யும் இஸ்ரேலின் கொள்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அத்தகைய மூன்றாவது படுகொலையாகும். முதலாவது தாக்குதல் 2008/2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டிலும் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது அப்பாவி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் வயோதிபர்களும் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை சொத்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டது.
இங்குள்ள வேடிக்கை என்னவெனில், இஸ்ரேல் போர்க்குற்றங்களை இழைக்கின்ற இவ்வேளையில் ஐக்கிய அமெரிக்கா, மத்திய கிழக்கின் மையப்பகுதியில் இஸ்ரேலை நிலைபெறச் செய்த ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவை உள்ளிட்ட முழு உலகமும் அநாதரவான பார்வையாளர்களாக மாறிவிட்டனர்.
இஸ்ரேலின் சர்வதேச சட்டங்களை மீறுதல் பற்றிய நூற்றுக்கணக்கான தீர்மானங்களை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் தாபனமும் சியோனிச அரசினால் புறக்கணிக்கப்பட சம்பந்தமே இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலைமையை என்றும் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.
இத்தகைய சூழ்நிலைகளில், காஸா பிரதேசத்தில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் இஸ்ரேலின் படுகொலையை நிறுத்துமாறும், எட்டு வருடங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படும் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடையை நீக்குமாறும் இஸ்ரேலின் அட்டூழியங்களிலிருந்து பலஸ்தீன் மக்களை விடுவிக்குமாறும் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகள் தாபனம் ஆகியவற்றை தேசிய ஷூறா சபை கேட்டுக்கொள்கின்றது.
இஸ்மாயில் ஏ அஸீஸ்
பொதுச் செயலாளர்
தேசிய ஷூறா சபை

0 comments :
Post a Comment