VK-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் மக்கள் 'துஆ' பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டுமென சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதியமைச்சர் அப்துல்காதர் ஜெனீவா மாநாடு தொடர்பாக முஸ்லிம்களுக்காக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முஸ்லிம்கள் அதிகாரத்திலுள்ள அரசுக்கும் நாட்டின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று புனித குர்ஆன் கூறுகிறது. எனவே நாட்டில் இனரீதியான பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் முஸ்லிம்கள் காரணமாக இருக்கக்கூடாது. நாமனைவரும் இலங்கையர் என்ற பொதுவான அடிப்படையில் நாட்டுக்கு எதிராக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவளிக்கக்கூடாது. அரசாங்கத்துக்கே ஆதரவளிக்க வேண்டும் என சில முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடமும் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். முஸ்லிம்கள் நாட்டைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டுமென்றே அன்றி காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க கூடாது.
எதிர்வரும் மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக
வாக்களிப்பவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தற்போது 85 சதவீதமான முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள்.
அரசாங்கத்துடன் இருக்கும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் கூடி இருந்து குழி தோண்டக்கூடாது. முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு சகல துறைகளிலும் இலங்கை அபிவிருத்தியை நோக்கிச் செல்வதை மக்கள் அறிவார்கள். பாதை உட்பட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி நாட்டு மக்களை மாத்திரமல்ல வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளைக்கூட திகைக்க வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment