நோன்பைத் தூய்மையாக்கும் ஸகாதுல் பித்ர்

( எம்.பைஷல் இஸ்மாயில்)

தொகுத்து வழங்கியவர்: அஷ்ஷெய்க் என்.எம்.அப்துல் ஹலீம் (அல் ஹூமைதி)

விரிவுரையாளர்: கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி
அல்லாஹூதஆலா நாம் புரிகின்ற வணக்கங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பல வழிகளை நமக்கு அமைத்துத் தந்துள்ளான்.

தொழுகையில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய 'ஸஜ்தா ஸஹ்வு' ஹஜ் கடமைகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய 'தியத்' எனும் குற்றப்பரிகாரம், இதைப்போன்று ரழழான் நோன்புகளில் ஏற்படும் குறைகளை தவறுகளை நிவர்த்தி செய்ய ஸகாதுல் பித்ரை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளான்.

ஸகாதுல் பித்ர்:, நோன்பை தவறு,வீண் ஆகியவற்றினை விட்டும் தூய்மைப்படுத்தும், ஏழைகளுக்கு உணவாகவும் அமையும் என்றமைப்பில் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் நூல்: அபூதாவுத் 1594)

ஸகாதுல் பித்ர் கடமையாகுவதற்கான நிபந்தனைகள்.
பின்வரும் மூன்று நிபந்தனைகளை அடையப்பெற்றவர் இதனை நிறைவேற்றுவது அவர் மீது கடமையகும்.

முஸ்லிமாக இருத்தல், ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படுதல், பெருநாள் தினத்தின் இரவு மற்றும் பகல் உட்பட தனக்காகவும், தனது பராமரிப்பில் உள்ளவர்களுக்காகவும், உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கடன் தேவைகள் போக மேலதிகமாகமானதை பெற்றிருத்தல்.
ஸகாதுல் பித்ரின் நிய்யத்:

இது எனது ஸகாதுல் பித்ர் அல்லது எனதும் என் மனைவியினதும் ஸகாதுல் பித்ர் அல்லது எனதும் என் மனைவியினதும் என் பிள்ளைகளினதும் ஸகாதுல் பித்ர் என்று நியத்து வைத்தல் வேண்டும்.
ஸகாதுல் பித்ரை வேறாக்கி ஒதுக்கும் நேரத்தை மேற்கண்டவாறு நிய்யத் வைத்தால் போதும்.

யாருக்காக வழங்குவது கடமை,

தனக்கும் தன் பராமரிப்பின் கீழ் இருப்பவர்களுக்காகவும் இதனை வழங்குவது கடமையாகும்.

எப்போது வழங்கவேண்டும்.

ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதிலிருந்து இதனை வழங்குவது கூடும். எனினும் நோன்புப் பெருநாள் பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகை ஆரம்பிப்பதற்குள் வழங்கிவிடுவது சுன்னத்தாகும். அதைவிட பிந்தினால் அது பித்ராவாக மாட்டாது. வெறும் ஹதியாவாகவே சேரும். அதைக் கழாச்செய்தல் வேண்டும்.

எப்பொருளில் வழங்கவேண்டும்

தான் வசிக்கும் ஊரில் பிரதான உணவாக உட்கொள்ளப்படுகின்ற உணவுப் பொருட்களிலிருந்து வழங்கப்படல் வேண்டும். நமது நாட்டில் அரிசி பிரதான உணவாக உட்கொள்வதால் அரிசியை வழங்குவதே நம் மீது கடமையாகும்.
எவ்வளவு வழங்கவேண்டும்.

நபரொருவருக்கு ஒரு 'ஸாஉ' வீதம் அதாவது இரண்டு கொத்து அரிசியாகும். அதாவது தற்காலத்தில் அதை இரண்டு கிலோ (02) 400 கிராம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விரும்பின் இரண்டரைக்கிலோ வழங்கலாம்.

யாருக்கு வழங்கவேண்டும்.
அல் குர்ஆனில் அல்லாஹ் ஸகாத் பெறத் தகுதியானவர்கள் எனக் கூறியிருக்கும் 8 கூட்டத்தாருக்கு கொடுக்கவேண்டும்.

பக்கீர்: எவ்வித வருவாயுமற்றவர்கள்,
மிஸ்கீன்: செலவுக்குப் போதாத சொற்ப வருவாயுள்ளவர்கள்,
ஆமில்: ஸகாத் வசூலிப்பவர்,
முஅல்லபதுல் குலூப்: புதிதாக இஸ்லாத்தை தழுவியோர்,
அர்ரிகாப்: உரிமை எழுதப்பட்ட அடிமை,
கடன் காரர்கள்: அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்காக கடன்பட்டு அதைத் தீர்க்க வழியில்லாதவர்கள்,
பீ ஸபீலில்லாஹ்: புனிதப்போரில் ஈடுபட்டிருப்போர்,
இப்னு ஸபீல்: வழிப்போக்கர் அதாவது அனுமதிக்கப்பட்ட பயணம் மேற்கொண்டு அதை நிறைவு செய்ய வழியற்று இடையில் நிற்பவர்.

எனவே நாம் நோற்ற நோன்புகளில் ஏற்பட்ட குறைகளை, தவறுகளை தூய்மைப்படுத்தும் ஸகாதுல் பித்ரை முறையாக வழங்கி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வோமாக! ஆமீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :