காணாமற்போனவர்களை கண்டுபிடியுங்கள் வவுனியாவில் மறியல் போராட்டம்!

காணாமல் போன மாணவனை மீட்க நடவடிக்கை எடுக்காத பாடசாலை நிர்வாகத்தையும், பொலிசாரின் அசமந்தப்போக்கையும் கண்டித்து பாடசாலை முன் பெற்றோரும் மாணவர்களும் மறியல் போராட்டம்.



வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 11இல் கல்வி கற்கும் சிவசூரியகுமாரன் சரன்ராஜ் எனும் மாணவன், கடந்த 13.06.2013 அன்று கல்லூரிக்கு சென்ற வேளை காணாமல் போயிருந்தார்.


காணாமல் போன மாணவனை மீட்க நடவடிக்கை எடுக்காத பாடசாலை நிர்வாகத்தையும், பொலிசாரின்ன் அசமந்தப்போக்கையும் கண்டித்து, இன்று காலை பாடசாலை நுழைவாயிலுக்கு முன்பாக மாணவர்களும் பெற்றோர்களும் பெருமளவில் திரண்டு, குறித்த மாணவனை உடனடியாக மீட்டுத்தரக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது காணாமல் போன மாணவனின் தந்தை மயக்கம் அடைந்ததோடு, தனது மகன் காணாமல் போய் மூன்று வாரங்களுக்கு மேலாகியும், இதுவரை உருப்படியான எத்தகைய நடவடிக்கையையும் பாடசாலை நிர்வாகமும், பொலிஸாரும் எடுக்கவில்லை என கதறியழுதார்.


மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் 'எங்கள் சகோதரன் எங்கே' 'காணாமல் போன மாணவனை மீட்டுத்தா' 'கண்டுபிடி கண்டுபிடி மாணவனை கண்டுபிடி' 'மீட்டுத்தா மீட்டுத்தா எங்கள் சகோதரனை மீட்டுத்தா' என கோசங்களை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவன் சனராஜின் பெற்றோர், எமது மகன் காணாமல் போன அன்றே பாடசாலை நிர்வாகத்துக்கும், பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கும் அறிவித்திருந்தோம்.


வவுனியா பொலிஸிலும் முறைப்பாடு பதிவு செய்திருந்தோம். கடத்தலுடன் தொடர்புடையவர்களை நாம் அடையாளம் காட்டியும், பொலிஸார் அவர்களை கைது செய்தவுடனேயே விடுவித்ததோடு, கடத்தல்காரர்களுக்கு சாதகமாக பொலிஸார் செயல்படுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த வன்னி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர் ஆகியோர் நிலைமைகளை விளக்கி பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு நீதி வேண்டி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கடத்தப்பட்ட மாணவனை உடனடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, மணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சநிலையை போக்கி சுமூகமான கற்றல் செயல்பாடுகளுக்கு வழிசெய்யுமாறு வலியுறுத்தினர்.

இன்னும் ஒருசில மணித்தியாலங்களில் மாணவனை கடத்தியவர்களை கைது செய்வதாகவும், நாளைய தினம் சம்பவத்துக்குரிய தீர்வினை தருவதாகவும் பொலிஸார் உத்தரவாதம் அளித்ததோடு, மறியல் போராட்டத்தை கலைத்து வாயில் கதவை திறந்து பாடசாலையை இயங்கச்செய்வதிலேயே முனைப்பும் காட்டிக்கொண்டிருந்தனர்.


பொலிஸாரின் பேச்சில் நம்பிக்கை இல்லாத பெற்றோரும், மாணவர்களும் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதில் ஈடுபட்டிருக்க, பாடசாலையின் பிரதிஅதிபர் ஒருவர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பக்கம் இருக்கக்கூடிய நியாயங்களுக்கு சார்பாக செயல்படாமல் பொலிஸாரின் அசமந்த போக்குக்கு இசைவாக செயல்பட்டதை காணக்கூடியதாகவிருந்ததோடு, இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும், ஏனைய ஆசிரியர்களும் கடும் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி இந்திரஜித், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், நாளைய தினம் 4 மணிக்கு கல்லூரிக்கு நேரடியாக வருகை தந்து விசாரணை தொடர்பான நிலைப்பாட்டினை தெரிவிப்பதாகவும் வழங்கிய உறுதிமொழியையடுத்து, மாணவர்களதும் பெற்றோர்களதும் போராட்டம் கைவிடப்பட்டது.


 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :