தவம் தொடர்பில் மு.கா வுக்கு பல இரத்த வரலாறுகள் இருக்கின்றன!- கிளறுகிறார் ஜவாத்


ரசின் முந்தானைக்குள் ஒழிந்து வாழ்ந்து வருகின்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் போன்ற ஒருவரால் - மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது.

சுயநலத்துடன் வாழ்ந்த ஒருவரால் - பொதுநலக் கோட்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சிக்குள் வந்து சமூக உரிமைகளுக்காக வாதிட முடியாது.

அவ்வாறான ஒருவரின் நடத்தைகள் - பிறழ்வுகள் கொண்டதாகவே இருக்கும். இந்தப் புள்ளியில் வைத்தே – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் தவத்தின் கூற்றுக்களை நான் பார்க்கிறேன்.

இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், மு.காங்கிரஸின் பிரதி பொருளாலரும், அந்தக் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினருமான கே.எம்.ஜவாத் தெரிவித்தார்.

'முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களும், இழிவான அரசியல் எண்ணத்தைக் கொண்டவர்களுமே அரசாங்கத்திலிருந்து மு.கா. வெளியேற வேண்டும் என்று கூறுகின்றார்கள்' என கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் அண்மையில் தெரிவித்திருந்தார். இக்கருத்து குறித்து தெரிவிக்கையிலேயே ஜவாத் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவதுளூ

குறுகிய அரசியல் சிந்தனை

'அரசிலிருந்து மு.காங்கிரஸ் வெளியேறி என்ன செய்யலாம்' எனும் சாரப்பட்ட தலைப்பில் - கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் தவம் பேசியதாக, கடந்த நாட்களில் தமிழ் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.

'முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களும், இழிவான அரசியல் எண்ணத்தைக் கொண்டவர்களுமே அரசாங்கத்திலிருந்து மு.கா. வெளியேற வேண்டும் எனக் கூறுகின்றார்கள்' என்று அந்தச் செய்தியில் தவம் தெரிவித்திருந்தார்.

மேலும், அரசுடன் மு.கா. இணைந்துள்ளமையினால்,
-    மு.கா. பிரதிநிதிகளால் - ஜனாதிபதியைச் சந்திக்க முடியும்
-    அமைச்சரவையில் பேச முடியும்
-    கட்சித் தலைவர்களைச் சந்திக்க முடியும்
-    பொதுபலசேனாவுக்கு எதிரான சட்டத்தினை உருவாக்க முடியும்

என்று கூறியுள்ள மாகாணசபை உறுப்பினர் தவம், அரசாங்கத்திலிருந்து மு.கா. வெளியேறினால் மேற்படி விடயங்களையெல்லாம் சாதிக்க முடியுமா என்றும், அரசிலிருந்து மு.கா. வெளியேறுவதால் ஏற்படும் உடனடி விளைவுகள் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற மு.காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டத்தில் 'அரசுக்கு கொடுக்கும் ஆதரவினை மு.கா. விலக்கிக் கொண்டு, உடனடியாக அரசிலிருந்து வெளியேற வேண்டும்' என்பதை கடுமையாக வலியுறுத்திக் கூறியவர்களில் நானும் ஒருவன். அன்றைய கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் தவம் கலந்து கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் நலனை வலியுறுத்தி இந்தியாவில் தி.மு.க. கட்சியானது மத்திய அரசுக்குக் கொடுத்த ஆதரவினை மீளப் பெற்றுக் கொண்டு, தமது அமைச்சுப் பதவிகளையெல்லாம் துறந்தது. தி.மு.க. இப்படிச் செய்யும்போது உடனடி விளைவுகள் குறித்தெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. இதுபோல், நமது நாட்டில் முஸ்லிம் மக்கள் பயத்திலும், பீதியிலும் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் - அரசிலிருந்து மு.கா. ஏன் விலகி வரக்கூடாது.

'முஸ்லிம் தேசியமும், தமிழ் தேசியமும் ஒரு போதும் இணையாது' என்று, அரசியல் பொறுப்புணர்வற்ற வகையில் - சில காலங்களுக்கு முன்னர் தவம் ஓர் அறிக்கை விட்டிருந்தபோது, அதை ஊடகங்களில் நான் வன்மையாகக் கண்டித்திருந்தேன். குறுகிய அரசியல் மனநிலையிலிருந்து தவம் விடுபட வேண்டும் என்பதற்காகவும், அவரை அவ்வாறான நிலையிலிருந்து திருத்தியெடுக்க வேண்டும் என்கிற நோக்குடனுமே அவரின் அந்த கருத்தினை எதிர்த்துப் பேசியிருந்தேன்.
ஆனால், தவத்தின் குறுகிய அரசியல் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

யார் இந்தத் தவம்?

இந்தத் தவம் - மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்களை ஏற்றுக்கொள்ளாதவர். அஷ்ரப் அவர்களின் மரணத்தின்போது பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவர்களில் தவமும் ஒருவர். பின்னர், அமைச்சர் அதாவுல்லாவுடன் அரசியல் தாம்பத்தியம் நடத்தி, அக்கரைப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளரானார். அதன் பிறகு அக்கரைப்பற்று பிரதேச சபை - மாநகரசபையாக உயர்ந்தபோது, அதன் மேயர் பதவி கிட்டாததால் அதாவுல்லாவை விவாகரத்துச் செய்து விட்டு, எமது தலைவர் ரவூப் ஹக்கீமுடைய அன்புத் தம்பியாக வேடமேற்றார்.

தவம் தொடர்பில் மு.காங்கிரஸுக்கு பல இரத்த வரலாறுகள் இருக்கின்றன. ஆயினும் - அவரை மு.கா. போராளிகள் மன்னித்து, மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெய வைத்தார்கள். மக்களின் உணர்வுகளை மதித்து, மக்களுக்காக குரல் கொடுப்பார் என்கிற நம்பிக்கையிலேயே தவத்துக்கு மு.கா. போராளிகள் தமது வாக்குகளை அள்ளி வழங்கினர். ஆனால், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன.

கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்), கி.பி. (கிறிஸ்துவுக்கு பின்) என்பது போல, தவத்துக்கும் இரண்டு வரலாறுகள் இருக்கின்றன. மு.காங்கிரஸுக்கு முன், பின் என்பதே அந்த வரலாறுகளாகும்.

மக்கள் மு.காங்கிரஸை தமது உயிராக நேசிக்கின்றனர். அபிவிருத்தி என்பது மாயை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அது வந்தால் வரவு – அவ்வளவுதான். ஆனால் - எமது உரிமை, பாதுகாப்புகள், சுதந்திரம், நிம்மதி போன்றவற்றை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

மக்களின் உணர்வுகளை தனது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் மு.கா. பிரதிபலித்ததால்தான், மு.கா.வுக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்கி வருகினர்.

சத்தியத்தை மறந்தவர்கள்

கடந்த கிழக்கு மாகாண சபையில் பதவி வகித்த மு.கா. உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், தங்கள் பலத்தினை நிறுவிக் காட்டியிருந்தார்கள். கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதன் ஊடாக, முஸ்லிம்களின் பெரும்பான்மைத் தளமொன்று இலங்கையிலும் உள்ளது எனும் விடயத்தினை நிரூபிப்பதற்கானதொரு வாய்ப்பு இம்முறை மு.கா.வுக்கு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பினை நாம் இழந்தோம். சுயநல அரசியலே இந்த இழப்புக்கு காரணமாகும்.

கிழக்கு மாகாணசபையில் போட்டியிட்ட மு.கா. வேட்பாளர்கள் - 'கட்சிக்கும், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டோம்' என்று அல்லாஹ்வை முன்வைத்து 'பைஅத்' (சத்தியம்) செய்தனர். கட்சித் தலைவர் முன்பாகவும், மார்க்க அறிஞர்கள் முன்பாகவும் இந்த 'பைஅத்' நிகழ்வு - தேர்தல் காலத்தின் போது, இரண்டு தடவைகள் இடம்பெற்றன.

ஆனால், கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் தமது சத்தியங்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு, திவிநெகும திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்தனர். இந்த உறுப்பினர்கள் இவ்வாறு ஆதரவு வழங்கியமைக்காக இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கட்சி கூறியது. ஆனால், அது கானல் நீரானது.

பள்ளிகள் உடைக்கப்பட்டன, ஹலால் பிரச்சினை ஏற்பட்டது, பன்றியின் உருவத்தின் மீது அல்லாஹ் என்று எழுதி ஊர்வலம் நடத்தப்பட்டது, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன – ஆனால், எங்களுடையவர்களின் வாய்கள் திறக்கவேயில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் அதி உச்சபீட கூட்டம் நடைபெற்றபோது, அரசுக்குக் கொடுக்கும் ஆதரவை மு.கா. வாபஸ் பெறவேண்டும் என்று – நான் முதன் முதலாகக் குரல் கொடுத்தேன். 1986ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்காகக் குரல்கள் இல்லாத போது, இந்தக் கட்சிக்காக அனைத்தினையும் அர்ப்பணித்துக் கொண்டு உழைத்துவரும் என்னுடைய உணர்வே – அவ்வாறு என்னை குரல் கொடுக்க வைத்தது.

அரசின் முந்தானைக்குள் ஒழிந்து வாழ்ந்து வருகின்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் போன்ற ஒருவரால் - மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. சுயநலத்துடன் வாழ்ந்த ஒருவரால் - பொதுநலக் கோட்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சிக்குள் வந்து சமூக உரிமைகளுக்காக வாதிட முடியாது.

அவ்வாறான ஒருவரின் நடத்தைகள் - பிறழ்வுகள் கொண்டதாகவே இருக்கும். இந்தப் புள்ளியில் வைத்தே – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் தவத்தின் கூற்றுக்களை நான் பார்க்கிறேன்.

அரசுடன் மு.கா. இணைந்திருப்பது ஒன்றும் வேண்டத்தகாத செயற்பாடல்ல. ஆனால், இந்த இணைவில் - எமது சமூகத்தின் அரசியல் பசியும், பாதுகாப்புப் பிரச்சினைகளும் தீர்க்கப்படல் வேண்டும்.

எமது மக்கள் எமக்கு அளித்த வாக்குகள் அமானிதங்களாகும். இந்த அமானிதங்கள் குறித்து அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் உலகிலும், மறு உலகிலும் பதில் கூறவேண்டிவர்களாவர். இந்த அரசில் - நாம் கூனிக் குறுகி, ஒதுக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் அடைந்து கொள்ளவில்லை.

நமது சமூகத்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மாகாணசபையிலோ, நாடாளுமன்றத்திலோ ஓர் எதிர்ப்புப் பிரேரணையினைக் கூட இதுவரை நாம் கொண்டு வரவில்லை. நாம் பேசுவதுமில்லை, பேசவிழையும் பிற சமூகப் பிரதிநிதிகளையும் பேச விடுவதுமில்லை. இந்த லட்சணத்தில் எங்கள் பெயர் சாதனை வீரர்கள்.

அடுத்த தேர்தல் வரும்போது, எமது கட்சிப் பாட்டுக்களுக்கு தூசு தட்டி வைப்போம். என்றும் போல – 'ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்...' என்று ஒலிபெருக்கிகளில் பாடல் ஒலிக்கும். மக்களின் பிரதிநிதிகள் என்று கூறும் நாமெல்லோரும் மேடைகளில் உட்கார்ந்து கொண்டு பாடலுக்கு கைகொட்டி ஆரவாரித்து மகிழ்வோம்.

 மக்கள் மட்டும், கீழே – அரசியல் அநாதைகளாக 'அரை நிர்வாணத்துடன்' நிற்பார்கள். பின்பு, மீண்டும் நமக்கே வாக்களிப்பார்கள். ஆண்டாண்டு காலமாக இதுதான் நடந்து வருகிறது. ஆனால், மக்களை எப்பொழுதும் ஏமாற்ற முடியாது.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :