கட்சிக்காரியாலயம் திறக்கும் விழாவில் முபாறக் மெளலவி ஆற்றிய உரை.


ண்மையில் முஸ்லிம் மக்கள் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உரையாற்றிய போது கூறியவை

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க அல்லது சமாளிக்க தேசிய ஷுறா சபை ஒன்று அவசியம் என்ற கருத்தாடல்கள் அண்மைக்காலமாக எழுதப்பட்டு வருகின்றது. இத்தகைய ஷுறா சபையில் ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் முஸ்லிம்களின் பல் துறை சார்ந்த புத்தி ஜீவிகளும் இடம்பெற வேண்டுமென்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய புத்தஜீவிகளைக்கொண்ட ஷுறா சபையினால் முஸ்லிம் சமூகம் தீர்க்கமான பாதையை நோக்கி பயணிக்குமா என்பது பற்றி நாம் ஆராய்வது அவசியமாகும்.

முதலில் இந்த நாட்டு முஸ்லிம் புத்திஜீவிகள் என்றால் யார் என்று பார்ப்போம். புத்திஜீவிகள் என்பதற்குள் மார்க்கம் கற்ற உலமாக்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணனி வல்லுனர்கள் போன்ற அறிவு சார்ந்தோரை குறிப்பிடலாம். இதற்குள் தொழில் சார்ந்தவர்கள் பெரும்பாலும் உள்ளடக்கப்படுவதில்லை. உதாரணமாக மேசன், ஓடாவி, தச்சன் போன்றோரை குறிப்பிடலாம். அவர்களும் தமது தொழில் பற்றிய அறிவில் புத்திஜீவிகளாக இருந்த போதிலும் அவர்களை புத்திஜீவிகளாக புத்தீவிகள் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை என்பது நடைமுறை. இது சரியா என்பது பிறிதாக ஆராயப்பட வேண்டிய விடயம். ஆக பாடசாலைக்கல்வியில் சிறந்து விளங்குபவர்களில் குறிப்பிட்ட சில வர்க்கத்தினரை புத்தி ஜீவிகள் என்கிறோம்.

இந்த புத்திஜீவிகளைக்கொண்ட ஷுறா அமைப்பினால் அரசாங்கத்தின் துணையுடன் நடைபெறும் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான பேரினவாத சக்திகளை முறியடிக்க முடியுமா? என்பது மிகப்பலமான கேள்வியாகும். ஏனெனில் நமது நாட்டின் புத்திஜீவிகள் என்போர் ஏதாவது அரசியல் கட்சிக்கு சார்பற்றவராக இருப்பாராயின் அவர் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்துபவராகவே இருப்பார் என்பதே யதார்த்தமாகும். அதாவது அனைவரிடமும் நல்லவராக அவருக்கு சார்பானவராக நடிக்கக்கூடியவராகவே இருப்பார்.

ஒரு சட்டத்தரணி அல்லது ஒரு மௌலவி ஒரு வைத்தியர் ஏதாவது அரசியல் கட்சியின் அங்கத்தவராக இருந்தால் அக்கட்;சியின் கருத்தைக்கொண்டவராகவே இருப்பார். தனது சமூகம் சார்ந்த விடயங்களிலும் கட்சிக்கொள்கையின்படியே பேசுவார். 

அல்லது நமக்கேன் வம்பு என பேசாமல் வாய் மூடி இருப்பார். அவரது கட்சி ஆட்சியில் இருந்தால் அரசுக்கு எதிராக பேசாமல் மௌனமாக, நல்ல பிள்ளையாக இருப்பார். அல்லது அரசாங்கத்தை பாதுகாத்துக்கொண்டு பொது பல சேனாவை கண்டிப்பவராக அல்லது அவர்களுக்கு புத்தி சொல்லி கடிதம் எழுதுபவராக இருப்பார். அரசாங்கத்துக்கு நேரடியாக புத்திமதி சொல்ல முன்வரமாட்டார். காரணம் அவர் சார்பு கட்சி ஆட்சியில் உள்ளதால். எதிர் கட்சியில் இருந்தால் அக்கட்சியின் தலைமை ஆதரவு தந்தால் சத்தமிடுவார். இல்லாவிடில் அவரும் கப்சிப்பாகி விடுவார்.

இதே போல் ஒரு புத்திஜீவி அரசியல் கட்சி சார்பில்லாதவராக இருந்தால் அவர் பெரும் பாலும் ஆளும் வர்க்கத்துக்கு நோகாமலேயே நடந்து கொள்வார். உதாரணமாக ஒரு பல்கலைக்கழக பேராசியர் அரச ஆதரவு ஊடகங்களிலும் பேசுகிறார் அதே வேளை அரசுக்கு சார்பற்ற ஊடகங்களிலும் பேசுகிறார் என்றால் இவர் சேற்றில் நாட்டிய கம்பு போன்று இருப்பதன் காரணமாகவே இவரால் இவ்வாறு முடிகிறது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகையவர்கள் பெரும்பாலும் அரசுக்கு அதிருப்தி வராமலேயே நடந்து கொள்வார்கள். இதுதான் புத்திஜீவிகளின் சிறந்த செயல் போன்று காட்டுவார். அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். அவர்கள் அனுபவித்து வந்த பல உரிமைகள் இல்லாது போய் விட்டன. இதற்கு பிரதான காரணம் அரசாங்கத்தின் இனவாத ஆதரவுப்போக்கே என்பதை புரியாத ஒரு புத்திஜீவியாவது இருக்க முடியுமா? அப்படியாயின் அரசியல் கட்சி சாராத ஒரு புத்திஜீவியாவது இது விடயத்தில் அரசாங்கத்தை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனரா?

எத்தனையோ சட்டத்தரணிகள் நம் சமூகத்தில் உள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பட்டம் பெற்றவர்கள் உள்னர். மிகப்பிரபலமான மௌலவிகள் உள்ளனர். எம். ஏ, கலாநிதி என்று பல ஷேக்குகள் உள்ளனர். பிரபலமான மதுரசா அதிபர்கள் உள்னர். ஊடக ஜாம்பவான்கள் உள்ளனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளனர். பெரும் பேச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு புத்திஜீவியாவது அரசாங்கத்தை நேரடியாக இது விடயங்களில் குற்றம் சாட்டியுள்ளார் என ஒருவரை காட்ட முடியுமா? இல்லவே இல்லை என்பதுதான் பதிலாகும்.

இவர்கள் அனைவரும் விடயங்களை சுற்றிவளைத்து பேசுவதிலும் முஸ்லிம் சமூகத்துக்கு ஆலோசனை கூறுபவர்களாகவும், பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று உபதேசிப்பவர்களாகவும், அந்த அமைப்பை உருவாக்க வேண்டும் இந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என ஏட்டுச்சுரைக்காய் அமைப்புக்களை பற்றி விலா வாரியாக விளக்குபவர்களாகவும் கண்டோமே தவிர நடைமுறை சாத்தியமுள்ள எதையாவது பேசினார்களா? இல்லை.

அப்படியாயின் இந்தப் புத்திஜீவிகளை இணைத்து மஷுறா சபை உருவாக்கினால் அதன் மூலம் இந்த சமூகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதையே உறுதியாக கூறலாம். இத்தகைய புத்திஜீவிகள் சமூகப்பிரச்சனைகளின் போது அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அரசாங்கத்துடன் நெருங்கி அதன் மூலமான அறிமுகத்தின் மூலம் தமது சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பார்களே தவிர அரசாங்கத்தை எதிர்த்து உண்மையை கூறும் துணிவு எவருக்குமே இல்லை.

இவற்றை நாம் கற்பனையாக சொல்லவில்லை. கடந்த கால, நிகழ்கால அனுபவங்களை வைத்தே சொல்கிறோம். பெரும்பாலான புத்திஜீவிகள் என்போர் அமைச்சர்களின் கடைக்கண் பார்வை தமக்கு இருக்க வேண்டுமென ஆசை கொள்கிறார்களே தவிர அவர்களை எதிர்த்து மூச்சு விடக்கூட துணிவற்றவர்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இத்தகையவர்களால் சமூகம் பிரச்சினைகளை எதிர் நோக்கும் போது உறுதியான, பக்க சார்பற்ற ஆலாசனைகளை ஒரு போதும் முன் வைக்க முடியாது. இறுதியில் அரசையும், அமைச்சர்களையும் காக்காய் பிடிப்பதில் ஏற்படும் போட்டியின் காரணமாக தேசிய ஷுறா சபை என்பது பல சபைகளாக பரிணமிப்பதில்தான் போய் முடியும்.

இவ்வாறெல்லாம் நான் சொல்லும் போது பலருக்கும் ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை என்பதும் பலருக்கும் புரியும். என்னைப்பொறுத்த வரை இத்தகைய ஷுறா சபை என்பது சமூகத்துக்கு எந்த நன்மையையும் தராது. மிகப்பெரிய சபையான உலமா சபையே தன்னைக்காத்துக்கொள்ள முடியாமல் அழுத்தங்களுக்கு மண்டியிட்டதை கண்டுள்ளோம். இந்த நிலையில் பெரும்பாலும் அரச சம்பளத்தையே நம்பியிருக்கும் புத்திஜீவிகளால் காத்திரமான பங்களிப்பை ஒரு போதும் வழங்க முடியாது. அப்படியாயின் இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என் நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்தக்கேள்விக்கு நாம் பலகாலமாக பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அதாவது தியாக மனப்பான்மை கொண்ட உலமாக்களின் தலைமையிலான அரசியல் கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே சமூகப்பிரச்சினைகளின் போது காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். இதனை நாம் தெளிவாக செய்து காட்டிய திருப்தி எமக்கிருக்கிறது. அண்மைக்கால இனவாத செயற்பாடுகளின் போது அரசாங்கத்தை பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஒரேயொரு முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பு எம்முடைய அமைப்பு மட்டுமேயாகும். இந்த முபாறக் மௌலவியும், செயலாளர் பத்ருத்தீன் மௌலவியுமே பகிரங்கமாக இது பற்றி பேசினார்கள். இவர்கள் தவிர்ந்த ஒரு மௌலவி அரசாங்கத்தை கண்டித்து பகிரங்கமாக பேசியதாக யாராவது காட்ட முடியுமா?

சுய நலமற்ற உலமாக்கள் தலைமையிலான அரசியல் அமைப்பை பலப்படுத்துவதன் மூலம் மக்களை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியும். மக்களின் வாக்குப்பலம் இந்தக்கட்சிக்கு கிடைக்குமாயின் அதனை வைத்து அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். இந்தக்கருத்தை எமக்குப்பின் வந்த பௌத்த தேரர்களின் தலைமையிலான ஜாதிக்க ஹெல உறுமய நன்றாக புரிந்து இந்த நாட்டில் தமது சமூகம் சார்பாக சாதித்துக்காட்டி விட்டது. இன்று எமது புத்திஜீவிகள் அவர்களை விமர்சிப்பதற்கு முன்வருகிறார்களே தவிர உலமாக்கள் தலைமையிலான அரசியல் அமைப்பை பலப்படுத்த எவரும் முன் வருவதில்லை. இதற்கும் பிரதான காரணம் எங்கே அரசாங்கத்தினதும். அமைச்சர்களினதும் கடைக்கண் பார்வை தமக்கு கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சம் தவிற வேறு எதுவும் இல்லை.

ஆக, தேசிய ஷுறா சபை என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றுவதாகும். அதனை விடுத்து உலமாக்கள் தலைமையிலான அரசியல் அமைப்போடு இணைந்து செயற்பட சமூகத்தின் மீது பற்றுள்ள அனைத்து புத்திஜீவிகளையும் நாம் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :