வெளிவராத உண்மைகள் ஹர்பஜனிடம் அடிவாங்கி அழுத ஸ்ரீசாந்த் சொல்கிறார்.


2008–ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுத காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. அப்போது ஸ்ரீசாந்த், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்பஜன்சிங் செயல்பட்டார். மொகாலியில் நடந்த இவ்விரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது.

ஆட்டம் முடிந்ததும் வழக்கம் போல் இரு அணி வீரர்களும் கைகுலுக்கினார்கள். சிறிது நேரத்தில் ஸ்ரீசாந்த் மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருந்தார். சிறுபையன் போல் தேம்பி தேம்பி அழுத அவரை சக வீரர்கள் தேற்றினர். தோல்வியின் ஆத்திரத்தில் இருந்த ஹர்பஜன்சிங், அவரை கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து விட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்படாமல் மறைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஹர்பஜன்சிங்குக்கு அந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் விளையாட தடை விதித்தது. பின்னர் கிரிக்கெட் வாரியம் நியமித்த கமிஷனர் ஓய்வு பெற்ற நீதிபதி சுதிர் நானாவதி விசாரணையின் அடிப்படையில் ஹர்பஜன்சிங்குக்கு 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு பிறகு ஹர்பஜன்சிங்–ஸ்ரீசாந்த் சந்தித்து பேசினார்கள். ஹர்பஜன்சிங் எனது மூத்த சகோதரர் மாதிரி, அந்த கசப்பான சம்பவத்தை மறந்து விட்டேன் என்று ஸ்ரீசாந்த் கூறினார். அத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோண்டியுள்ள ஸ்ரீசாந்த், புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். நேற்று முன்தினம் பெங்களூர் கேப்டன் விராட் கோலி, கொல்கத்தா கேப்டன் கம்பீர் களத்தில் மோசமாக நடந்து கொண்ட விதம், ஹர்பஜன்–ஸ்ரீசாந்த் ‘பளார் விவகாரம்’ போன்று இருந்ததாக சில பத்திரிகைகள் வர்ணித்து இருந்தன. இதைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த் தனது ‘டுவிட்டர்’ இணையதளத்தில் திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அது வருமாறு:–

2008–ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கும், ஹர்பஜன்சிங்குக்கும் இடையே நடந்த பிரச்சினையில் உண்மை நிலவரத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். ஹர்பஜன்சிங் என்னை கன்னத்தில் ஒரு போதும் அறையவில்லை. வீடியோ காட்சியை பார்த்தால், அப்போது என்ன நடந்தது என்பது தெரியும். நான் உணர்ச்சி வசப்பட்டதாக அனைவரும் என் மீது பழி சுமத்தினர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த ஒரு நபர், மனதில் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டிருந்த நபர் நமது முதுகில் குத்தினால் யார் தான் உணர்ச்சி வசப்படாமல் இருப்பார்கள்?

இந்த சம்பவம் எல்லாமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தான். ஆட்டம் முடிந்ததும் நான் அவரிடம் கை குலுக்கினேன். தோல்வியின் ஆத்திரத்தில் நிதானத்தை இழந்திருந்த ஹர்பஜன்சிங், ஏற்கனவே திட்டமிட்டபடி அவரது முழங்கையால் என்னை பலமாக இடித்தார். ஆனால், என்னை அவர் கன்னத்தில் அறையவில்லை. விசாரணை நடத்திய சுதிர் நானாவதிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரியும்.

இந்த சம்பவத்தில் நான் தான் தவறு செய்தேன் என்று சொல்லும்படி என்னை நிர்ப்பந்தித்தனர். ஆனால் உண்மை என்ன வென்றால் இதில் எனது தவறும் எதுவும் கிடையாது. எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தான் இத்தனை ஆண்டுகளாக மவுனம் காத்து வந்தேன்.

இப்போது உண்மைகளை அனைவரும் அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த வீடியோ காட்சியை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முதுகில் குத்தி விட்ட துரோகி என்று ஸ்ரீசாந்த் குற்றம்சாட்டியிருப்பது குறித்து ஹர்பஜன்சிங்கிடம் கேட்ட போது அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஸ்ரீசாந்த் இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஹர்பஜன்சிங், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பவுலராக நீடிக்கிறார். வருகிற 17–ந் திகதி ராஜஸ்தான்–மும்பை இடையிலான ஆட்டத்தின் போது இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :