(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மை மிக்கதாக இருக்கவேண்டும். அப்போதுதான்; பிரதேச சபை மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் இவ்வாறு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.றியாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் பிரதேச சபை கூட்டமண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு உறுப்பினர் றியாஸ் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், பிரதேச சபையின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தெரியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாம் வாக்களித்து தெரிவு செய்த உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள். என்ற விடயம் வெளியில் வரும். எந்தவொரு நிறுவனமும் வெளிப்படைத் தன்மையில்லாமல் செயற்படுமாயின் சிறந்ததொரு நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
பிரதேச சபையின் நடவடிக்கையில் கட்சி பேதங்களை மறந்து எதிர்க்கட்சியான எங்களையும் இணைத்துக் கொண்டு செயற்படுங்கள். நாங்களும் பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கக் காத்துக் கொண்டிருக்கின்றோம். எமது பிரதேச சபைக்கு கூடுதலான தேவைப்பாடுகள் இருக்கின்றது. அதனை நிவர்த்தி செய்ய நாம் எல்லோரும் ஏன்? முன்வரக் கூடாது. கட்சி என்ற விடயத்தை மறந்து விடுங்கள் உள்ளுராட்சி அமைச்சர் அதாஉல்லாவை சந்தித்து நமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவோம். தவிசாளர் இந்த விடயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார் என நம்புகின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்முனை மாநகர சபை இன்று தமது பிரச்சினைகளை அமைச்சர் அதாஉலலாவிடம் முன்வைத்துள்ளது. மாநகர மேயர் தமது உறுப்பினர்களுடன் சேர்ந்து இவ்வாறான முன்னடுப்புக்களை செய்து வருகின்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இருந்தது. எங்களையும் அழைத்து கௌரவப்படுத்தினீர்கள். இந்த விடயத்தில் தவிசாளருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கு முக்கியமான ஒரு விடயத்தை தெரியப்படுத்த விரும்புகின்றேன். பிரதேச சபையினால் மலசல கூடங்களை திருத்தி அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிதியில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை இந்த சபையின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். கௌரவ உறுப்பினர் அப்துல் முனாப் அவர்களும் தனது பேச்சின் போது இதனைப் பற்றிக் கூறினார். இவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருப்பதையிட்டு மிகக் கவலையடைகின்றேன்.
வெளிப்படைத் தன்மையாக மலசல கூட விடயம் நடைபெற்றிருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டு வந்திருக்காது. தவிசாளர் அவர்களே எதிர்காலத்தில் சிறந்ததொரு பிரதேச சபையாக நமது பிரதேச சபையை மாற்றிக் காட்டவேண்டும். இரவு-பகலாக உங்களோடு இணைந்து பணியாற்ற நாம் தயாராக இருக்கின்றோம்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்கள் பணத்தில் கொள்ளையடித்து சம்பாதிக்க வேண்டும் என்ற தேவை எனக்குக் கிடையாது. இறைவன் நாடியவர்களுக்கு பதவியைக் கொடுப்பான். நான் இந்தப் பிரதேச சபைக்கு வந்த விடயமும அவ்வாறுதான்.
இன்று சிலர் எல்லா அபிவிருத்திகளையும் தாங்களே செய்வதாகவும் மற்றவர்கள் எதுவுமே செய்யவில்லை எனவும் மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைக் கொடுக்கின்றனர். இதனை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். அரசியலுக்காக உண்மைகளை மறைக்க முடியாது. நடக்கின்ற பிழைகளை மேடைபோட்டுப் பேசுவதன்றால் எவ்வளவோ பேசலாம். நாம் அவ்வாறு செய்யவில்லை. யாரினதும் மனதைப் புன்படுத்த வேண்டும் என்ற நினைப்பு என்னிடமில்லை.
இந்த சபையில் இன்று முதன் முதலாக ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருப்பதையிட்டு மிகவும் சந்தோசமடைகின்றேன். நாம் பிரதேச சபைக் கூட்டங்களில் எவ்வளவோ விடயங்களைப் பற்றி பேசியுள்ளோம் எந்த விடயமும் பத்திரிகையில் வெளிவரவில்லை. இனிமேலாவது எமது செயற்பாடுகள் ஊடகங்களில் வரவேண்டும். ஊடகவியலாளர்கள் சமூக மாற்றத்திற்காக பெரும் பங்களிப்பினைச் செய்கின்றார்கள் அவர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
தேசிய ரீதியில் 200 மீற்றர் ஓட்டத்தில் சாதனை படைத்த ஒலுவில் ரஜாஸ்கானை இந்த சபையில் வாழ்த்துகின்றேன். ரஜாஸ்கானை பாராட்ட வேண்டும் என்று தவிசாளர் எடுத்த முடிவை அங்கீகரிப்பதுடன் அதனை விரைவில் அதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

0 comments :
Post a Comment