உனக்குக் கடிதம் எழுத
வேண்டும்.
எவ்வளவு விஷயங்களைச்
சொல்லிவிட வேண்டும்.
மனசு துடிக்கிறது. 69
வருட வாழ்வின் அனுபவங்கள்
அப்படியே உலர்ந்து போகாமல்,
பச்சை மண்ணாகவே என்னிடம்
பவித்திரமாக கிடக்கிறது.
எழுதத் தொடங்கிய இந்த
நாற்பது வருடங்களில்
உருப்படியாக
ஒரு நாற்பது கதையாவது எழுத
முடியவில்லையே என்ற ஏக்கம்
ஒரு பக்கமிருந்தாலும்
என்னுடைய சின்ன வயதில்
கிழக்கிலங்கையின்
புகழ்பெற்ற கதாசிரியர்
பித்தன் ஷாவுடனும் புரட்சிக்
கமாலுடனும் நெருக்கமாகப்
பழகியிருக்கிறேன்.
ஆசிரியர் மாணவன் போல.
அவர்களிடம் இருந்த
வறுமையும் போதாமையும்
என்னைப் பயங்காட்டியது.
அதனால்,
எப்படியாவது வாழ்வை மேம்படுத்திக்
கொள்ள வேண்டுமென்ற இலௌகீகத்
தேடலில் இலக்கியம்
அவ்வப்போது விடுபட்டுப்
போனது. 75 இலிருந்து 90
வரையிலுமான 15 வருடங்கள்
நான் பேனாவைத்
தொட்டே பார்க்கவில்லை.
இதற்குள்
ஒரு பத்தாண்டு காலம்
எங்களுடைய தங்கக்
கட்சி எஸ்.எல்.எம்.சி.க்காக
தானம் செய்ய வேண்டிப்
போனது. நாங்கள் கோம்ப
சுமக்க, பின்னால் வந்தவர்கள்
இளநீர் குடித்தார்கள்.
இப்பொழுது என்னவெல்லாமோ குடிக்கிறார்கள்.
எங்கள் மூதாதையர்கள்
ஆனை பிடிக்கும் பணிக்கர்கள்.
என்னுடைய சின்னப் பருவத்தில்
ஏறாவூரிலிருந்த
எனது சாச்சா நெய்னா அவர்கள்
ஆனைக் குட்டியைப்
பிடித்து வந்து அதில்
என்னையேற்றி ஆனைக்குட்டியின்
வாலிலுள்ள
மயிர்களையெல்லாம்
பிடுங்கி எனது கழுத்திலும்
காலிலும் கையிலும் கட்டி,
ஊர்வலம் எடுப்பார்.
எங்களூரான மீராவோடையைச்
சுற்றி ஆனையில் எஸ்.எல்.எம்.
அமர்ந்திருக்கும்
காட்சி எப்படியிருக்கும்
என்று எண்ணிப்பார்.
ஒரு காகம் ஆனையில்
ஏறி அமர்ந்தால்
எப்படியிருக்கும்,
அப்படியிருந்திருக்கும்.
பெரும் வனங்களில்
ஆனை பிடிக்கும்
கலையை எனது தகப்பனார்
சின்ன வயதில்
எனக்கு அடுக்கடுக்காகச்
சொல்வார்.
அதை வைத்து ஒரு நாவல்
எழுத வேண்டுமென்ற எண்ணம்
எனக்குள்
கொழுந்து விட்டெரிவதும்
என்னுடைய பிறவிச் சோம்பல்
அதை அவ்வப்போது அணைத்து விடுவதுமாக
காலம்
கடத்தி வந்திருக்கிறேன்.
இப்பொழுது, 70 வயதை தொடப்
போகிறேன். 75 வயதில்தான்
சி.சு. செல்லப்பா 2000
பக்கங்கள் கொண்ட சுதந்திர
தாகம்
நாவலை எழுதி முடித்தார்.
ஒரு நம்பிக்கைக்காக இதைச்
சொல்லிக் கொள்வதைத் தவிர
வேறு வழியில்லை. கட்டாயம்
நீ சி.சு. செல்லப்பாவின்
வாடிவாசல் நாவலைப் படிக்க
வேண்டும். ஒரு சிறிய நாவல்.
தமிழில்
அந்தளவுக்கு கிளாசிக்கலாக
வேறொரு படைப்பு வரவில்லை என்பது என்னுடைய
அபிப்பிராயம்.
கடந்த ஒரு வார காலமாக,
உடல் மிகவும் பலவீனப்பட்டுப்
போனது. கொஞ்சம்
நம்பிக்கையும்
நம்பிக்கையீனமும்
கண்ணாமூச்சி காட்டுகிறது.
நம்மைச் சுற்றிய பெரும்
சுயநலம் நம்மைப்
போன்றவர்களுக்கு வாழ்க்கையின்
மீது பிடிப்பின்மையைத்
தந்தாலும் இந்த உலகம்
எவ்வளவு அற்புதமானது,
அதிலும் நமது குருநாதர்
வைக்கம் முகம்மது பஷீர்
சொல்வது போல் மரங்கள்
எவ்வளவு உயர்வானது,
எனவே உலகத்தைப்
பிரிந்தாலும் ஏனோ மரங்கைப்
பிரிய விருப்பமில்லை. நான்
எனது வாழ்நாளில் அதிக
மரங்களை நட்டிருக்கிறேன்.
அதிக
மரங்களுக்கு நீரூற்றி உயிர்வார்த்திருக்கிறேன்.
ஏக இறைவன் எனக்கு என்ன
தண்டனை தந்தாலும் மரங்களின்
பொருட்டு நிச்சயம் சுவர்க்கம்
கிட்டும் என்பதில் நூறு வீத
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இன்றைய இந்த உலகின்
மாசடைதலுக்கும்
சுற்றுச்சூழல்
இவ்வளவு மோசமாகப்
போனதற்கும் மரங்கள்
மீது மனிதன் கொண்ட
அசிரத்தையே காரணம்.
நேற்று ஒரு பெரிய அங்கர்
பெட்டியில்
ஒரு அறிவித்தலைப்
படித்தேன். அதுவும் சிங்கள
மொழியில். "ஒரு தொன்
காகிதங்களை உற்பத்தி செய்ய
நன்கு ஆரோக்கியமான
பதினேழு மரங்களை கொல்ல
வேண்டியிருக்கிறது".
எனவே, இந்தப்
பெட்டியை மறு சுழற்சிக்கு உட்படுத்துங்கள்
என்பதுதான் வேண்டுகோள். யார்
கவனத்திற் கொள்ளப் போகிறோம்?
முஸ்லிம் கிராமங்களென்றால்,
ஷொப்பிங் பேக்குகளாலும்
குப்பை கூழங்களாலும்
நிரம்பிக் கிடக்கும்
ஒரு சிறு பூமித்துண்டு.
கடிதம் எங்கோ போகிறது. நீ
கவிதை எழுதுவதை மட்டும்
பின்போட்டு விடாதே. சமையல்
கட்டு உன்னைத்
துரத்தினாலும்
வேறு சின்னச்சின்ன கவலைகள்
மோதினாலும்
உனது எழுத்துதான்
உனக்கு எல்லா வகையான
ஆறுதலையும் அளிக்கக்
கூடியது.
இந்த உலகில் உண்மையாக
வாழ்வதென்பது மிகக்
கஷ்டமானது. ஏராளம் இழக்க
வேண்டியது. இழந்தால்
எதையாவது பெறலாம்
என்பது விதி. ஆனால்,
உண்மையை இழந்து பெறுவதை விட
உண்மைக்கு உண்மையாக
இருந்து மறைந்து போவது மேலானது.
நம்மில் எத்தனை பேர் இந்த
அக்கினிப்
பரீட்சைக்கு ஆயத்தம்?
ஒரு சின்னச் சுயநலம்
நம்மிடம் வந்து நம்
சுயத்தை அடித்துக்
கொண்டு போவதைத்தான்
நாளாந்தம் நாம் காண்கிறோம்.
அல்லது நம்மைச்
சுற்றியிருப்பவர்கள்
நமக்குக் காண்பிக்கிறார்கள்.
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா
இந்த கவிதையைப் படித்த உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள பேஸ்புக்கில் லைக் கிளிக் பன்னி விடுங்கள். நன்றி.

0 comments :
Post a Comment