ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும் - எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு



அந்துவன்-
" ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும். இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவேதான் மக்கள் நலன்கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து வருகின்றன. இந்த அரசியலில் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார். அதன்மூலம் மலையகத்துக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன." என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களுக்கு கூடாரங்களும், கதிரைகளும் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரனின் தலைமையில் தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா போன்ற பகுதிகளில் இடம்பெற்றது.

தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சச்சிதானந்தன், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர்கள், தோட்ட தலைவர், தலைவிமார்கள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

" நானும், எமது தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் பிரதேச சபையில் இருந்துதான் மக்கள் பிரதிநிதித்துவ அரசியலை ஆரம்பித்தோம். அப்போது மக்கள் தமது பிரச்சினைகளை எம்மிடம் எடுத்துரைப்பார்கள். நாம் எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறி, தேவையான வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்வோம். இவ்வாறு நாம் மக்கள் சேவையாற்றியதால்தான் எம்மை மாகாணசபை முதல் பாராளுமன்றம்வரை மக்கள் அனுப்பி வைத்தனர்.

எனவே, உங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துக்கூறவும் பிரதிநிதி ஒருவர் அவசியம். அதனால்தான் இப்பிரதேசத்திற்கு துடிப்பான இளைஞர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். எனவே, அவருக்கு ஆதரளித்து, அவர்மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமானதொரு ஸ்தாபனமாகும். அதன்பொதுச்செயலாளர் பலமான அமைச்சராக இருக்கின்றார். எனவே, எம்மால்தான் மலையகத்துக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். மக்கள் மென்மேலும் ஆணை வழங்கினால் எமது பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கப்படும். அதற்கு இந்த உள்ளாட்சிசபைத் தேர்தலை சிறந்த களமாக பயன்படுத்திக்கொள்ளவும்.

நாட்டை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். எவரும் முன்வரவில்லை. ரணில் விக்கிரமசிங்கதான் அச்சமின்றி பொறுப்பேற்றார். தற்போது நாட்டை படிப்படியாக மீட்டுவருகின்றார். உலக நாடுகள் அவரை ஆதரிக்கின்றன. அவரை நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் நிலைமை மோசமாக இருக்கும். நாமும் மக்கள் பக்கம் நின்று - மக்கள் சார்பில் அவரை ஆதரித்தோம். அவரின் அரசில் எமது பொதுச்செயலாளர் அமைச்சராக இருக்கின்றார். பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார். அண்மையில்கூட உலக வங்கியின் ஆதரவுடன், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இலவச சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்." - என்றார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :