எதிர்க்கட்சி அரசியல் மு.கா.வுக்கு புதிதல்ல


எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி-
னாதிபதி தேர்தல் முடிவடைந்த கையுடன், பல்வேறு விடயங்கள் சமூகங்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன.
புதிதாக தெரிவுசெய்ப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு சிறுபான்மை சமூகம் வாக்களிக்கவில்லை என்ற வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை தவறாக வழிநடத்திவிட்டதான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவில் ஆட்சிக்கு வந்துள்ள பொதுஜன பெரமுன,சிறுபான்மை சமூகத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்ற அச்சம் இன்று தமிழ்,முஸ்லிம் மக்களிடையே தொற்றியுள்ளது. அதுவும், முஸ்லிம் கட்சிகளை எங்களது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்ற அறிவிப்பு இன்னும் பீதியைக் கிளப்பியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பொதுஜன பெரமுனவுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. சஜித் பிரேமதாசவை வேட்பாளராக கொண்டுவந்த கட்சி என்ற வகையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர்வதற்கான தீர்மானம் கடைசியாக நடைபெற்ற கட்சியின் உயர்பீடக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை பல தடவைகள் எதிர்கட்சி அரசியலை முன்னெடுத்திருக்கிறது. அதிகாரங்களுக்காக ஆளும் தரப்பை சார்ந்திருந்து சரணாகதி அரசியலை மேற்கொள்ளவில்லை. கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களை எடுத்துக் கொண்டால் வெற்றியோ, தோல்வியோ ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கின்ற வேட்பாளரையே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வந்திருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படும்போது, வெற்றிபெறும் எதிர்த்தரப்பு ஆட்சியாளர்கள் கட்சியை பழிவாங்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைகளுக்கு விலைபேசி வாங்கிய சம்பவங்கள் பலவுள்ளன. பதவி ஆசைகாட்டி அவர்களை தங்கள்பக்கம் இழுத்து, புதிய கட்சிகளை ஆரம்பித்து அவர்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கி முஸ்லிம் காங்கிரஸை அழிக்கும் செயற்பாடுகளை கட்சிதமாக முன்னெடுத்தார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிர்கட்சி அரசியலில் சமூகத்தின் காத்திரமான குரலாக முஸ்லிம் காங்கிரஸ் ஒலித்ததையும், முஸ்லிம் சமூகத்தினால் கட்சி பலப்படுத்தப்பட்டதையும் பலரும் நன்கறிவார்கள். எதிர்க்கட்சி அரசியலில்தான் முஸ்லிம் காங்கிரஸ் அபார வளர்ச்சியடைந்தது என்றாலும் மிகையாகாது.
தற்போதைய ஜனாதிபதி தெரிவிலும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரமேதாசவை ஆதரிக்க முன்வந்தது. அத்துடன் அவரின் வெற்றிக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தன்னை முழுமையாக அர்பணித்து செயற்பட்டார். துரதிஷ்டவசமாக பெரும்பான்மை சமூகம் கணிசமான வாக்குகளை வழங்கவில்லை என்பதால் சஜித் பிரமேதாஸ தோல்வியை தழுவினார்.

இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற சிலர் முஸ்லிம் சமூகத்தை ரவூப் ஹக்கீமுக்கு எதிராக திசைதிருப்பும் நோக்கில் கொந்தராத்து வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். பெரும்பான்மை சமூகத்தின் ஏகமனதான தீர்மானத்துக்காக, சிறுபான்மை சமூகத்தின் தலைவரை குறைகூறுகின்ற இழி செயலுக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளமை மிகவும் வேதனையான விடயமாகும்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டும் என்று கூறிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மீண்டும் தேசியப்பட்டியல் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பொதுஜன பெரமுனவை ஆதரித்திருந்தார்கள். சுயநலனுக்காக புதிய கட்சி தொடங்கிய இவர்கள், ரவூப் ஹக்கீமை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே அன்று வெறுத்தவர்களை இன்று ஆதரிக்கின்றனர்.

ஆனாலும் இவர்களினால் முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகளை மொட்டு அணிக்கு பெற்றுக் கொடுக்கமுடியாமல்போனது. இவர்கள் மக்கள் ஆதரவில்லாதவர்கள் என்பது அவர்களது பிரதேச தேர்தல் முடிவுகளிலிருந்தே தெளிவாக தெரிகின்றது. முஸ்லிம் மக்களின் அதிக ஆணையைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை இவர்களால் அசைக்கமுடியாமல் போனது கட்சியின் பலத்தை நிரூபித்துக்காட்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை எதிர்த்து, தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய இவர்கள் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். எங்களுடன் கலந்துரையாடாமல், ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சு பதவி வழங்கமாட்டாது என்பதால் அவர் எதிர்க்கட்சி அரசியல் செய்யட்டும் என்றம் அறிக்கை மிகவும் வேடிக்கையாகனது.

முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சு பதவிகளின்றி எதிர்கட்சி அரசியல் செய்த காலத்தில்தான் அபார வளர்ச்சியடைந்ததை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அமைச்சு பதவிகள் இல்லாவிட்டால், அழிந்துபோவதற்கு இது பணத்தினால் வளர்க்கப்பட்ட கட்சியல்ல. முஸ்லிம்களின் உதிரத்தினால், தாய்மார்களின் கண்ணீரால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியின் இருப்பை எந்த அமைச்சு பதவிகளினாலும் உரசிப்பார்க்க முடியாது.
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப், 1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரமேதாசவுக்கு மறைமுக ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெறச் செய்தார். பின்னர் அடுத்துவந்த பொதுத் தேர்தலில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்தபோதிலும், ஆளும் கட்சியை இயக்குகின்ற அளவுக்கு அவரிடம் திராணியிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது.
அதேபோன்று 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு தன்னை அழைத்தால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவேன் என்ற அவரின் நிலைப்பாடும் அன்றைய சூழ்நிலையும் அவரின் தெளிவான அரசியல் நகர்வை எமக்கு நினைவுபடுத்துகின்றன.
எதிர்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சியை உருவாக்கும் வல்லமை முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்தது. அதேநேரம் மர்ஹூம் அஷ்ரஃப் எதிர்க்கட்சி அரசியலையும், ஆளும்கட்சி அரசியலையும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். பெரும் தலைவரின் காலத்தில் அமைச்சு பதவிகளின்றி எதிர்க்கட்சியில் இருந்தபோது, கட்சி வளர்ச்சிப் பாதையில் சென்றது தற்போதைய சூழ்நிலைக்கு நல்லதொரு உதாரணமாகும்.
அதேபோலே தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் காலத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்தபோது மக்கள் ஆதரவு பெருகிக் காணப்பட்டது. கட்சியை அழிக்கின்ற அளவுக்கு பல சவால்கள் வந்தபோதும், போராளிகள் தலைவரின் கரங்களை பலப்படுத்தி கட்சியை பாதுகாத்ததையும் யாரும் மறக்கமுடியாது.
இன்று சில கட்சிகளின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக இருப்பது அமைச்சுப் பதவிகள்தான். பதவிகள் இல்லாவிட்டால் கட்சிகள் மரணித்து போய்விடும் நிலைமையில் இருக்கின்றன. ஆனால், சமூகத்துக்க தொடங்கப்பட்டு போராளிகளின் குருதிகளினாலும் தியாகத்தினாலும் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸுக்கு அப்படியானதொரு நிலைமை இல்லவே இல்லை.

தேர்தலில் யார் வெல்வார், யார் தோற்பார் என்பதற்கு அப்பால், சிறுபான்மை சமூகத்தின் நலன்கருதியும், சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் முஸ்லிம் காங்கிரஸ் சமஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியது. இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை தடுத்து, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் தலைவரை தூரநோக்கு சிந்தனையில் சிறுபான்மை சமூகம் ஆதரித்தது.
இந்த தேர்தலில் சிறுபான்மை சமூகம் தெளிவானதொரு செய்தியை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. இதிலிருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மை சமூகம் மேற்கொண்ட இந்த தீர்மானம் மிகச்சரியானது என்பதை, பெரும்பான்மை சமூகம் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -