பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அப்துல் ஹபீஸ்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை பிற்பகல் கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் நடாத்திய பாராளுமன்ற பகிஷ்கரிப்பு சம்பந்தமான அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தவையாவன,



நாங்கள் இன்று பாராளுமன்றத்தை அடையாள ரீதியாக பகிஷ்கரிப்பது என்ற முடிவுக்கு எமது கட்சியின் பாராளுமன்ற குழு வந்திருக்கிறது. இதற்கான அடிப்படை காரணம், தர்கா டவுண், பேருவளை, அளுத்கமை, துந்துவை வெயங்கல்லை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கின்ற இனவாத அசம்பாவிதங்களுக்கு அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதனால் ஆகும். சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் தவறியிருக்கிறார்கள். என்ற விசயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது உச்ச கட்ட அதிருப்தியை தெரிவிக்கின்ற அதேவேளை இன்றைய பிரேரணை வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்துகொள்வதற்கு இன்று பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

அரசாங்கம் இதற்கு அப்பாலும் இந்த நாட்டில் வாழும் குறிப்பாக சிறுபான்மை இனத்தவருக்கு இருக்கின்ற அச்சுறுத்தல் சூழ்நிலையை அகற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதோடு, இந்த அசம்பாவிதங்களுக்கு காரணமாக அமைந்த தரப்பினரையும் கைது செய்கின்ற முயற்சியை சட்டத்திற்கமைவாக, மனப்பூர்வமாக செய்வதற்காகும். 

அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்ளுமா என்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம். அரசாங்கம் இவ்வாறான விடயங்களில் அலட்சியமானதும் அசமந்தமானதுமான போக்கையே கையாண்டது என்பது இந்த பொதுபலசேனா போன்ற அமைப்புகளுக்கு சுதந்திரமான தங்களுடைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது என்பது மிக ஆபத்தானது என்பதை இந்த சம்பவங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எனவே இவ்வாறான ஒரு நிலவரம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் போதிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக எங்களது பலத்த கண்டனத்தையும், அதிருப்தியும் வெளியிடும் நோக்கத்தில் தான் நாங்கள் இன்றைய பாராளுமன்ற பிரேரணையில் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும், பகிஷ்கரிக்கவும் தீர்மானித்தோம். 


அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் இருவர் அதாவது, சிறுபான்மையினர் சம்பந்தமான விசேட பிரதிநிதி, மற்றும் சமய நல்லிணக்கம் சம்பந்தமான விசேட பிரதிநிதி ஆகியோர் இலங்கைக்கு வருவதற்கான விருப்பத்தை தெரிவித்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் அரசாங்கம் அவர்கள் வருகையை அங்கீகரிக்கவில்லை அதற்கான அவகாசத்தை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. 

இனிமேலும் அவர்கள் வருவதை தாமதப்படுத்துவது அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை பாதிக்கச் செய்யும் என்ற காரணத்தினாலும், இந் நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் மத நல்லிணக்கம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லையென்பதை வெளிப்படையாக காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் இதனைச் செய்யலாம். அந்தப் பிரதிநிதிகள் இருவரும் வருவதற்கு அரசாங்கம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை உறுதியாக வேண்டிக்கொள்கின்றோம் என்றார். 

அத்துடன், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ஞானசார தேரரின் கூட்டத்தை நியாயப்படுத்தி பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டித்ததோடு பொலிஸ் மா அதிபர் நல்ல மனிதராக தம்மால் புகழ்ந்து கூறப்பட்ட போதிலும், அவர் சிலரை திருப்திபடுத்துவதற்காக வித்தியாசமான கருத்தை கூற நேர்ந்திருக்கிறது என்றார். உண்மையில் அன்று தேரர் கூட்டியது சமய நிகழ்வு அல்லவென்றும், அது இனக் கலவரத்தை தூண்டுவதற்குமே என்றார். 

ஊடகவியலாளர் எழுப்பிய வேறு கேள்விகளுக்கும் அவர் உரிய பதில்களை அளித்தார். 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி, எம்.பி, எச்.எம்.எம். ஹரிஸ், எம்.பி, ஏ.எஸ்.எம். அஸ்லம் எம்.பி, எம்.எஸ். தௌபிக் எம்.பி, முத்தலீப் பாவா பாருக் எம்.பி, கிழக்கு மாகாண அமைச்சரும், கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :