ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்வும் கயவர்களின் பின்னணியும்

முஹம்மது நியாஸ்-

டந்த 15.06.2014 அன்று களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம நகரில் நடைபெற்ற பொதுபல சேனா எனும் பௌத்த பயங்கரவாத அமைப்பின் இனவாத மாநாட்டையடுத்து இடம் பெற்ற அவ்வமைப்பின் ஊர்வலத்தில்
ஏற்பட்ட வன்முறைகளால் அளுத்கம,பேருவளை,வெலிப்பன்ன மற்றும் அதனையண்டிய பிரதேசங்களிலுமுள்ள சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு,நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகாயமுற்றதோடு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கோடிக்கணக்கான சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான ஓர் சமூகத்தின் மீது அரச படையினரின் அங்கீகாரத்துடனும் மேற்பார்வையுடனும் ஓர் பட்டவர்த்தமனான இனச்சுத்திகரிப்பொன்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தைப்பொறுத்த வரையில் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டில் அரச அங்கிகாரத்துடன் கொப்பளிக்கப்பட்டு வருகின்ற பௌத்த பயங்கரவாத செயற்பாடுகளின் அதிகபட்ச அடந்தேறலாக இது இருந்தபோதிலும், எதிர்வரும் காலங்களில் இதனை விடவும் கொடூரமான பல வன்செயல்கள் நாட்டின் பல்வேறுபட்ட பாகங்களும் நடைபெறாது என நாட்டின் எந்தவொரு பொதுமகனுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ ஏன் பாதுகாப்பு அமைச்சின்; செயலாளருக்கோ கூட உத்தரவாதம் அளிப்பதற்கு முடியாது என்பதும் இங்கே வெள்ளிடை மலையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதுபல சேனா என்னும் பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இந்நாட்டின் இறைமைக்கு ஈனத்தனமாக வேட்டு வைத்து விளையாடி வந்திருக்கின்ற போதும் இந்நாட்டின் அரச தரப்புக்கள் அவற்றை ஊக்குவித்து உற்சாகமளித்தனவே தவிர அவ்வமைப்பைச் சேர்ந்த காடையர்களும், கைக்கூலிக் கொள்ளைக் குண்டர்களும் மேற்கொண்ட பள்ளிவாசல் தகர்ப்புக்கள், இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள், வசைபாடல்கள், இனவாத மாநாடுகள் போன்ற இன்னபிற தேச விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக இதுநாள் வரைக்கும் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும் வரலாறுகள் கிடையாது.

இப்பயங்கரவாத அமைப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கெதிராக தனது வன்முறைகளையும் வசைபாடல்களையும் நாட்டின் பல பாகங்களிலும் பகிரங்கமாகக் கட்டவிழ்த்து வருகின்றபோதும் கூட இதுவரையில் அவற்றுக்கெதிராக இவ்வரசாங்கம் எதுவித மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது.

மாறாக, பொதுபல சேனா என்ற இப்பயங்கரவாத அமைப்பின் அலுவலகங்களை இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளரே தென்னிலங்கையில் உத்தியோகபூர்வமாக நிர்மாணித்தும், திறந்து வைத்தும் அவர்கள் நடாத்துகின்ற மாநாடுகள் மற்றும் இன்னபிற நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பதன் மூலமும் அவ்வமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகள் அனைத்திற்கும் களமமைத்துக் கொடுப்பவர்களாகவே இந்த நாட்டின் பொறுப்புமிக்க தலைவர்கள் இந்நாள் வரைக்கும் செயற்பாட்டு வந்துள்ளார்கள்.

மேலும்,இப்பயங்கரவாத அமைப்பினால் முஸ்லிம்கள் மீது அடந்தேறப்படுகின்ற வன்முறைகள் தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகள் யாரேனும் பாதுகாப்புத் தரப்புக்களின் உயர்பீடங்களுக்குக் கொண்டு செல்கின்ற வேளையில் “பொதுபல சேனா என்ற அமைப்பினர் ஓர் சிறு குழவினர். அவர்கள் இன்னும் சிறிது காலத்திற்குள் இல்லாமல் போய்விடுவார்கள்” என்று ஆரூடம் கூறி அறுதல்படுத்தியே முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியும் வந்துள்ளனர்.

இலங்கை நாட்டில் சமூக நலன்களில் அக்கறை செலுத்தி காலாதி காலமாக மனிதாபிமான நடவடிக்கைகள் பலவற்றிலும் ஈடுபட்டு அதனோடு இஸ்லாமிய மார்க்கத்தையும் பிரச்சாரம் செய்து வருகின்ற தஃவா அமைப்புக்களை நோக்கி பலவாறான கோணங்களிலும், பலதரப்பட்ட வகைகளிலும் தமது விசாரணைகளை முடுக்கிவிடும் இலங்கை நாட்டின் காவல்துறையினர், சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பல்லின மக்களின் சமாதான வாழ்வை குழப்பியடித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் குழப்பத்தை,அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற இந்த பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை கண்டுகொள்ளாமலேயே காலங்கடத்தி வருவதானது, இந்நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் இறைமையினையே ஓர் முறை மீள் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி நிற்கிறது.

ஓர் இஸ்லாமிய தஃவா அமைப்பு மேற்கொள்கின்ற இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி தொடர்பாக துருவித் துருவி விசாரித்தறிந்து அதன் பின்னர் அதிகபட்ச கோரிக்கைகளுடனும், வேண்டுகோள்களுடனும், எச்சரிப்புக்களுடனும் வழங்கப்படுகின்ற பொலிஸ் அனுமதிகள் இந்த பொதுபல சேனா என்னும் இனவாதக் காடையர்கள் நடாத்துகின்ற ஓர் சகோதர சமூகத்தின் மீதான தனது வக்கிர சிந்தனையை தீத்துக்கொள்வதற்காக மேற்கொள்கின்ற மாநாடுகள், ஊர்வலங்கள் போன்ற துவேசதார செயற்பாடுகளுக்கு மாத்திரம் காதும் காதும் வைத்தது போன்று பொலிஸ் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அனுமதிகள் வழங்கப்படுவது என்பது இலங்கை நாட்டின் அரச நிருவாகத்துறையின் கோமாளித்தனமான, கீழ்த்தரமான, பாரபட்சமான, இனவாதத்தை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளையே பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக்காட்டுவதாகவும் உள்ளன.

இன்னும் இலங்கை நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் கடந்த காலங்களில் இந்நாட்டில் ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலைகளின் போதுகூட ஏனோ தானுண்டு.. தன்பாடுண்டு என இருந்தவர்கள் அல்லர். மாறாக இந்நாட்டில் வேரூன்றியிருந்த விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது இலங்கை அரசின் பக்கம் சார்ந்திருந்தவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களாவர். மட்டுமல்லாது, இப்போது அரச அதிகாரங்களில் வீற்றிருக்கின்ற ஜனாதிபதியின் குடும்பமே ஐ.நா. மன்றம் என்ற சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்னும் இஸ்லாமிய அமைப்பு முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கும் சென்று அங்குள்ள தலைவர்களிடம் இலங்கை நாட்டின் தலைமைகளுக்காக கெஞ்சி மன்றாடி அத்தலைமைகளை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டிலிருந்து மிகவும் இலாவகமாக மீட்டெடுத்த பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறுகளும் இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமே சொந்தமான் ஒன்றாகும்.

அவ்வாறிருக்க நேற்று முளைத்த காளான்களான இந்த பொதுபல சேனா போன்ற இனவாத சக்திகளை தம்மை மீட்டெடுத்த முஸ்லிம் சமூகத்துக்கெதிராகவே அரங்கத்தி;ல் ஆடவைத்து அழகுபார்க்கின்ற இந்த அரசாங்கத்தின் ஈனத்தனமான செயற்பாடானது “ஆற்றைக்கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி” என்கின்ற நன்றி கெட்டதனத்தையே பகிரங்கமாக எடுத்தியம்பிக் கொண்டிருகின்றது என்றால் அது எந்தவகையிலும் தவறாகாது.

அத்தோடு கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்வைத்த ஓர் வாக்குறுதியும் இங்கே நினைவு கூறத்தக்கதாகும். அதாவது “எனது அரசாங்கத்தில் இனி ஒருபோதும் எந்தவொரு பள்ளிவாயிலுக்கும் சேதமிழைக்கப்பட மாட்டாது. இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அவர்களினது வாழ்வாதார, மற்றும் மதரீதியான உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்ற பொறுப்புமிக்க வாக்குறுதியே அதுவாகும்.

ஆனால் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையிடுவதற்காக ஜனாதிபதி அவர்களாலும்,அவரின் பிரதேச,மாவட்ட, மாகாண அரசியல் வியாபார முகவர்களாலும் முன்வைக்கப்பட்ட அந்த வாக்குறுதியும் இப்போது காற்றில் பறக்கவிடப்பட்ட ஒன்றாகவே மாறிப்போயுள்ளது.

இக்கலவரத்திற்குக் காரணமாக அமைந்த பொதுபல சேனா அமைப்பின் இனவாத மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து பேருவலையிலுள்ள சுமார் ஐந்து முஸ்லிம் அமைப்புக்கள் கையெழுத்திட்டு பொலிஸ் மாதிபருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் மிகவும் தெளிவாகவே இக்கலவரம் பற்றிய அச்சம், எதிர்வுகூறல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

“பொதுபல சேனாவின் மாநாட்டிற்கு இங்கே அனுமதியளிக்கப்பட்டால் ஒரு பெரும் கலவரமே வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவனுமதியை இரத்து செய்யுங்கள்.” என அதில் மிக மன்றாட்டமாகக் கோரப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்தும் இனவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அடந்தேறல்கள் அத்தனைக்கும் ஒட்டு மொத்த அங்கீகாரம் கொடுத்துவருகின்ற இந்நாட்டின் காவல்துறை அக்கோரிக்கையினை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளவில்லை.

ஒரு குறிப்பிட்ட அமைப்பினால் பகிரங்க மாநாடு ஒன்று நடாத்துவதற்காக பொலிஸாரிடம் அவ்வமைப்பு அனுமதி கோருகின்றபோது அப்பிரதேசத்திலுள்ள மக்களிடம் பொலிசார் விசாரணைகளை நடாத்துவதுண்டு. குறித்த அம்மாநாடு தமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என அப்பிரதேசவாசிகள் கருத்துக் கூறினால் அம்மாநாடு வேறொரு இடத்திற்கு மாற்றப்படும். அல்லது இரத்து செய்யப்படும். ஆவ்வாறுதான் காத்தான்குடியிலும் சில மாதங்களுக்கு முன்னால் மார்க்கட் வீதியில் நடாத்துவதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த ஒரு மார்க்கப் பிரச்சாரக் கூட்டம், பின்னர் பிரதேச செயலக வீதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் இங்கே இம்மாநாட்டின் பின்விளைவுகள் தொடர்பில் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கே பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிக்கை சமர்ப்பித்தும் அவ்வறிகையினை கண்டுகொள்ளாது அனுமதி வழங்கி இனவாதத்தை ஊக்குவித்த காவல்துறை, நடைபெற்ற வன்முறையின்போதும் அந்த இனவாதக் காடையர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கி பொதுமக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் விடயத்தில் அயர்ந்து தூங்கி அல்லது எங்கோ ஓடி ஒளிந்து தனது கையாலாகாத்தனத்தை நிரூபித்தது.

எனவே மேற்குறித்த இவ்வாறான நிகழ்வுகளையும், அவ்வப்போது இந்நாட்டில் நிகழ்ந்து வருகின்ற இனவாத செயற்பாடுகளையும் ஆதாரமாக வைத்து பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளுக்கும், இனரீதியான வன்முறைகளுக்கும் இலங்கை அரசாங்கமே நேரிலும், திரைமறைவிலும் தனது உதவி, ஒத்தாசைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது என்பது வெள்ளிடைமலையாக நிரூபணமாகிறது. ஆனால் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காக “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகின்ற” கதையாக அவ்வப்போது முஸ்லிம் சமூகத்திற்கான அறுதல் வார்த்தைகளாக சில கதையலங்காரங்களை கட்டவிழ்த்துவிடுவதும் இந்த அரசாங்கத்தின் வாடிக்கையான வியாபாரமாகவே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.-இந்த கட்டுரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.LM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :