ஒலுவில் துறைமுகம் திறக்கமுன்னர் காணிகளின் உரிமயாளர்களுக்கு நஷ்டயீடு வழங்கவும்

( எஸ்.அஷ்ரப்கான் )

லுவில் துறைமுக திறப்பு விழாவிற்கு முன்னர் அத்துறைமுக அபிவிருத்திக்காக பெறப்பட்ட காணிகளின் சொந்தக்காறர்களுக்கான உரிய நஸ்டஈட்டினை பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காணிகளை இழந்த மக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அச்சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம். அன்ஸார்
கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகத்தை
விரைவில் திறக்கும்படி திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால்
காசீம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து மிகவிரைவில் அது
திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஒலுவில் துறைமுக திறப்பு விழா என்பது பிரதேச மக்களுக்கு பாரிய
நன்மைகளை ஈட்டித்தரும் நல்ல விடயம்தான். இதற்காக முயற்சி எடுக்கும்
பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசீம் பாராட்டப்பட வேண்டியவர் என்றாலும்,
இந்த ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக தங்களது காணிகளை இழந்து இதுவரை
எதுவித நியாயமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கும் விடயத்தையும்
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர தவறிவிட்டார். பிரதேச அரசியல்வாதிகள்
யாருமே எமது நஸ்டஈடு விடயத்தில் இறுதிவரை குரல்கொடுத்து எமக்கு தீர்வை
பெற்றுத்தர முன்வராமை மிக மனவேதனையளிக்கிறது.

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக 2008 ஆம் ஆண்டு 48
குடியிருப்பாளர்களின் காணிகள் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டு தற்போது 5
வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரையில் உரிய நஸ்டஈடு கிடைக்கவில்லை.
மேற்படி சுவீகரிக்கப்பட்ட காணிகளில் 32 பேர்களின் காணிகளுக்கு 2009 ஆம்
ஆண்டு அரச விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நஸ்ட
ஈட்டுத் தொகையை இலங்கை துறைமுக அதிகார சபை ஏற்றுக்கொள்ள மறுத்ததன்
காரணமாக ஏற்பட்ட இழுபறி நிலையினால் காணி இழந்தவர்களுக்கு இதுவரையிலும்
நஸ்டஈடு கிடைக்கவில்லை. அவர்கள் உளவியல், பொருளாதார ரீதியில்
பாதிக்கப்பட்டு இது விடயத்தில் விமோசனம் கிடைக்காதா ? என்ற ஏக்கத்தில் பல
பிரதேசங்களிலும் கஸ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை சம்மந்தமாக அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மௌனிகளாகவே உள்ளனர். ஆனால்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ. ஹஸனலியால் மாத்திரம் கடந்த 2012.11.10 ஆம்
திகதி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2013.04.01 ஆம் திகதி பத்தரமுல்லை காணி, காணி அபிவிருத்தி
அமைச்சில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற காணிப்பிரச்சினைகள்
சம்மந்தமாக ஆராயும் கூட்டத்தில் ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக
காணிகளை இழந்தவர்களுக்கு துரித கதியில் நஷ்டஈடு வழங்குமாறு ஜனாதிபதி
பணித்திருந்தார்.

இது விடயமாக அண்மையில் துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரியிடம்
வினவியபோது, நஷ்டஈடு வழங்கல், பரிசீலனை செய்தல் சம்மந்தமாக துறைமுக
அதிகார சபையின் சட்டப்பகுதிக்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,
அவ்வறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேபோன்று கடந்த 5 வருட காலமாக சாக்குப்போக்குகள் சொல்லப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலுவில் துறைமுக திறப்பு விழா விடயத்தில் அக்கறை எடுக்கும்
அரசியல்வாதிகள் அதனால் காணியிழந்து நிர்க்கதியாகியிருக்கும் மக்களின்
நஷ்டஈட்டையும் திறப்பு விழவிற்கு முன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

நிர்மானிக்கப்பட்ட கட்டியடங்களை திறந்து வைப்பது பெரிய விடயமல்ல.
சமூகத்திலிருக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை இனம்கண்டு அதனை தீர்க்க
முனைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க முன்வருவதே
மக்கள் சார்ந்த ஒரு அரசியல்வாதியின் தலையாய கடமையாகும். இதனை புரிந்து
கொண்டு செயலாற்ற எமது அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

அத்துடன், காணி இழந்தோருக்கான நஸ்டஈடு வழங்குவதில் உரிய அதிகாரிகள் மனித
நேயத்துடன் நடந்துகொள்ளவேண்டும். நஷ்டஈட்டுத் தொகையை தீர்மானிப்பதில்
காணி உரிமையாளர்களுடன் காணி மதீப்பீடு சம்மந்தமாக கலந்துரையாடி ஒரு
முடிவுக்கு வர வேண்டும். அப்போதுதான் எங்களின் அபிப்பிராயங்களும்
உள்வாங்கப்பட்டு எமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். இதற்காக உரிய
நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அவர்கள் முன்வர வேண்டும். தங்கள் மூலமாக
பாதிக்கப்பட்ட எங்களுக்கு நியாயமான தீர்வு வர வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பாகும் என்றுமுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :